'பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன் பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரவை
வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக
வாசலிடைக் கொன்றை மரம்.'
மேலுள்ள செய்யுள் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பட்ட பாடலாகும். இந்தப் பாடல் எழுந்தமைக்கான காரணமும் உள்ளதை நாம்
அறிவோம்.முதலில் இந்தப் பாடலின் பொருளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் அரும்பதங்களைத் தெரிந்து கொள்வோம்.
பொன் பூச் சொரியும் = பொன்வண்ணப் பூக்களை உதிர்க்கும்
பொலிந்து = உதிர்த்து
செழும் தாது இறைக்கும் = அடர்த்தியான மகரந்தத்தைத் தெளிக்கும்
நன் பூதலத்தோர்க்கு = உலகில் உள்ளோர்க்கு
நன்னிழலாம் = நல்ல நிழல் தரும்
பிரவை = ஒளி
மின்பிரவை = மின்னலைப்போன்ற ஒளி
கனகம் = பொன்
வாசலிடை = வாயிலில் நிற்கும்
பொருள்
------------
பொன்னிறமான பூக்களைச் சொரிகின்றதும் நிறைந்த மகரந்தங்களைச் சிந்துகின்றதும், நல்லுலகில் வாழ்கின்றவர்களுக்கு இளைப்பாறுவதற்கு ஏற்ற நன்னிழலைக் கொண்டிருக்கின்றதும், மின்னலைப் போல ஔியை வீசுகின்ற புகழுடைய நல்லூரிலே அமைந்திருக்கும் வில்லவராயனின் அழகிய வாசலிடையே உள்ளது கொன்றை மரம்.
குறிப்பு
----------
சின்னத்தம்பிப் புலவர், நல்லூரில் பிரபலமான செல்வந்தரான வில்லவராயன் முதலியாரின் மகனாவார். இவர் வீட்டில் அன்றைய நாட்களில் பண்டிதர்கள் ஒன்று கூடி சந்தேகங்கள் தீர்ப்பது; பாடம் நடத்துவது எனக் கலாசாலையாக இருந்ததால் சின்னத் தம்பிப் புலவருக்கு இயல்பாகவே கவி புனையுமியல்பு இளமையிலே உருவாகியுள்ளது.
இதை இவர் தந்தை வில்லவராயன் முதலியார் அறியவில்லை. ஒரு நாள் முதலியார் நண்பரான புலவர் ஒருவர் முதலியார் வீட்டைத் தேடி வழியில் விளையாடிக் கொண்டு நின்ற சிறுவர்களிடம் கேட்டபோது ஒரு சிறுவன் மேற்படி பாடலைக் கூறியதும் அந்த அடையாளத்தை வைத்து வீட்டைக் கண்டுபிடித்து முதலியாருடன் அளவளாவும் போது பாடலையும் கூறி ஒரு சிறுவன் தான் இதைக் கூறினான் எனச் சொல்லிக் கொண்டிருந்த போது வீட்டுள் வந்த சிறுவனைக் காட்டி இவன் தான் அப்பாடலைப் பாடியது எனக் கூறிய போது தன் மகன் புலமை அறிந்து தந்தை புளகாங்கிதம் அடைந்து, தன் மகனை உச்சி மோந்தார்.
அதன் பின் முறையாகக் கற்று ஈழத்து இலக்கிய உலகில் தனி இடம் பிடித்தார் சின்னத்தம்பிப் புலவர் அவர்கள்.
முதலியார் செல்வம் கொழிக்கும் சீமான் எனவே அது கனக அதாவது தங்க வாசல் தான். கொன்றை மரமும் தங்க நிறப் பூச் சொரியும் மரம் தான்...எவ்வளவு பொருத்தம்.
தான் சிறுவனாக இருக்கும்போது கூட, பாடலுக்கு எவ்வளவு அழகு சேர்த்துள்ளார் சின்னத்தம்பிப் புலவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக