வினா இதுதான்.
A.1.விபுலாநந்தா கல்லூரி.
2.விபுலானந்தா
கல்லூரி.
3.விபுலாநந்தாக்
கல்லூரி.
4.விபுலானந்தாக்
கல்லூரி.
B.1.விக்கினேஸ்வரா கல்லூரி.
2.விக்னேஸ்வரா
கல்லூரி.
3.விக்கினேஸ்வராக்
கல்லூரி.
4.விக்னேஸ்வராக்
கல்லூரி.
என்றாலும், ~😘😘🇳 🇮 🇫 🇱 🇦 🇳 🇰 🇭 🇦 🇳 😍😍 என்ற ஆசிரியர் தனது விடையாக, இரண்டு வினாக்களுக்கும் நான்காவது விடையைத் தெரிந்திருந்தார். அதாவது, வினைத்தொகை தவிர்ந்த தொகைச் சொற்களில் பெரும்பாலும் வல்லினம் மிகும் என்று விளக்கியிருந்தார். அவரது விடை சரியானததுதான்.
ஜெயரஞ்சித் ஆசிரியர் விடையளிக்கும்போது,
தனது பெயரை தான் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.
றன்/ டண்/தன் ந/ ன கர விதிகள் மீறப்பட்டிருக்கின்றன. வழுவமைதியாக ஏற்று பயன்படுத்தவேண்டியதுதான். என்று குறிப்பிட்டு, விபுலாநந்தரின் கையெழுத்திலான அருமந்த படமொன்றையும் இணைத்திருந்தார். அவர்கள் இருவருக்கும் எனது நன்றி.
(ஆயினும், றபீக் மொஹிடீன் ஆசிரியரின் விளக்கம் தௌிவுடையதாகவும், கற்க வேண்டியது என்பதாலுமே இங்கு இற்றைப்படுத்தப்படுகிறது.)
றபீக் மொஹிடீன் ஆசிரியரின் விளக்கம்
---------------------------------------------------------------
மயில்வாகனன் என்ற தன் பெயரை அவர் விபுலாநந்தர் என மாற்றி அவ்வாறே எழுத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் நாமோ அதிலுள்ள நகர , னகரம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். விபுலாநந்தர் சரியானதா? விபுலானந்தர் சரியானதா? இப்பெயரைச் சூடிக்கொண்ட முத்தமிழ் வித்தகருக்கு இதுபற்றித் தெரியாதோ?
சில பாடசாலைகள் விபுலானந்தாக் கல்லூரி எனவும் சில பாடசாலைகள் விபுலாநந்தாக் கல்லூரி எனவும் நகர , னகர வேறுபாடு தெரியாமல் தமக்குப் பெயர் சூட்டியுள்ளன. இப்பாடசாலைகளுக்கு இவ்விரு வகையிலும் பெயர் சூட்டியவர்கள் தமிழர்கள்தாமே.... ? இவ்வாறு பெயர் சூட்டியவர்கள் இது பற்றி ஆராயாமலா வைத்திருக்கிறார்கள்? இரண்டும் சரியாக இருக்க வேண்டும். அல்லது இரண்டில் ஒன்று சரியாக இருக்க வேண்டும். இது பற்றி ஆராய்வதே எமது வேலை. மேலும் அதற்குள் இன்னொரு வினாவும் உள்ளது. புணர்ச்சி விதி பின்பற்றப்பட்டுள்ளதா? நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் 'க்' அவசியமா? இல்லையா? இனி, இதுபற்றி சற்று அலசுவோமே...
விபுலாநந்தம் என்றால் - விபுல் + ஆநந்தம் அன்று. விபுலம் + நந்தம் ஆகும். முதலில் விபுலம் என்றால் என்னவென்று பார்ப்போம்.
வி + புலம் = விபுலம் ஆகும். புலம் என்றால் நிலம் என்று ஒரு பொருள் உண்டு. அறிவு , ஞானம், நுண்மதி, புலமை என்ற பொருளும் உண்டு (இவை யாவும் கிட்டத்தட்ட ஒரு பொருள் சொற்கள்). புலமை உள்ளவன் புலவன் எனப்பட்டான். அப்படியானால், வி என்றால் மிகுதி என்று பொருள். விஞ்ஞானம் என்றால் விஞ்சிய ஞானம் அதாவது மிகுந்த ஞானம் என்பது பொருள். அவ்வாறே விபுலம் என்றால் மிகுந்த புலமை என்று பொருள். விபுலம் என்றால் திவாகர நிகண்டு விரிவு, பெருமை என்கிறது. உரிச்சொல் நிகண்டு அகலம் என்கிறது. யாழ் அகராதி மேருமலை, இமயமலை, பூமி என்கிறது. இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கின்றபோது பெருமை பெற்றுத் திகழும் விரிந்த ஓர் அறிவுப் புலமைக்கே விபுலம் எனப்படுகிறது. மேலும், விபுலாநந்தம் எனும் சொல்லில் இடம்பெறுவது ஆநந்தம் அன்று. விபுலம் +நந்தம் = விபுலாநந்தம் ஆயிற்று. கலை மன்றம் எவ்வாறு நிலைமொழி ஈறு 'ஐ' கெட்டு 'ஆ' வாகத் திரிந்து கலா மன்றம் என்றானதோ அவ்வாறே விபுலம் நிலைமொழி ஈறு 'அம்' கெட்டு ஈற்றெழுத்து 'ஆ'வானது.
ஆநந்தம் என்ற சொல் தற்காலத்தில் பெரும்பாலும் ஆனந்தம் என்று னகரம் இட்டே எழுதப்படுகிறது. ஆனந்தம் என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் வட மொழிச் சொல்லாகும். ஆனந்தம், தனிச்சொல் அன்று. அது ஒரு கூட்டுச்சொல். ஆல்+நந்தம் = ஆனந்தம் ஆயிற்று. சங்க இலக்கியங்களில் கூட்டுச்சொல் இல்லை. இது பல்லவர் காலத்திலேயே எழுந்துள்ளது.
ஆல் = அகலின் திரிபு ஆகும். கிளைகளும், விழுதுகளும் விட்டு அகன்று வளரும் மரம் அகல மரம். அது ஆல மரமாயிற்று. இங்கே ஆல் + நந்தத்தின் முன்னொட்டு, 'ல்' கெட்டு 'ஆ' நின்றது. மோனியர் வில்லியம்ஸ் என்னும் மொழியாய்வாளர் ஆநந்தத்தை அங்கு னகரமில்லை. நகரமே உண்டு. ஆகவே ஆநந்தம் தான் சரியானது என்கிறார். ஆ+ நந்தம் என்று பிரித்து, 'அம்' ஈற்றைத் தள்ளி. 'ஆ' வை முன்னொட்டாக்கி அதன் பொருள், "அகல, நிறைய" என்கிறார்.
இனி நந்தம் என்றால் என்ன என்பது பற்றி ஆராய்வோம். நந்தம் எனும் சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன.
நந்து, சங்கு, நாரத்தை, சவ்வாது, கஸ்தூரி, காக்கை, பெருமுயற்சி, குபேரனின் பெரு நிதியங்களில் ஒன்று என்பன அவற்றுள் சில. நந்தம் எனும் சொல்லிலிருந்து பல சொற்கள் தோன்றியுள்ளன.
நந்தவனம் என்ற சொல்லின் பொருள் பூங்கா வனம் என்பதாகும்.
நந்தனவனம் என்றொரு சொல்லும் உள்ளது. இது இந்திரனது பூங்காவனம் ஆகும். நந்தனுடைய வனம் எனவே நந்தவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
நந்த கோபாலன் என்றால் கண்ணன் என்றும், கண்ணனின் வளர்ப்புத் தந்தை என்றும் பொருளுண்டு. நந்தன் என்றால் மகன் என்ற மற்றுமொரு பொருளும் உண்டு. நந்தா விளக்கு என்பது அணையாத விளக்கைக் குறிக்கிறது.
இவ்வாறெல்லாம் வைத்து நோக்கும்போது, 'மயில்வாகனன்' என்ற இயற்பெயரைக் கொண்டவருக்கு 'விபுலாநந்தர்' என்ற பெயர் அவரது
அறிவு, ஞானம், ஆளுமை, புலமை ஆகியவற்றின் விசாலம் குறித்து வைக்கப்பட்ட பெயரேயாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அவரது பெயரில் வழுவுமில்லை. வழுவமைதியுமில்லை. விபுலா ந ந்தர் என்று பயன்படுத்துவதே மிகச் சரியானதாகும். விபுலா ன ந்தர் என்று பயன்படுத்துவதே வழுவாகும்.
நிலைமொழி ஆகாரவீற்றின் முன் வல்லினம் மிகும் என்பது (இதன்) புணர்ச்சி விதியாகும்.
உ+ம்:
நிலா+ சோறு = நிலாச்சோறு
கனா+ கண்டேன் = கனாக் கண்டேன்
விபுலாநந்தா + கல்லூரி = விபுலாநந்தாக் கல்லூரி
மேலும், விக்னேஸ்வராக் கல்லூரி என்பதே சரியானதாகும். விக்னேஸ்வரன் எனும் சொல் வடமொழிச் சொல்லாகும். இதனை தமிழில் விக்கினேஸ்வரன் என்று எழுதுவது சரியானதா என்பதைத் தமிழ்ச் சான்றோர் குறிப்பிட வேண்டும். புஷ்பத்தை புட்பம் எனவும் நஷ்டத்தை நட்டம் எனவும் எழுதுவது போல கஷ்டத்தை கட்டம் என எழுதுவது சரியா? கிஷ்கிந்தையை கிட்கிந்தை என எழுதுகின்றனர். கம்பராமாயணத்தில் கிட்கிந்தாக் காண்டம் என ஒரு காண்டமும் கிட்கிந்தைப் படலம் என ஒரு படலமும் உண்டு. ஆனால், கிருஷ்ணனை கிருட்டிணன் என எழுதுவது சரியானதா? கிருஷ்ணம் என்றால் கருமை என்று பொருள். கிருஷ்ணன் என்றால் கரியவன் என்று பொருள். ஆனால், கிருட்டிணன் என்றால் (கிருஷ்ணனைக் குறிக்கும்) கரியவன் என்ற பொருள் வருமா?
அவ்வாறே விக்கினேஸ்வராக் கல்லூரியும். விக்கினம் என்றால் துன்பம் என்று பொருள். இது வடமொழியில் விகனம் எனப்படும். விக்கினம் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து விகனம் வந்ததா? விகனம் என்ற வட மொழிச் சொல்லிலிருந்து விக்கினம் வந்ததா? என்ற சர்ச்சை உள்ளது. விக்னேஸ்வரன் / விக்கினேஸ்வரன் என்பது விநாயகரான பிள்ளையாரைக் குறிக்கிறது. துன்பம் தீர்க்கும் கடவுள் என்பது இதன் பொருள். எனவே, வடமொழிப் பற்றாளர்கள் விக்னேஸ்வராக் கல்லூரி எனவும் தமிழ்ப் பற்றுள்ளவர்கள் விக்கினேஸ்வராக் கல்லூரி எனவும் இடுவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
தமிழில் வினாவுவதற்கு எவ்வளவோ நல்ல சிறந்த வினாக்கள் இருக்க இவ்வாறான வினாக்கள் வினாவப்படுவது ஏனோ....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக