📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 3 ஜனவரி, 2025

தொடர்மொழிக்கு ஒருமொழி அறிவோம் 1 PDF இணைக்கப்பட்டுள்ளது

    நீண்ட பல தொடரால் உணர்த்தும்  பொருளை  ஒரு சொல்லைப் பயன்படுத்தி,  உணர்த்துவது மொழி நடைக்கு ஆற்றலும் வனப்பும் அளிக்கும். மேலும், அத்தகைய சொற்களின் அறிவு பொருட் சுருக்கம் எழுதும்போது மிகுந்த பயனளிக்கும்.

  1. சுதந்திரமற்று வாழ்பவர் - அடிமை
  2. அரண்மனையில் பெண்கள் வசிக்குமிடம் - அந்தப்புரம்
  3. ஒரு நூலுக்கு நூலாசிரியர் தவிர்ந்த பிறரால் வழங்கப்படும் உரை - அணிந்துரை
  4. அகர வரிசையில் சொற்களுக்குப் பொருள் கூறுவது - அகராதி
  5. தாய், தந்தையை இழந்தவன் - அநாதை
  6. முனிவர்கள் வாழுமிடம் - ஆச்சிரமம்
  7. ஆடு மேய்ப்பவன் - இடையன்
  8. தானும் உண்ணாமல் பிறருக்கும் கொடுக்காமல் இருப்பவன் - உலோபி
  9. வீண் செலவு செய்பவன் - ஊதாரி
  10. அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் ஆகியோர் - ஐங்குரவர்
  11. மட்பாண்ட வேலையைச் செய்பவன் - குயவன்
  12. கட்டட வேலை செய்பவன் - கொத்தன்
  13. சிறைத் தண்டனை பெற்றவன் -  கைதி
  14. ஒருவர் அல்லது ஒரு பொருள் தானே தன் கதையைச் சொல்லுதல் - சுயசரிதை
  15. மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லாதவன் - சுயநலவாதி
  16. மனைவியை இழந்தவன் - தபுதாரன்
  17. மரவேலை செய்பவன் - தச்சன்
  18. நடக்க இருப்பவற்றை முன்கூட்டியே கூறுபவன் - தீர்க்கதரிசி
  19. விசாரணை முடிவில் நீதிபதியால் வழங்கப்படுவது - தீர்ப்பு
  20. பேருந்து பயணச் சீட்டு வழங்குபவர் - நடத்துநர்
  21. கடவுள் இல்லை என்று வாதிடுபவன் - நாத்திகன்
  22. ஒன்றுபோல் இருக்கும் மற்றொன்று - போலி
  23. நூலாசிரியர் தாம் இயற்றிய நூலைப் பற்றிக் கூறும் உரை - முன்னுரை
  24. கணவனை இழந்தவள் - விதவை / கைம்பெண்
  25. தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவன் - வேட்பாளன்
  26. விலங்குகளை வேட்டையாடுபவன் - வேடன்
  27. ஒருவர் தன் உருவத்தை மாற்றிக் கொள்வது - வேடம்
  28. பகையுமின்று நட்புமின்றி நடுநிலையில் நிற்போர் - நொதுமலாளர்
  29. கடலும் வானமும் ஒன்றையொன்று தொடுவது போன்றது - தொடுவானம்
  30. நம்ப முடியாத கதை - கட்டுக்கதை
  31. அரசர்க்கெல்லாம் அரசன் - சக்கரவர்த்தி
  32. ஒரு நூலை வௌியிடுவோர் அந்நூலைப் பற்றிக் கூறும் உரை - பதிப்புரை
  33. பிறர் தன்னை இன்னாரென்று அறியாத வண்ணம் மக்கள் மத்தியில் வாழ்தல் - அஞ்ஞாதவாசம்
  34. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன - ஐம்பொறிகள்
  35. சுவை, ஔி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன - ஐம்புலன்கள்
  36. வௌிப்படைப் பொருளில் புகழ்ந்தும் மறை பொருளில் இகழ்ந்தும் கூறுவது - அங்கதம்
  37. யார் துணையுமின்றித் தானே தனித்து நின்று பகைவரை வெல்லும் திறன் படைத்தோன் - அசகாயசூரன்
  38. ஒரே சமயத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன் - அட்டாவதானி
  39. மாலையில் அல்லது இரவில் கூடும் சந்தை - அல்லங்காடி
  40. அறிஞர் பலர் கூடிய சபை நடுவே புதிதாய் ஆக்கப்பட்ட நூல் ஒன்றைப் படித்து, அச்சபை ஏற்றுக் கொள்ளச் செய்தல் - அரங்கேற்றம்
  41. உப்பின்றிச் சமைத்த பச்சையரிசிச் சாதம் - அவிசு
  42. பிறருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சொற்களையும் சொற்றொடர்களையும் சேர்த்துக் கவி பாடுதல் - அறம்பாடுதல்
  43. தபோதனர் வசிக்கும் இடம் - ஆச்சிரமம்
  44. கடவுள் இருக்கிறார் என நம்புபவன் - ஆத்திகன்
  45. வறியவர்க்கும் அங்கவீனர்க்கும் முதியோர்க்கும் உண்டியும் உறையுளும் அளித்து ஆதரிக்கும் இடம் - ஆதுலர்சாலை
  46. நிலத்தின் உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துருவில் அமைந்த உறுதி - ஆவணம்
  47. சபையில் சொல்லத் தகாத சொல்லை வேறொரு வாய்ப்பாட்டால் சொல்வது - இடக்கரடக்கல்
  48. உலகமும் உலகவின்பங்களும் மாத்திரமே மெய்யென்றும், கடவுளோ மறுமையோ இல்லையென்றும் வாதிடுபவன் - உலோகாயதன்
  49. பிற்காலத் தேவைக்காகச் சேமித்துப் பாதுகாக்கப்படும் பொருள் - எய்ப்பில் வைப்பு
  50. தனக்கே உரிமையாக முழுப் பொருளையும் அனுபவித்தல் - ஏகபோகம்
  51. கலை நிகழ்ச்சிகளை மேடையேற்றுவதற்கு முன்னர் சரி பிழை பார்த்துத் திருத்தும் நிகழ்ச்சி - ஒத்திகை
  52. உலக நடை அறிந்து ஒழுகுதல் - ஒப்புரவு
  53. சொத்தை அனுபவிக்கும் உரிமையுடன் கூடிய அடைமானம் - ஒற்றி
  54. பேணிப் பாதுகாத்துத் தருமாறு ஒருவரை இன்னொருவரிடம் ஒப்படைத்தல் - ஓம்படை
  55. அரசனுடைய சபா மண்டபத்தில் அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலிய பரிவாரத்தினர் சூழ இருக்கும் இருக்கை - ஓலக்கம்
  56. அரசன் எழுந்தருளும்போது அவனது விருதுப் பெயர், வெற்றி முதலியவற்றைக் கூறல் - கட்டியம்
  57. பகையரசருக்குக் கொடுக்கும் திறைப் பொருள் - கப்பம்
  58. ஒருவர் முதன் முதலில் இயற்றிய பாடல் - கன்னிக் கவிதை
  59. அரச குமாரன் காட்டிற் சென்று முதன் முதல் நிகழ்த்தும் வேட்டை - கன்னி வேட்டை
  60. கோட்டையைச் சூழ்ந்து அரணாய் அமைந்துள்ள பெருங்காடு - காவற்காடு
  61. அரசன், உபாத்தியாயன் (ஆசிரியன்), தாய், தந்தை, தமையன் என்போர் - ஐங்குரவர்

பகுதி 2 இன் இணைப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
Tamil grammar | Thodar mozhikku Oru Mozhi | Thodar molikku oru moli | Thamilsh Shudar 
---------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக