📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உதவினான் என்பது தன்வினையா? பிறவினையா? தௌிவுறுத்தவும்.

தமிழாசிரியர்கள் குழுமத்தில் கேட்கப்பட்ட வினாவே. 'உதவினான் என்பது தன்வினையா? பிறவினையா?' என்பது. இதற்கான தௌிவினை மதிப்பிற்குரிய றபீக் மொஹடீன் ஆசிரியர் வழங்கியிருந்தார்.

ஆசிரியரின் கருத்துக்கள் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றது. 

அன்பார்ந்த ஆசிரியர்களே! 

தன்வினை, பிறவினை தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை காலம் தோறும் நிலவிவருவதனை எம்மால் காணமுடிகிறது. 

ஆசிரியை வினவிய வினா உதவினான் எனும் வினை தன்வினையா பிறவினையா என்பது. இரு விடைகளும் குழுமத்தில் இடம்பெற்றுள்ளன. மிகச் சரியான விடை உதவினான் தன்வினை என்பதே.

வினையின் பயன் உதவிய கருத்தாவையே சேர்கிறது. இங்கு நாம் பொருளை உற்று நோக்குவது முறையல்ல. அதாவது ஒருவருக்கு உதவினால் உதவியைப் பெற்றவரே பயனடைகிறார் ஏன்பதன்று இதன் கருத்து. இங்கு கருத்து யாதெனில், வினையை நிகழ்த்தும் கருத்தா தான் வினையை நிகழ்த்திய பயனை அடைந்து கொள்கிறார் என்பதாகும். உதவினான் என்ற தன்வினை தனிவினையாகும். இதே பொருளில் இதனை கூட்டுவினையாக மாற்றினால் உதவி செய்தான் என வரும். 

உதவினான் (தனிவினை), உதவி செய்தான் (கூட்டுவினை)ஆகிய இருவினைகளும் தன்வினையாகும். இதுவரை காலமும் தனிவினையில்தான் தன்வினை, பிறவினை கண்டோம். கூட்டுவினையிலும் தன்வினை, பிறவினை உண்டு என்பதனை காணத் தவறுகிறோம். 

எனவே, இதன் பிறவினை உதவச் செய்தான் என்பதாகும். ஏனெனில், உதவினான் எனும் தன்வினைக்குரிய  பிறவினையாக உதவச்செய்தான்   என்பதே மிகவும் பொருந்துகிறது.

மேலும், இங்கும் இவ்வாசிரியர் குறிப்பிடுவது போல  எழுவாயான கருத்தாவே வினையின் பயனுக்கு உட்படுகிறது. அமைப்புரீதியாக பிறவினை விகுதிகளையோ பிற அம்சங்களையோ பெறவில்லை. 

எனவே, உதவினான், உதவி செய்தான் என்பன தன்வினைகளாகும். உதவச் செய்தான் என்பதே பிறவினை.

நன்றி - தமிழ்மொழி ஆசிரியர்கள் குழுமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக