📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 21 பிப்ரவரி, 2026

உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!

தாய்த்தமிழே! உனைப்போல் சிறப்பெங்குளதோ?
தாயின் துதிக்குரல் தாளமிடும் நாதமே!
என்னுயிரினுள் கலந்து எழும் இனிமை நீயே;
இறையருள் பொழியும் இன்பமதும் நீயே!

செம்மைத் திருநாடு சிந்தைமணம் வீச,
சங்கக் கவியரசர் சாற்றிய மொழியே;
பல்லோரும் புகழ்ந்து நிற்கும் பரிசே,
பாரெலாம் போற்றும் பழம்பெரும் ஒளியே!

மூதூரின் மண்ணிலும் முத்தமிழ் மழையே,
முன்னோர் வழித்தந்த மெய்ப்பொருள் நீயே;
ஆரூரன் நாவிலும் அம்புயம் ஆனாய்,
ஆண்டாள் பாசுர மொழிகளில் நீயே!

வேதத்தின் ஒலியாய் விளங்கிய செல்வி,
வீரத்தின் உறுதியாய் விளக்கிய மொழி;
அறத்தின் அரும்பொன்னாய் ஆவியில் மலர்ந்து,
அன்பின் அழகாய் உயிரொடு விளங்குவதுநீயே!

பலமொழி பேசிடும் பல்லோரும் பண்பொடு
பழகுதமிழுன் பண்பை படைத்தனர் பாவாய்
நிலைபேறு டைமொழியாள் நீயே என்பேன்
நிலைக்குங் காலுலகு நிற்பாய் நீடு!

தாய்மொழித் தினத்தில் தலைமேற் கொண்டு,
தாழாத மொழியாள் தமிழே என்றின்று;
“தமிழே! நீ வாழ்க!” எனத் தலைநிமிர்ந்து,
தலைமுறைக் களிறென வாழ்வென்று புகழ்வோம்!

உலகெங்கும் ஒலிக்க உன் ஒளி பரவ,
உயிர்மூச்சாய் நீயிரு – உன்னில் நாமிருந்திட!
இறையருள் கொண்ட இனிய மொழியே
இனியுந்தா னுன்னொளி பரவட்டும் எங்கும்!

- கலைமகன் பைரூஸ்
(உலக தாய்மொழித் தினம் வாழ்த்துகள் அனைவருக்கும்)

இந்தக் கவிதை / பாடல் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

இந்தக் கவிதையை நான் முதலில் 'தமிழ்மொழி ஆசிரியர்கள்' எனும் புலனக் குழுமத்தில்தான் பகிர்ந்தேன். 537 அங்கத்தவர்களைக் கொண்டுள்ள அந்தக் குழுமத்திலுள்ள ஒரு சிலர், எனது கவிதையை உள்ளார்ந்த ரீதியாக வரவேற்றிருந்தனர். அவர்களைப் போன்றோரால்தான் எனது தமிழ் மேலும் வளர்கிறது என்பதே உண்மை. 

அவர்களை இத்தளத்தில் இணைத்துப் பேசுவதில் உள்ளார்ந்த திருப்தி எனக்கு என்பதால் இங்கு அவர்களின் பெயர்களைப் பதிகிறேன்.

  1. 'தமிழேறு' திரு. றபீக் மொஹிடீன் ஆசிரியர்
  2. திரு. ரவிச்சந்திரன் சேர்
  3. திரு. ஜனார்த்தனன் ஆசிரியர்
  4. திரு. நீதன் ஆசிரியர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days