📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 22 பிப்ரவரி, 2025

தமிழ் கற்றால் இப்படித்தான் கற்க வேண்டும்.

எனதும் நாடகவியல் பயிற்றுவிப்பாளரான பேராசிரியர் மௌனகுரு சின்னையா அவர்களின் முகநூல் பக்கத்தில் வரும் கட்டுரைகளை அடிக்கடி வாசித்து வருபவன் என்றவகையில், இன்று என் கண்களுக்குள் குத்திக்ெகாண்ட சிறந்ததொரு கட்டுரை பேராதனைப். பல்கலைக்கழகத்தில் அன்றைய தமிழ்க் கல்வி-- நினைவில் நிற்கும் பழைய ஞாபகங்கள் எனும் கட்டுரை.

கட்டுரையானது, நமது தமிழ் ஆசிரியர்களுக்கு பல

விடயங்களைச் சொல்லாமற் சொல்லும் சீரிய கட்டுரை. தமிழில் துறைபோகக் கற்போர் எண்ணிக்கை விரல் வெட்டெண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றது.

தமிழ் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் என்ற பேரில் இருப்பவர்களில் கூட பெரும்பாலானோர் தங்களின் மொழியறிவை இற்றைப்படுத்தாமல் இருப்பது பாரிய குறையேயாகும். ஆழ அகன்ற தமிழ்க் கடலில் முத்துக்களை எடுக்க வேண்டுமென்றால் நாளும் நாம் தமிழைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். தமிழ் கற்பிக்கும், தமிழைப் புடம்போடும் புலனக் குழுமங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதில் தமிழில் புலமைமிக்கோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

-தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

இனி கட்டுரைக்குள் செல்வோம்.

--------------------------------

பேராதனைப். பல்கலைக்கழகத்தில் அன்றைய தமிழ்க் கல்வி-- நினைவில் நிற்கும் பழைய ஞாபகங்கள்
-------------_-----------------------------------------------
பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் நேற்று எனக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்பி வைத்தார் அது தமிழ் இலக்க ணங்களை அறிமுகம் செய்யும் ஒரு கூட்டமாக எனக்கு தெரிந்தது தமிழியல் ஆய்வு நிறுவகமும் நல்லூர்ப் பிரதேச அலுவலகமும் இணைந்து நடத்தும் இலக்கணக் கருத்தரங்கு அது
தொல்காப்பியம்
புறப் பொருள் வெண்பாமாலை
நன்னூல்
வீரசோழியம்
இலக்கண விளக்கம்
ஆகிய நூல்களின்
அறிமுகமாக எனக்கு அது தெரிந்தது
இன்றைய பல்கலைக்கழக மாணவர் பலருக்கு இந்த நூல்களைப் பேரளவில் தெரியும்
ஆழமாக அதற்குள் புகுந்திருக்க மாட்டார்கள்
படிப்பிக்கப்பட்டு இருக்கவும் மாட்டாது
இதனால் எங்கள் மாணவர் மத்தியில் இறுக்கமான இலக்கணமறிந்த ஒரு தலைமுறை இல்லாமல் ஆகிவிட்டது
நான் சண்முகதாஸ் அவர்களிடம்
“அறிமுகம் மட்டும் தானா என்று கேட்டேன் ?”
அவர் சிரித்துகொண்டே
"அறிமுகமே இன்றைய நிலையில் பெரிய விடயம்
இது ஆரம்பமே பின்னர் உரையாசிரியர்கள் பார்வையூடாக இதனை விளக்குவதும் அடுத்தடுத்த கூட்டங்களில் ஆழமாக இதனை கொண்டு செல்வதும் எங்கள் நோக்கு"
என்று கூறினார்
மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்
பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகளில் இன்று
நாட்டார் இலக்கியங்களும்
நவீன இலக்கியங்களும்
கவனிக்கப்படும் அளவு
பாரம்பரிய இலக்கியங்கள் முக்கியமாக இலக்கணங்கள் கவனிக்கப்படுவதே இல்லை
அது பற்றி நாங்கள் பேசிக் கொண்டோம்
அவரும் நானும் அவரது மனைவியும் பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்தது 1960களில்
எங்களைப் பேராதனை பல்கலைக்கழகத்தில் படிப்பித்தவர்கள் முறையாகத் தமிழ் பயின்ற வர்கள் பெரும் பெரும் அறிஞர்கள்.
தத்தம் துறையில் துறை போகியவர்கள்
இங்கே தமிழை முறையாக பயின்றதுடன். மேற்கு நாட்டிற்குச் சென்று சிறந்த பல்கலைக்கழகங்களில் ஆய்வு நெறிகளை முறையாகக் கற்றுத் திரும்பி யவர்கள்
இன்றைய நிலையையும் நாங்கள் இருவரும் பேசி கருத்துப் பரிமாறிக் கொண்டோம்
பழைய காலப் பேராதனை வாழ்க்கையை நினைத்துக் கொண்டோம்
வாசகர் அறிவதற்காக அன்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்த தமிழ் கல்வியினை ஞாபகத்தில் இருக்கும் அளவுக்கு இங்கே பதி கின்றேன் பலரும் பயன் பெறுவதற்காக
பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ்
இலக்கியம் பயின்ற காலம்
---------------------------------------------
நாங்கள் பேராதனை பல் கலைக்கழகம் சென்ற கால த்தில் அங்கே கவைப் பீடம் என்ற பெயரில் எதுவும் இருக்கவில்லை
கீழைத்தையக் கற்கை நெறிப் பீடம் தான் இருந்தது.
அதன் பீடதிபதியாக இருந்தவர் வரலாற்றுத் துறை நிபுணரான
பிரெஞ்சுக்காரர் லப்ராய் அவர்கள்
தமிழ்த் துறை
வரலாற்றுத் துறை
சிங்களத்துறை
அரேபியத்துறை
புவியியல் துறை
மெய்யியல் துறை
சமஸ்கிருத்த துறை
எனப் பல துறைகள் இருந்தன
முதலாம் வருடத்தில் மூன்று பாடங்கள் எடுக்கலாம்.
மூன்றையும் மூன்று வருடம் தொடரலாம் BA பட்டம் பெறலாம் மூன்றினுள் ஒரு பாடத்தை விசேடமாக செய்ய விரும்பினால் அந்தப் பாடத்தில் பி எடுத்து இருக்க வேண்டும்
விசேட கற்கை நெறி நான்கு வருடங்கள் அதை முடித்தால்
BA(Hons) பட்டம். பெறலாம்
நான் முதலாம் வருடத்தில் தமிழ்
பொருளியல்
வரலாறு
ஆகிய மூன்று பாடங்களை எடுத்து பின்னால் தமிழில் அதிக புள்ளிகள் பெற்றதால் தமிழ் விசேட வகுப்பு அனுமதி பெற்றேன்
நான்கு வருட பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்க் கல்வியை தான் நான் இங்கு சுருக்கமாக கூற விரும்பு கிறேன்
அந்தப் பாடத்திட்டத்தை முதலில் அமைத்தவர் சுவாமி விபுலானந்த அடிகளார்
அவரைத் தொடர்ந்து கிங்ஸ்பெரி அடிகளார் இவர் பத்திப்பாசிரியர் தாமோதரம் பிள்ளையின் மகன் ஆவார்
அதை மேலும் விஸ்தரித்தவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை
பின்நாளில் அவரது மாணவர்களான வித்தியானந்தன் போன்றோர் வளர்த்தெடுத்தனர்
முன். சொன்ன மூவரும் மரபு வழியில் மிகுந்த தாடனமும் நவீனத்தில் பரிச்சயமும் உடையவர்கள்
மேற்கும் கிழக்கும் இணைந்த வடிவத்தினர்
அவர்கள் ஆரம்பித்த பாடத்திட்டங்களிலும் இந்தத் தன்மையை காணலாம்
எங்களுக்கு முதலாம் வருடத்திலேயே இலக்கணத்திலே நன்னூல் கற்பிக்கப்பட்டது அதை கற்பித்தவர் பேராசிரியர் வித்தியானந்தன
அடிப்படை இலக்கணம் எங்களுக்கு அத்திவாரமாக போடப்பட்டது
அத்திவாரம்பலமாக அமைந்தால் தானே கட்டிடம் நிலைக்கும்
இலக்கியங்களைப் பொறுத்த வரையில்
புறநானூறு
மணிமேகலை கம்பராமாயணம்
என்னும் பழைய இலக்கியங்களுடன்
பத்மாவதி சரித்திரமும்
கற்பிக்கப்பட்டது
முதலாம் வருடம் தமிழ் கற்க. அத்திவாரமிடப்பட்ட வருடம்
இரண்டாம் வருடத்திலேயே
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் படிப்பிக்கப்பட்டது
மூன்றாம் வருடத்திலே தொல்காப்பியம் சொல்லதிகாரம் கற்பிக்கப்பட்டது
மூன்றாம் நான்காம் வருடங்களிலே
தொல்காப்பிய பொருளதிகாரம் கற்பிக்கப்பட்டது
அத்தோடு தமிழ் சிறப்பு நெறியிலே ஏனைய இலக்கணங்களான
இறையனார் அகப்பொருள்
புறப்பொருள் வெண்பாமாலை
வீரசோழியம்
யாப்பிலக்கண நூலாக
யாப்பெரும் கலம்
யாப்பெருங்கலக் காரிகை
அணி இலக்கண நூலாக
தண்டியலங்காரம்
என்பனவும் கற்பிக்கப்பட்டன
தொல்காப்பியம் கற்பிக்கப்பட்ட போது அதனை அதற்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் உரை மூலமாக கற்பித்தார்கள்
முக்கியமாக பேரா. செல்வநாயகம் தொல்காப்பிய அகத்திணையியலையும் புறத்திணை இயலையும்
உரையாசிரியர்களான இளம்பூரணரையும் நக்கினார்க் கினியரையும் அடிப்படையாகக் கொண்டு
அவர்கள் உரைகளை விமர்சன நோக்கில் கற்பித்தார்
அவர் தொல்காப்பியம் படித்தது யாழ்ப்பாணத்தில் தொல்காப்பிய அறிஞர் கணேசையரிடமும்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சோமசுந்தர பாரதியிடமும்
எங்களுக்கு தொல்காப்பியம் சொல் அதிகாரத்தை பேரா சிரியர் சதாசிவமும்
எழுத்த திகாரத்தை பேராசி ரியர் வித்தியானந்தனும் கற்பித்தா ர்கள்
இவர்கள் யாவரும் சுவாமி விபுலானந்தரிடமும் பாடம் கேட்டவர்கள்
வித்தியானந்தனும் சதாசிவம் தொல்காப்பியத்தில்
தாடனம் பெற்றவர்கள்
இவர்களுக்குக் குருநாதரான பேராசிரியர் கணபதிப்பிள்ளை சுன்னாகம் குமார் சாமி புலவரிடம் இலக்கண இலக்கியங்கள் படித்தவர்
மரபு வழித் தமிழ் இலக்கண ங்களை மரபு வழி உரை ஆசிரியர் பார்வை கொண்டு கற்பித்தது மாத்திரமன்றி
நவீன முறையிலும் அதனை அணுகினர்
மேல்நாட்டு கல்வி காரணமாக பேராசிரியர் கணபதிப்பிள்ளை மொழி இயலையும் கற்றிரு ந்தார்
இதனால் நவீன மொழியியல் சிந்தனை மரபில் பழந்தமிழ் இலக்கணங்களை நுணுகி ஆராயும் போக்கும் அவரிடம் இருந்தது
இந்த பண்பினை இலக்கண த்தில் நன்றாக வளர்த்துக் கொண்டவர் பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள்
பேரா. கணபதிப் பிள்ளையும் வேலுப்பிள்ளையும் எங்களுக்கு வரலாற்று தமிழ்இலக்கணத்தை கற்பித்தார்கள் நவீன நோக்கில்
இலக்கியத்துறை இன்னொரு விதமாக கற்பிக்கப்பட்டது
சங்க இலக்கியங்கள்
அற ஒழுக்க நெறி நூல்கள்
பக்தி இலக்கியங்கள்
சோழர்கால காவியங்கள்
சிற்றிலக்கியங்களான
கலிங்கத்துப்பரணி
நந்திக்கலம்பகம்
முத்தொள்ளாயிரம்
நாயக்கர் கால புராணங்கள்
பள்ளு
குறவஞ்சி
தனிப் பாடல் திரட்டு
போன்ற மக்கள் சாரிலக்கியங்கள்
ஐரோப்பிய கால நாவலான
பத்மாவதி சரித்திரம்
கமலாம்பாள்சரித்திரம்
நவீன இலக்கியங்களான
வா.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம்
புதுமைப்பித்தன் கதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
போன்றனவும் கற்பிக்கப்பட்டன
அத்தோடு நாங்கள் நவீன கதைகளுக்கும் நாவல்களுக்கும் விமர்சனகளுக்கும் கவிதைகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டோம்
அன்றைய தமிழ் ஆய்வு அறிஞர்களான
வையாபுரிப்பிள்ளை
நீலகண்ட சாஸ்திரியார்
மு. ராகவையங்கார்
ஶ்ரீநிவாசபிள்ளை
வெள்ளை வாரணனார்
சோமசுந்தரப் பாரதியார்
மயிலை வேங்கடசாமி
ரகுநாதன்
ராமகிருஸ்ணன்
ஶ்ரீநிவாசன்
மறைமலை அடிகள் போன்றோரின் ஆய்வு நூல்களுக்கும் ஈழத்தில்
சுவாமி விபுலானந்தர் மற்றும் ஈழத்து மரபுவழித் தமிழறிஞர்கள் அனைவரின் எழுத்து களுக்கும் நாங்கள் வழிப்படுத்தப்பட்டோம்
பரிச்சியப்படுத்தப்பட்டோம்
அன்று வந்த
செந்தமிழ்
தமிழ்ப் பொழில்
முதலான ஆய்வுச் சஞ்சிகைகளுக்கும் அறிமுகமானோம்
ஒவ்வொரு விரிவுரையாளரும் விரிவுரைகள் முடிய ஓவ்வொரு புத்தக லிஸ்ட் தருவார்கள் . அவை அனைத்தும் நூல் நிலையத்தில் இருந்தன
அதிகமான எங்கள் நேரம் நூல் நிலையத்தில் கழிந்தன
அங்கு எம்மோடு மாலைபொழுதுகளில் படிக்க சிலவிரிவுரையாளர்களும் வந்து விடுவர்
எ[ப்போதும் இயங்கிய பல்கலைக் க்ழ்கம் அது
பக்தி இலக்கியம் என்று ஒரு விசேட கற்கை நெறி இருந்தது
அதிலே
பன்னிரு திருமுறைகள்
நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய இலக்கியங்களுடன்
சைவ சித்தாந்தமும் கற்பிக்கப்பட்டது
இந்தப் பாடத்தை எங்களுக்கு எடுத்தவர்
பேரா செல்வநாயகம்
திவ்விய பிரபந்தம் கற்பித்தபோது அவர் எங்களை வைஸ்ணவ பாரம்பரியத்தை ன் அறிய குருபரம்பரைப் பிரவாகத்திற்கும் ஆச்சார்ய ஹிருதயம் நூல்களுக்கு அறிமுகபடுத்தினார்
சைவ நூல்களை அறிய பெரிய புராணத்தை முழுமையாக வாசிக்கும் படி பணித்தார்கள்
பெரிய புராணம் எமக்குப் பாட நூலும் கூட அதனைப்படிப்பித்தவர் பேரா. தனஞ்செயராஜசிங்கம்
திருக் கோவையார் கற்பிக்கப்பட்டது இதனை பேர வித்தியானந்தன் சுவையாகக் கற்பித்தார்
நாலாயிரதிவ்விய பிரபந்த்தை பெரிய வாச்சான் பிள்ளையின் உரையுடன் படித்தோம்
அப்போது விரிவுரையாளராக இணைந்திருந்த பேரா,சண்முகதாஸ் எங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை உரையுடன் ஆண்டாள் பாசுரம் படிப்பித்தார்
நவீன இலக்கியங்களில் அன்று பிரபல்யமாய் இருந்த
வ.வே.சு ஐயர்
கு ப.ரா
புதுமைப்பித்தன் போன்றோர் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்
இவ்வண்ணம் மரபிலே ஆழ க் காலூன்றி நவீனத்தை நோக்கி செல்வதாக அப்பாட த்திட்ட ங்கள் அமைக்கப்பட்டு இருந்ததுடன் கற்பிக்கவும் பட்டன
எங்களுக்குக் கட்டுரை வகுப்புகள் இருந்தன
இன்று பல்கலைக்கழக ங்களிலே கட்டுரை வகுப்பு எடுப்பவர்கள் தற்காலிக விரிவுரையாளர்களே
அன்றோ சிரேஷ்ட விரிவுரையாளர்களே கட்டுரை வகுப்பிற்கு வந்தார்கள்
ஒரு கட்டுரை வகுப்பிலே பொது வகுப்பானால் பத்து பேர் இருப்பார்கள்
விசேட வகுப்பானால் மூன்று நான்கு பேர் இருப்பார்கள்
இதனால் அந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் தனிப்பட கவனமெடுத்து எங்களுக்கு தமிழ் அறிவு ஊட்டினர்
எங்கள் கட்டுரைகள் எழுத் தெண்ணித் திருத்த ப்பட்டன
சிவப்பு கோடுகளால் வெட்டப்பட்டு எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டு
அவை எங்களிடம் ஒப்படைக்கப்படும்
அதற்கான புள்ளிகளும் வழங்கப்படும்
எங்கள் எழுத்துகளின் செம்மையில் அவர்கள் அதிக கவனம் செலுத்தினர் மிகவும் கண்டிப்பாகவும் இருந்தனர்
தமிழ் சிறப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ்அறிவோடு பரந்த அறிவும். பெற வேண்டும் என்பதற்காக
உப பாடமாக
இந்திய சரித்திரம் எடுக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம்
எங்களுக்கு இந்தியசரித்திரம் கற்பித்தவர்கள் பேராசிரியர் இந்திரபாலாவும்
பேராசிரியர் பத்மநாதனும்
பேரா. சிவசாமியும்ஆவார்
அந்தப் படிப்பும் மூன்று வருடம் நடைபெறும்
அத்தோடு
சமஸ்கிருதம்
மலையாளம்
ஆகிய மொழிகளும் கற்பிக்கப்பட்டன
கல்வெட்டியல் ஒரு பாடமாக இருந்தது சாசனங்களை வாசிக்கும் பயிற்சி தரப்ப்பட்டது
அதனை எங்களுக்கு[ படிப்பித்தவர் பேராசிரியர் கண்பதிப்பிள்ளை
சங்க இலக்கியத்திலே நெடுநல்வாடையும்
சீவக சிந்தாமணி யும்
பாரதி பாடல்களும்
பாரதிதாசனின் பாண்டியன் பரிசும் கற்பித்தவர்
பேராசிரியர் கைலாசபதி
அவர் இலக்கிய வரலாறும் கற்பித்தார்
யாப்பெருங்கலக்காரிகையும்
தண்டி அலங்காரமும் கற்பித்தவர் தனஞ்செயராசிங்கம்
பின்னாளில் பேராசிரியர் தில்லைநாதனிடம் புறநானூறும்
நவீன இலக்கியங்களும் கற்றோம்
இந்தப் பாடத்திட்டமும் இதனை நாங்கள் கற்றதும் 1960 களில்
இன்றைக்கு 65 வருடங்களுக்கு முன்னர்
அக்க்காலத்தில் இவர்களிடம் 1960 களில் கல்வி கற்றோரில் எனது அறிவுக்கெட்டிய வகையில் எழ்ஞ்சியிருப்போர் பின் வருவோரே
1.பேரா சண்முகதாஸ் 1960 களின் முதல் தலை முறையினர்
2.நானும் மனோன்மணியும் அதற்கு அடுத்தோர்
3.எங்களுக்கு அடுத்தவர் செல்வனாயகி ஶ்ரீதாஸ்( கனடா)
4.அதற்கு அடுத்தவர் பேரா, பாலசுந்தரம் ( கனடா)
5.அத்ற்கு அடுத்தவர் பேரா சுப்பிரமணிய ஐயர்
பின்னவர்கள் மூவரும் கனடாவிலும் முன்னவர்கள் மூவரும் இலங்கையிலும் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு இயற்கைக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்
பழமை ஒரு வகையில்
வலிமை வாய்ந்தது
வைரம் பாய்ந்தது

- Maunaguru Sinniah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக