வழக்கமாக தனது பிள்ளைகளின் கல்வி விவகாரங்கள் தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்கும் ஓர் இளம் தாய், எனக்கு அழைப்பு எடுத்திருந்தார்.
"ஸல்மா இப்போ நாலாம் வகுப்பு படிக்கிறா. அடுத்த வருஷம் ஸ்கொலர்ஷிப் பரீட்சை எழுத வேணுமே. ஆனால் அவ ஸ்கூல் விட்டு வந்து சாப்பிட்டதும் தூங்கப் பார்க்கிறா. டியூஷன் வகுப்புக்குப் போக முடியாது என அடம் பிடிக்கிறா. இது தினமும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" என்றார் அந்தப் பெண்.
"அவ சின்னப் பிள்ளை. அவக்கு ஓய்வும் வேண்டுமே. அவ நன்றாக படிக்கிறா தானே. ஏன் இப்படி வற்புறுத்தி இந்த நேரத்தில் டியூஷன் வகுப்புக்கு அனுப்புறீங்க?" என்று கேட்டேன்.
"உண்மைதான் எனக்கும் விளங்குது. ஆனால் இந்த வகுப்புக்கு அனுப்பாவிட்டால் டீச்சரிடம் தப்ப முடியாதே... வகுப்பிலும் பிள்ளை கஷ்டப்படுவா..." என்று இழுத்தார் அவர்.
"யார் டீச்சர்? ஏன் அப்படி? " என்று அதிகம் யோசிக்காமலே கேட்டேன்.
"ஸல்மாவின் கிளாஸ் டீச்சர் தான்! அவ வாரத்தில் ஐந்து நாட்களும் வகுப்பு நடத்துகிறா. கட்டாயம் வரச் சொல்கிறா. போகாத பிள்ளைகள் வகுப்பில் புறக்கணிக்கப்படுறாங்க. பரீட்சைகளில் புள்ளியும் குறைவாகத்தான் எடுப்பாங்க. ஒவ்வொரு வகுப்புக்கும் தினமும் ஒரு பிள்ளையிடம் 100 ரூபாய் எடுக்கிறா... அது எங்களுக்கு கஷ்டமும்தான்" என்று விளக்கம் தந்தார் அவர்.
இது நம் நாட்டின் பல பாகங்களிலும் கேட்கக் கிடைக்கின்ற ஓர் அவலமான கதை. அரசாங்கப் பாடசாலைகளில் சேவை செய்யும் ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களை நடத்துவது சரியா, தவறா? என்ற கேள்விக்கு தீர்ப்புச் சொல்வது எனது நோக்கம் அல்ல. ஆனால் ஓர் ஆசிரியர் தனது பொறுப்பில் உள்ள பிள்ளைகளிடம் கட்டணம் அறவிட்டு மேலதிக வகுப்புகளை நடத்துவது, அற நெறிக்கு முரணானது, கேவலமானது என்பதைத்தான் இங்கு சொல்ல முனைகிறேன்.
நிரந்தரமான அரச ஊழியர் ஒருவரின் மொத்த துறைசார் உழைப்பும் அரசுக்கே உரியது; குறித்த அமைச்சுச் செயலாளரின் எழுத்து மூல அனுமதியின்றி அவர் வேறெந்த தொழில் முயற்சியிலும் தனது உழைப்பைப் பிரயோகிக்க முடியாது என்றே Establishment Code என்ற ஸ்தாபன சட்டக் கோவை கூறுகிறது. இது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது, எத்தனை பேரால் பின்பற்றப்படுகிறது என்பதெல்லாம் வேறான விஷயம்.
ஓர் ஆசிரியரின் பொறுப்பில் பிள்ளைகள் விடப்பட்டால், அந்தப் பிள்ளைகளின் கல்விசார் தேவைகளை வினைத்திறனோடு நிறைவேற்றிக் கொடுப்பது அந்த ஆசிரியருக்குக் கடமையாகி விடுகிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் தமது ஓய்வு நேரங்களையும், ஓய்வு நாட்களையும் தம்மிடம் வந்துள்ள பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக செலவு செய்கிறார்கள். அப்படியான நல்லாசிரியர்கள் ஒரு போதும் பிள்ளைகளிடமிருந்து தங்கள் மேலதிக முயற்சிக்காக கட்டணம் அறவிடவோ, வெகுமதிகள் எதிர்பார்க்கவோ மாட்டார்கள். இந்தப் பாரம்பரிய நடைமுறையை பெரும்பாலான ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பின்பற்றுகிறார்கள். சில ஆசிரியர்கள், தமக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்கும் மேலதிகமாக அந்தப் பிள்ளைகளின் நலனுக்காக உழைக்கிறார்கள்.
நான் GCE சாதாரண தரப்பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த காலத்தில் எமக்கு கணிதம் கற்பதற்கு ஆசிரியர் இருக்கவில்லை. இதை அறிந்து கவலையுற்ற எமது ஆங்கில மொழி ஆசிரியர், தாமாக முன் வந்து எமக்கு மாலை நேரக் கணித வகுப்புகளை இலவசமாக நடத்தினார். அப்படியான தியாகிகள் இன்றும் இருப்பதனால்தான் நம் நாடு ஓரளவேனும் கல்வியில் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
ஆனால் ஒரு சிலர், தம் செயலின் பாரதூரம் பற்றி உணராமலோ, பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாகவோ, தான் கற்பிக்க வேண்டிய பிள்ளைகளிடமே கட்டணம் அறவிட்டு மேலதிக வகுப்புகள் நடத்துகிறார்கள். இது தார்மீகத்துக்கு முரணான, இழிவான செயல் என்பதை அவர்கள் ஏனோ உணர மறுக்கிறார்கள்.
தான் கற்பிக்கும் பாடத்தில் சில பிள்ளைகள் பின்தங்கி இருந்தால், அவர்களுக்கு இலவசமாக மேலதிக வகுப்புகளை நடத்தி அவர்களது தரத்தை மேம்படுத்துவது அந்த ஆசிரியரின் கடமை. அப்படித் தன்னால் செய்துகொள்ள முடியாத நிலை இருந்தால், தகுதியான இன்னொருவரைக் கொண்டாவது அதற்குரிய ஏற்பாட்டச் செய்தல் வேண்டும். குறித்த வருடத்துக்குரிய பாடத்திட்டத்தைக் கற்பித்து முடித்துக் கொள்ள இயலாமல் போனாலும் இப்படியான ஒரு மாற்று ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
எந்தவொரு காரணம் கொண்டும், ஓர் ஆசிரியர் தான் கற்பிக்கும் பாடத்தில் தன் பொறுப்பில் உள்ள மாணவர்களுக்கு கட்டணம் அறவிட்டு மேலதிக வகுப்புகள் நடத்தக் கூடாது. அது ஆசிரியம் என்னும் புனித சேவையின் பெயருக்கே இழுக்காக அமையும். அது மட்டுமன்றி, அவ்வாறு செய்யும்போது அந்த ஆசிரியரால் பாடசாலை வகுப்பறையில் நடுநிலையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள முடியாமல் போகும். அவரிடம் ட்யூஷனுக்கு வராத பிள்ளைகள் எப்போதும் அவருடைய நடத்தையையும் தீர்வுகளையும் மாறு கண் கொண்டுதான் நோக்குவார்கள். அத்தோடு கட்டணம் செலுத்திப் படிக்கும் பிள்ளைகள், அந்த ஆசிரியரிடம் கூடுதலான உரிமைகளையும் சலுகைகளையும் எதிர்பார்ப்பார்கள். இது வகுப்பு முகாமையில் சீர்கேடுகளை ஏற்படுத்தும்.
© Hafiz Issadeen - 29/07/2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக