📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 26 பிப்ரவரி, 2025

உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - நுழைவாயில்

'நுழைவாயில்' என்ற மகுடந்தாங்கி இருந்தாலும், அருமந்த நுழைவாயில் என்பதால் முதன் முதலில் அதனை இங்கே இற்றைப்படுத்துகிறேன். 

    'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு'

    'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
    வாளொடு முன்தோன்றி மூத்த குடி'


  'கன்னடமும் களி தெலுங்கும்
  கவின் மலையாளமும் துளுவும்
உன்உதரத் துதித்தெழுந்தே
ஒன்று பலவாயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு
அழிந்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே'

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்'

'தமிழுக்கு அமுதென்று பேர்'

    காலத்தின் தூதுவர்களாம் கவிஞர் பெருமக்கள் சூட்டிய புகழ் ஆரத்தைத் தாங்கி, சீரோடும் சிறப்போடும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து, வளர்ந்து, புகழ்பரப்பி நிற்கும் தமிழ் அன்னை உலகெங்கிலுமுள்ள தமிழ் அறிந்தோர் - தமிழின் தரம் அறிந்தோர் - அறிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டோர் - அனைவரையும் தான் பிறந்த பூமியில் முதன் முறையாக வரவேற்றுப் பெருமை பெறும் இந்நந்நாளில், சான்றோர்களே உங்களை இந்த நுழைவாயிலில் சிறிது நேரம் நிற்க வைப்பதற்குப் பொருத்தருள வேண்டுகிறேன். 

    இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டினை ஒட்டி உருவாகி, உங்கள் கரங்களிலே தவழும் இந்த மலரைத் தமிழ் தமிழ்த்தாயின் தாள்களிலே படைக்கும் பேற்றினை எண்ணும்போது இதயம் இன்பத்தால் - எல்லையற்ற மகிழ்ச்சியால் பொங்கிப் பூரிப்படைகிறது. 

    'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 

என்ற பண்பினை  உலகிற்கெல்லாம் வழங்கியவள் தமிழ்த்தாய்.

    நிலமும், குலமும் நிறமும், மொழியும் எப்படி எப்படி மாறினாலும், உலகில் உள்ளோர் அனைவரும் அன்பால், அறிவால், அறத்தால் ஒன்றே என்று முழங்கியவள் தமிழ்த்தாய்.
    
    வேற்றுமைகள் வேரோடு சாய்ந்து, போரே இல்லாமல் ஓய்ந்து, பசியும் பிணியும் நீங்கி, வளமும் வாழ்வும் அமைந்து, அன்பால், அறிவால், பண்பால் இணைந்து, பூபாகம் முழுவதும் 'ஒரே உலகமாக' விளங்க வேண்டும் என்பதுதான் தமிழ்த்தாயின் கனவு. அந்த இன்பக் கனவைச் செயலாக்குவதற்குத்தான் உலகத்திற்கு 'வள்ளுவத்தை' அளித்தாள் தமிழ் அன்னை. 

    'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள்' அறத்தின் பேராட்சிக்கு அடிப்படையாகும்.

    மொழி - இலக்கியம் - பண்பாடு - கலை - வரலாறு - சமயம் - மருத்துவம் - இவையெல்லாம் சேர்ந்ததுதான் தமிழறிவு. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழறிவை ஒன்றுதிரட்டி, உலகுக்கு உணர்த்துவதுதான் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை ஆகும்.

    முதல் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தின் புறத்தில் நடந்தது.

    இரண்டாவது மாநாடு தமிழ்த்தாயின் அகத்தில் நடைபெறுகிறது. உலகமே கண்டு வியக்கும் பெரு விழாவாகத் தமிழ் மண்ணிலே நடைபெறும் இம்மாநாடு தமிழ்த்தாயின் தலைமகன் - பேரறிஞர் பெருந்தகை  - வள்ளுவத்தை வழிகாட்டியாகக் கொண்டு வாழும் அறிவரசர் அண்ணா அவர்களின் நல்லாட்சி என்ற மகுடத்தைத் தமிழ்த்தாய்க்குச் சூட்டித் தமிழக மக்கள் மகிழும் வேளையில் நடைபெறுவது, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ்மொழி படைத்துவரும் வரலாற்றிற்குப் புதியதோர் அத்தியாயமாக அமைந்துள்ளது. 

    நுழைவாயிலில் நீண்ட நேரம் நிற்க வைத்து விட்டேன். வாருங்கள் உள்ளே செல்வோம்.                என்ன நின்று விட்டீர்கள். 

    உங்கள் அகமும் முகமும் மலர்ச்சியால் ஔிவிடுகிறதே. ஏன்.. புரிந்து கொண்டீர்களா... தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றல் மிகு தமிழ் நடையில் அமுது படைத்திருக்கிறார்கள். தமிழகத்திற்குத் தனிச்சிறப்பளிக்கும் முக்கனியின் சுவையை அழகு தமிழிலே  ஏற்றி, வள்ளுவத்தோடு குழைத்துப் 'பொற்காலத்தைப்' படைத்துள்ளார்கள். அதனால்தான் உங்கள் உள்ளத்தை இழுத்து நிறுத்தி விட்டது.

    சரி வாருங்கள்...
    
    தமிழ்த் தாய்க்குப் புகழ் சேர்த்த கவிஞர்களிலே, இந்த நூற்றாண்டில் வாழ்ந்து, சமீப காலத்தில் மறைந்த புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை மாண்புமிகு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் நமக்கு இலக்கியமாக்கிக் காட்டுகிறார்கள். 

    அடுத்து,

    மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் கடல் கடந்து உலகெல்லாம் வாணிகம் நடாத்திப் புகழொடு விளங்கிய தமிழகத்தைப் 'பூம்புகார்' எனும் எழில் ஓவியமாக்கி நம்முன் நிறுத்தியிருக்கிறார்கள். இதோ மேலே! இருட்புலத்தில் கவியுலகம் மருட்சியுற்ற நேரத்தில் எழும் வௌ்ளியாக வந்த புதுநெறி காட்டிய புலவன் பாரதியை மாண்புமிகு திரு. முத்துசாமி அவர்கள் தௌ்ளிய தமிழில் சொல்லோவியமாக்கிக் கருத்தைப் பிணிக்கிறார்கள். 


அதைத் தொடர்கிறது, 'கவிதைப் போட்டி'யிலே பரிசுபெற்ற 'புகாரில் - ஒருநாள்' தேன்சுவைக் கவிதை. கவிதை இன்பத்திலே திளைத்துத் திரும்பிப் பார்த்தால் ஒரு புறத்திலே மொழி' - இன்னொரு புறத்திலே 'பண்பாடு', அடுத்தாற் போல் அழகூட்டும் 'கலைகள்'  - தொடர்ந்தாற் போல் 'வரலாறு', இதைத் தொடர்ந்து 'சமயம்' - சமயத்தைக் கடந்தால் 'சித்த மருத்துவம்' என்ற பிரிவுகளில் பல்வேறு தலைப்புக்களில்  அறிஞர் பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள். மொழித்துறை வல்லுநர்கள், இசைப் புலவர்கள், மருத்துவ நிபுணர்கள், தமிழின் சிறப்பை, அழகை, ஆற்றலை, அறிவுக் கருவூலத்தை அருமையாக விளக்குறார்கள்.

    தமிழன் தான் மொழியை மூன்று பிரிவாகப் பிரித்து, அதற்கு இலக்கணமும் இலக்கியமும் கண்டவன். 

    தமிழ்மொழி பெற்றெடுத்த வள்ளுவப் பெருந்தகைதான் வாழ்க்கையை மூன்றாகப் பிரித்து, அதற்கு இலக்கணமும் வகுத்தவர். 

    இத்தகைய சிறப்புக்களை உலகெங்கும் பரவிக் கிடக்கும் ஆங்கில மொழியின் மூலம் நமக்கு விளக்குகிறார்கள் ஆங்கிலப் புலமை பெற்ற பெருமக்கள் பலர். மேலை நாட்டுப் பேரறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் நம்மலருக்கு மகுடம் சூட்டுகின்றன.

    ஆராய்ச்சிகள் உலகை ஆட்டிப் படைக்கும் இந்தக் காலத்திலும், தமிழ் மொழியால் எதையும் விளக்க இயலும் என்ற பெருஞ்சிறப்பை, ஆராய்ச்சி அறிவுக்குப் படிக்கட்டாக விளங்கும் ஆங்கிலத்தின் மூலம் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றுதான், வைரத்தைத் தங்கத்தில் பதித்திக் காட்டுவது போல, இம்மலர் உருவாகத் தன்னலம் கருதாது கருமமே கண்ணாகி உழைத்த தமிழறிஞர் பெருமக்களையும், ஓவிய வல்லுநர்களையும், தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமன்றி, தமிழ்ப் பெருமையறிந்த உலகெலாம் மறக்காது... மறக்காது... அன்னார் வாழ்க வாழ்க.

    அவர்களுக்கெல்லாம் மலர் அமைப்புக்குழு முதல் தொண்டன் என்ற முறையில் எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

    தமிழக வரலாற்றில் பொன்னான அத்தியாயத்தைச் சேர்க்கும் இப்புனிதப் பணியில் என்னையும் இணைத்த தமிழக அரசுக்கும், இம்மலரை உருவாக்க எல்லாம் நல்கி ஊக்குவித்த தமிழகப் பெருமக்களுக்கும், எனது முத்தான நண்பர் மலர்க்குழுத் தலைவர் மாண்புமிகு மா. முத்துசாமி அவர்களுக்கும், மலரைப் பெருமனதுடன் வௌியிடவிருக்கும் மேதகு தமிழக ஆளுநர் அவர்கட்கும், மலரைச் சிறப்புற ஆக்கிய வடபழனி அச்சக நண்பர்கட்கும் இதயம் கனிந்த நன்றி கூறி, உங்களை உள்ளே அழைத்துச் செல்கிறேன். 

    'இருந்தமிழே உன்னால் இருந்தேன், இமயவர்தம்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்'

    என்ற தமிழ்விடு தூதுக் கவியுடன் நாம் செல்வோம்.

    வருக! வருக!

    அன்பன்,

    எம்.ஜி. ராமச்சந்திரன்


----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக