📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 5 பிப்ரவரி, 2026

நாவலர் எழுந்தார் கட்டுரைக் குறிப்புகள்

2. நாவலர் எழுந்தார்

Ø  இக்கட்டுரையை எழுதியவர் பண்டிதமணி சின்னத்தம்பி  கணபதிப்பிள்ளை ஆவார்.

Ø  இது ‘இலக்கியவழி’ எனும் நூலில் உள்ளதாகும்.

Ø  கந்தபுராணம், சைவ நற்சிந்தனைகள், கம்பராமாயணக் காட்சிகள், நாவலரும் கோயிலும், ஆறுமுக நாவலர், செந்தமிழ்க் களஞ்சியம்.... என்பன இவரது படைப்புக்களிற் சிலவாகும்.

Ø  நாவலர்  என்பதன் பொருள் ‘நாவன்மை மிக்கவர்’ என்பதாகும்.

Ø  ஆறுமுக நாவலருக்கு  ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியவர் ‘திருவாடுதுறை ஆதீனம்’ ஆவார்.

Ø  ‘நாவலர் எழுந்தார்’ என்ற கட்டுரையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கூட்டம் (இலங்கை சட்ட நிரூபண சபையில் தமிழரின் பிரதிநிதியாக இருந்த சேர். முத்துக்குமாரசுவாமி காலமானதால், அவரது வெற்றிடத்திற்காக ) இலங்கை சட்டசபைக்குப் பொருத்தமான பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்தவதற்கான கூட்டமாகும்.

Ø  இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டியவர் ஆறுமுக நாவலரவர்கள் ஆவார்.

Ø  இக்கூட்டம் நடைபெற்ற ஆண்டு (நாவலர் இறைபதம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர்) அதாவது 1878 ஆண்டு.

Ø  நாவலர் அவர்களின் வண்ணார் பண்ணை சைவப்பிரகாச  வித்தியாசாலையிலேயே அந்தக் கூட்டம் நடைபெற்றது.

Ø  அவர் தலைமை வகிக்காமைக்கான காரணம் அவருக்கு ஏற்பட்ட தொய்வு வருத்தம் என்னும் காச நோய் ஆகும்.

Ø  அதனால் அவருக்குப் பதிலாக தலைமை வகித்தவர் - வை. விசுவநாதம்பிள்ளை அவர்களாவார்.

Ø  சென்னை சர்வகலாசாலை (பல்கலைக்கழகம்) நடாத்திய பீ.ஏ (கலைமாணி) பரீட்சையில் முதன் முதலில் சித்தியடைந்த யாழ்ப்பாணத்தவர்கள் இருவர் - வை. விசுவநாதம்பிள்ளை,  சி.வை.  தாமோதரம்பிள்ளை

Ø  இலங்கை சட்டசபையில் இலங்கையின் பிரதிநிதித்துவத்திற்காக போட்டியிட்டவர்கள் இருவர் - பிறிற்றோ, சேர். பொன்னம்பலம் இராமநாதன்  ஆகியோர்.

Ø  அக்கூட்டத்திற்கு பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வைத்த பெயர் வாத மகா சபை.

குறு வினாக்கள் 

01.' பொழிந்த நெய்யாகுதி வாய்வழி பொங்கி எழுந்த    கொழுங்கனல் என்ன எழுந்தார்... 

அ. இங்கு எழுந்தார் எனக் கம்பரால் கூறப்படுபவர்? எவ்விலக்கியம் ? இராமன் - கம்பராமாயணம் 

ஆ. எழுந்தார் எனக் கட்டுரையாசிரியரால் கூறப்படுபவர்? நாவலர் 

இ. கொழுங்கனல் என்பதன் கருத்து யாது?  அக்கினி சுவாலை 

 02. ' மாக மடங்கலும் மால் விடையும் பொன்னாகமும் நாகமும் நாண நடந்தார்... 

அ. நடந்தார் எனக் கட்டுரையாசிரியரால் கூறப்படுபவர்? நாவலர் 

ஆ. மடங்கல், மால்விடை என்பதன் பொருள் யாது? மடங்கல் - ஆண் சிங்கம், மால்விடை - பெரிய காளைமாடு 

இ. இங்கு நாகம் என்பது குறிக்கும் இருவிதமான கருத்து? பொன் மலையாகிய மேரு மலை /ஆண் யானை  

03   ' விலகு பிள்ளை.. அது கிடக்க எடுத்துக் கொண்டு வா  தந்தி தபாற் கட்டுக்களை.. எல்லோரும் பிரமித்துப் போனார்கள் ( O/L 2016  01.III) 

அ. இக் கூற்றைக் கூறியவர் யார்? நாவலர் 

 ஆ. பிள்ளை என நாவலரால் குறிப்பாக விளிக்கபட்டவர் யார்?;  விசுவநாதப்பிள்ளை 

இ. இக் கூற்று உரைக்கபட்ட சந்தர்ப்பம் யாது? 

பிறிற்றோ கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருக்கும் போது பிறிற்றோவின் நேர்மையற்ற செயலை சுட்டிக் காட்டுவதற்காக உரைக்கபட்டது. 

 04. வாதமகா சபை எங்கே நடைபெற்றது? எதற்காக நடைபெற்றது?

வண்ணார்பண்ணை சைவப்பிரகாசவித்தியாசாலையில். 

  இலங்கை சட்டசபையில் தமிழர் சார்பாக இருந்த பிரதிநிதியான முத்துக் குமாரசாமி  காலமாகியதால் அந்த இடத்திற்கு புதியதொரு பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக 

 05. சென்னை சர்வகலாசாலையார் முதன் முதலில் நடாத்திய பி. ஏ பரீட்சையில்    சித்தியடைந்த யாழ்ப்பாணத்தவர் இருவரும் யாவர்? 

        விசுவநாதப்பிள்ளை, தமோதரம்பிள்ளை 

  06. ‘இந்த இருவரும் இலங்கை சட்டசபையில் இலங்கைப் பிரதிநிதித்துவத்திற்கு போட்டியிட்டுக்  கொண்டிருக்கின்றார்கள்..’ இந்த இருவர் எனப்படுவோர் யாவர்? 

        சேர். பொன். இராமநாதன், பிறிற்றோ 

 07. அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு கட்டுரையாசிரியர் வைத்த பெயர் யாது? 

        வாதமகா சபை 

 08. அன்றைய அக் கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டியவர் யார்? தலைமை தாங்கியவர் யார்? 

        தலைமை தாங்க வேண்டியவர் - ஆறுமுகநாவலர்  / தலைமை         தாங்கியவர் - விசுவநாதப்பிள்ளை 

 

09. 'பிரசண்ட மாருதத்திற்கு பிறகு என்று சொல்கின்ற... இங்கு பிரசண்டமாருதம் என்பதால் நீர் விளங்கிக் கொள்வது யாது?          

                                                                                                            ( O/L 2017  02. IV.) 

        புயல் காற்று, பலத்த காற்று 

 10. நல்லூர் கந்தசுவாமி கோயிலாருக்கும் பிராமணர்களுக்கும் பாரிய வழக்கு நடந்தது... 

        அ. கோயிலாருக்கு ஏற்பட்டாளர் யார்? பிறிற்றோ 

        ஆ. பிராமணர்களுக்கு ஏற்பட்டாளர் யார்? நாவலர் 


11. 'அது கிடகக் எடுத்துக் கொண்டுவா தந்தி தபாற்கட்டுக்களை'

                                                                                                            ( O/L 2020  01 .II) 

  அ. இவ்வாறு கூறியவர் யார்? ஆறுமுக நாவலர் 

  ஆ. யாருக்கு கூறப்பட்டது?  விசுவநாதபிள்ளைக்கு 

 

12.  ‘அவர் தனது வலியை அங்கவஸ்திரத்தில் ஆவாகனம் பண்ணி பக்கத்தில் வைத்து விட்டு  பாடஞ் சொல்வது வழக்கம்.. '

        அ. இங்கு அவர் எனப்படுபவர் யார்? அருணந்தி சிவாச்சாரியார் 

        ஆ. ஆவாகனம் என்பது குறிக்கும் கருத்து யாது? பிரித்து வைத்தல்,     தனியாக எடுத்து வைத்தல்  

        இ. அங்கவஸ்திரம் என்பது என்ன? சால்வைத்துணி 

 

13. ஆறுமுகநாவலரின் ஆசிர்வாதத்தால் இலங்கை சட்டசபையில் அங்கத்துவம் பெற்றவர் யார்?  சேர். பொன். இராமநாதன் 

  

14. இக் கட்டுரையில், கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் யார் யாரென கூறப்பட்டுள்ளது?

       கல்விமான்கள், பிராமண சைவக் குருமார்கள், வழக்கறிஞர்கள்,     சட்ட நிபுணர்கள், உபாத்தியார்கள், பிரபுக்கள் மற்றும்     பிரபல்யமானவர்கள் 


15. 'இலங்கை சட்டசபையில் ஓரிலங்கைச்சிவப்பாய் இருந்து விளங்கினார்' என்பதனால் தௌிவுறுத்தப்படுவது யாது? 

இலங்கை சட்டசபையில் இலங்கையரின் உரிமைக்காகக் குரல்கொடுத்த முக்கியத்தராக விளங்கினார் என்பது.


16. இக்கட்டுரையில் இடம்பெற்ற அணியினை விளக்குக. 

  'பொழிந்த நெய்யாகுதி....' எனும் பாடலில் நாவலரின் எழுகையைக் காட்டும் விதம் 

உவமானம்: வேள்வித் தீ மீதமாக எழும்புதல்.

  உவமேயம்: நாவலர் எழுந்த விதம்

  பொதுத்தன்மை: வேகமாக எழுந்தது 

       ஆகுதி என்பது வேள்வித்தீயில் போடப்படும் பொருள்களாகும்.  இதனால் வேள்வித்தீ கொழுந்துவிட்டு எரியும். 


17. கூட்ட மண்டபத்தில் நாவலர் இருந்த நிலையை கட்டுரையாசிரியர் எவ்வாறு காட்டுகிறார்? 

நாவலர் அவர்களுக்கு அன்றைய தினம் காச நோய் என்ற படியினால் அன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்காது, மண்டபத்தில் அமர்ந்திருந்து கூட்ட நடமுறைகளை அவதானித்துக் கொண்டிருந்தார். மண்டபத்தில் ஓரு தூணுக்கு அருகில் திண்டுத் தலையணை ஒன்றில் அடிக்கடி சாய்ந்து கொண்டும், மடியிலும் அதன் பக்கங்களிலும் அடுக்கிய தலையணைகளில் முழங்கைகளை ஊன்றி உள்ளங் கைகளால் நெற்றியினை தாங்கியபடி இருந்து கூட்ட நடமுறைகளை அவதானித்துக் கொண்டிருந்தார். 


18. பிறிற்றோ பற்றி பண்டிதமணி அவர்கள் யாது கூறுகின்றார்?

  பிரசித்தி பெற்ற பழுத்த வழக்கறிஞர், அக்காலத்துச் சட்டநிபுணர்களுள்ளே தலைசிறந்தவர். இலங்கையிலுள்ள எல்லோரும் அவரை நன்கறிவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்  அவருக்கு பெரிய பேர், பாரிய வழக்குகளுக்கும் அப்பில்களுக்கும் (மேன்முறையீடு) அவரை நியமிப்பது வழக்கம் அவருக்கு யாழ்ப்பாணத்திலும் அளவு கடந்த செல்வாக்கு. 

 

19.  சேர் பொன். இராமநாதன் பற்றி பண்டிதமணி அவர்கள் யாது கூறுகின்றார்? 

அப்போது அவருக்கு 25 வயது, சிரித்த முகம், தங்கச் சொரூபம். அப்போதுதான் சென்னையிலிருந்து படித்துவிட்டு வந்தவர். யாழ்ப்பாணத்தவராயினும் யாழ்ப்பாணத்தில் யாருக்கும் அவரைத் தெரியாது. நாவலரின் மதிப்பைப்பெற்று இலங்கை சட்டசபைக்கென பிரதிநிதி தெரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்று 50 ஆண்டுகள் பிரதிநிதியாக இருந்தவர்.  

 

20. விசுவநாதப்பிள்ளை பற்றி பண்டிதமணி அவர்கள் யாது கூறுகின்றார்? 

மகாவிவேகி, கணிதமேதை, தாமோதரம்பிள்ளைக்கு ஆசிரியர். வாதம் செய்வதில் பெரிய சாமர்த்தியவான். நாவலர் அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மூத்தவர். நாவலர் அவர்களும் பிள்ளையும் இளமைக்காலத்தில் பத்திரிகை வாயிலாக பல விடயங்களில் வாதம் செய்து வந்தவர்கள். நாவலரை எதிர்த்து நின்று பல கண்டனங்களை பத்திரிகைகளில் வெளியிட்டவர். சிதம்பரத்திலே நாவலர் அவர்களோடு நேரிலே வாதம் செய்து அவரின் கொள்கைகளை ஏற்று அவரை குருவாக ஏற்றுக்கொண்டவர். 

 

21. வாத மகா சபை வருணிக்கப்படும் தன்மையினை குறிப்பிடுக.  

                                                                                              ( O/L 2017  02. IV.அ) 

 

       இரு தரப்பினருக்கும் இடையில் ஆவேசமான வாதப்பிரதி வாதங்கள் நடந்தன. மின்னல்கள் , முழக்கங்களைப் போல அவை எதிரொலித்தன. ஒரு போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறுபட்ட கருவிகள், ஆயுதங்கள் போன்று பலவிதமான கருத்துக்கள் வாதிடப்பட்டன. கைவேல், எறிகின்ற வேல், இறகுள்ள அம்பு, இறகில்லாத அம்பு, வாள், சக்கரம் இவற்றிற்கு மேலதிகமாக தெய்வப்படைகளிலும் கைவைக்கின்ற சமயம், அதாவது திவ்ய அஸ்திரங்களை பயன்படுத்த வேண்டிய சமயம் என்றவாறு வாதமகாசபையில் நடைபெற்ற வாதப்பிரதி வாதங்கள் விளங்கின. 

 

22.  நாவலர் அவர்களின் நேர்மை மற்றும் திறமை என்பன பற்றி குறிப்பிடுக. 

                             ( O/L 2018 03..அ ) 

     இக் கட்டுரையில் நாவலர் அவர்களின் நேர்மை மற்றும் திறமை பற்றிய பதிவினை பண்டிதமணி அழகுற எடுத்துரைத்துள்ளார். 

நேர்மை 

நல்லூர் கந்தசுவாமி கோயில் பிரச்சனையில் பிராமணர்களை ஆதரித்த நாவலர், பிறிற்றோ மூலம்  பிராமணர்களுக்கு வெற்றி கிடைகக் வாய்ப்பிருந்தும் தவறான வழியில் செல்லாமை. 

பிறிற்றோவின் நேர்மையற்ற செயலை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியமை. 

நேர்மையான ஒருவரை சட்டசபைக்கு அனுப்ப எண்ணியமை 

பிறிற்றோவின் வேண்டுதலை ஏற்காமல் இருந்தமை.

திறமை 

தொய்வு வருத்தம் என்ற போதிலும் தகுதியற்ற ஒருவர் சட்டசபைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக விசுவநாதப்பிள்ளையை தலைமை வகிக்க விட்டு கூட்ட நடைமுறைகளை அவதானித்துக் கொண்டிருந்தமை.

விசுவநாதப்பிள்ளையின் விருப்பத்திற்கு ஆளாகியமை. 

விசுவநாதப்பிள்ளையின் தலமையில் கூட்டத்தை நடத்தியமை. 

தன் கட்சி தோல்வியுறும் சமயத்தில் அக்கினியை போல எழுந்து சென்றவேளை  விலகு பிள்ளை என்று சொல்லாமலே பிள்ளை விலகி இடம் கொடுத்தமையும்,  பிரசண்டமாருதத்திற் கு பிறகு எனுமளவு அமைதி நிலவியமையும் அவரது திறமையினால் ஏற்பட்ட பயமே காரணமாகும் 

பொருத்தமான நேரத்தில் ஆதாரத்துடன் பிறிற்றோவின் தவறைச் சுட்டிக்காட்டியமை. 

தன் கட்சி தோல்வியுறும் சமயத்தில் அக்கினியை போல எழுந்தவர். 

கம்பீரமான தோற்றம், வீறு கொண்ட பார்வை, எண்ணங்களில் வேகம்,  அக்கினி போன்ற  எழுகை, பெருமை மிக்கதான நடையுடையவர். 

தன்னுடன் ஒருவர் ஒருவராகவோ அல்லது பலராகவோ கூட்டம் கூட்டமாகவோ விவாதத்திற்கு வரலாம் எனக் கூறிய துணிவுடையவர். 

தகுதியான ஒருவரை சட்டசபைக்கு நியமித்தமை.  இவ்வாறு நாவலரின் நேர்மையையும், திறமையையும் எடுத்துக் காட்டலாம்.  


23. நாவலர் தோற்றப்பொலிவு பற்றி கட்டுரையில் எவ்வாறு காட்டப்பட்டுள்ளது? 

  நாவலர் அவர்களின் தோற்றப் பொலிவு குறித்து பண்டிதமணி  பின்வருமாறு  தெளிவுறுத்தியிருக்கிறார்.

கம்பீரமான தோற்றம் • வீறு கொண்ட பார்வை, • எண்ணங்களில் வேகம் 

இந்த நேரத்தில் விஸ்வாமித்திரர் குறிப்பை ஏற்று எழுந்த இராமனை போல் நாவலர் எழுந்தார். ' பொழிந்த நெய்யாகுதி வாய்வழி பொங்கி எழுந்த கொழுங்கன லென்ன எழுந்தார்... என 

பண்டிதமணி விளக்குமளவு அக்கினி போன்ற எழுகை. 

' மாக மடங்கலும் மால் விடையும் பொன்னாகமும் நாகமும் நாண நடந்தார்... 

என பண்டிதமணி விளக்குமளவு இராமன் வில்லை நோக்கி நடந்து சென்றதைப் போல நாவலரும் விவாத மேடை நோக்கி நடந்த விதம். என்பனவும் நாவலரின் தோற்றப் பொலிவினை அழகுற எடுத்துக் காட்டுகின்றன. 

 

24. பிறிற்றோவின் நேர்மையற்ற செயல்கள் என கட்டுரையில் காட்டப்படுபவை யாவை?

    நேர்மையற்ற செயல்கள் என பண்டிதமணி காட்டுகின்றவற்றை நோக்கும் போது, 

கோயில் நிருவாகம் சார்பாக வழக்காடச் சென்றிருந்தும் தன் சுயநலத்திற்காக தன் கட்சிக் காரர்களான கோயிலாரை ஏமாற்றத் துணிந்தமை. 

யாழ்ப்பாணத்தில் நாவலாருக்கு இருக்கும் செல்வாக்கினை உணர்ந்து நாவலர் தனக்கு சார்பாக இருந்தால் நாவலர் பக்கம் தீர்ப்பை சாதகமாக்கி தருவதாக கூறியமை. 

தன் மன எண்ணத்தை அந்தரங்க நண்பர்கள், கடிதம், தந்தி என்பவற்றின் மூலம் நிறைவேற்றி சட்டசபை உறுப்பினராக வர விரும்பியமை. 

நாவலர் அவர்களின் இயலாமையினை சாதகமாக எடுத்துக்கொண்டு தலைசிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்டநிபுணர்களின் உதவியுடன் நேர்மையற்ற செயல் மூலம் சட்டசபைக்கு வர முற்பட்டமை. இவ்வாறு பிறிற்றோவின் நேர்மையற்ற செயல்கள் காட்டப்பட்டுள்ளன.   

25. நாவலர் எழுந்த விதம், நடந்து சென்ற தன்மை என்பனவற்றை பண்டிதமணி அவர்கள்  கம்பராமாயண பாடலடிகள் மூலம் எவ்வாறு காட்டுகின்றார்?

நாவலர் எழுந்த நிலை இராமாயணத்தில் இராமனது கதாபாத்திரத்திற்கு இணையானதாக பண்டிதமணி காட்டுகிறார். அதாவது விஸ்வாமித்திரர் சிவதனுசை வளைக்கும் படி ஒரு பார்வை மூலம் இராமனுக்கு ஆணை பிறப்பிக்கின்றார். விசுவாமித்திரருடைய பார்வையாகிய  நெய்யாகுதியை அடுத்து அக்கினிச் சுவாலை வெளிப்படுவதனைப் போல இராமன் எழுந்தார் என கம்பர் அந்நிலையினை காட்டுகிறார். அதுபோல நாவலரும் தன் நிலையிலிருந்து எழுந்தார் என கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார். இதனை. . 

' பொழிந்த நெய்யாகுதி வாய்வழி பொங்கி எழுந்தன   கொழுங்கன லென்ன எழுந்தார்.' என எழுதியிருப்தைக்  காணலாம். 

 

        நாவலர் நடந்த விதம் மிதிலை நகரின் மிகப் பெரும் சபையில்    யாரும் எதிர்பாராத சமயத்தில் கம்பீரமான ஒரு நடை நடந்து   சென்றார். இராமன் வில்லை நோக்கி, அதைப்  போலவே கூட்ட மண்டபத்தில் நாவலர் அவர்கள் நடந்து சென்றார். அதாவது இராமனின் நடையை கண்டு பெருமை மிக்க ஆண்சிங்கமும், பெரிய இடபமும், பொன்மலையாகிய மேருவும் யானையும் இவையனைத்தும் நாணமடைந்ததாம். அது போல பெருமை மிக்க பல அ ம்சங்கள் நாணம் அடையும் படியாக நாவலர் எழுந்து விவாத மேடை நோக்கி நடந்து சென்றார் இதனை 

        ' மாக மடங்கலும் மால் விடையும் பொன்னாகமும்   நாகமும் நாண நடந்தார்... எனக் கட்டுரையாசிரியர் அழகுற அந்நிலையினை கூறுகின்றார். 

 

26. இக் கட்டுரையாசிரியரின் மொழிநடைச் சிறப்புக்களை ஆராய்க.

                              ( O/L 2018 03..ஆ ) 

  

      இக் கட்டுரையை சிறந்த முறையில் வாசகரிடையே கொண்டு சேர்ப்பதில் கட்டுரை யாசிரியர் கணபதிப்பிளi; ள அவர்கள ; பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அந்தவகையில் அவற்றை அவரது மொழிநடைச் சிறப்புகக் ளாக நாம் எடுத்து நோக்கலாம். 

அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடியதான எளிமையான மொழிநடையினை கையாண்டுள்ளார்.

சிறிய சிறிய சொற்பிரயோகங்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளமை. 

தமிழ் மொழியோடு பிறமொழிச் சொற்களையும் இணைத்திருத்தல். உதாரணமாக இருதயம், அங்கவஸ்திரம், ஆகுதி, சொரூபம் முதலிய வடமொழிச் சொற்கள். அத்தோடு அப்பீல், பி.ஏ முதலிய ஆங்கில மொழிச் சொற்கள். 

கட்டுரையில் உவமை, உருவ அணிகளை பயன்படுத்தியிருத்தல். 

இதிகாச கதையினையும், அதில் உள்ள பாடலடிகளையும், பாத்திரங்களையும் கட்டுரையில் கையாண்டுள்ளமை.  உதாரணம் : கம்பராமாயண பாடலடிகள். 

இலகுவான, சாதாரண பேச்சு வழக்குச் சொற்களை இணைத்திருத்தல்.  உதாரணம் - விலகு பிள்ளை, அது கிடக்க


      பிரார்த்தம் - வினைப்பயன், ஆவாகனம் - தனியாகப் பிரித்து / பிடித்து வைத்தல், அங்கவஸ்திரம் - சால்வைத்துணி, வியாசம் - வேலை /  சாட்டுச் சொல்லுதல்

குறிப்பு - பல பதிப்புகளைக் கண்ட பாடப்புத்தகத்திலுள்ள, செய்யுளில் உள்ள கடைசி வரி பிழையானது. கம்பராமாயணத்திலுள்ள / இலக்கியவழி நூலில் வௌியான சரியான செய்யுள் அடிகளையும் இங்கு இணைத்துள்ளேன். (மெய்ப்பொருள் காண்பதறிவு.) மேலும் புத்தகத்தில் ஒரே செய்யுள் போன்று தட்டச்சிட்டு வௌியிடப்பட்டுள்ளது. அதிலுள்ள இவ்விரண்டு வரிகள் இரண்டு செய்யுள்களில் இடம்பெற்றுள்ள செய்யுள்களாகும் என்பதையும் கருத்திற் கொள்ளவும். 








https://www.thamilshshudar.com/2026/02/2025-2026.html

📢 தமிழ்ச்சுடர் WhatsApp குழுவில் இணையுங்கள்

புதிய பதிவுகள் • கல்வி தகவல்கள் • உடனடி அப்டேட்கள்

JOIN NOW

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days