தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் “பா” வகைகள் மிகுந்த சிறப்பும் செம்மையும் உடையவை. அவற்றில் முக்கியமான நான்கு வகைகள் வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா ஆகும். இவ்வகைகள் செய்யுளின் ஓசை, அடிக்குறிப்பு, எதுகை, மோனை, இயைபு போன்ற இலக்கணச் சிறப்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன. அவற்றுள் வெண்பா மிகச் செம்மையான
வடிவமாகக் கருதப்படுகிறது. சுருக்கமாகவும் செறிவாகவும் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்ய ஏற்ற வடிவம் வெண்பா ஆகும்.வெண்பா வடிவில் அமைந்த பல அறநூல்கள் தமிழில் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக நாலடியார் விளங்குகிறது. நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன இந்நூல் வாழ்க்கை நெறிகளை எளிமையாக எடுத்துரைக்கிறது. நான்மணிக்கடிகை நான்கு மணிகள்போல் ஒளிவீசும் கருத்துகளை வழங்குகிறது. இன்னா நாற்பது மற்றும் கார் நாற்பது போன்ற நூல்கள் நாற்பது வெண்பாக்களால் ஆனவை; மனிதன் தவிர்க்க வேண்டியதும் இயற்கைச் சித்திரங்களும் இவற்றில் இடம்பெறுகின்றன.
அகப்பொருளை மையமாகக் கொண்ட ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்கள் சங்ககாலத் திணை வாழ்க்கையை விளக்குகின்றன. உலகப் புகழ் பெற்ற திருக்குறள் கூட குறள் வெண்பா வடிவில் அமைந்தது என்பது பெருமை.
மேலும் திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி மற்றும் கைந்நிலை போன்ற நூல்கள் வெண்பா வடிவின் செம்மையை வெளிப்படுத்துகின்றன.
இவ்வாறு வெண்பா வடிவில் உருவான இந்நூல்கள் தமிழரின் சிந்தனை, அறம், பண்பு, வாழ்க்கைநெறி ஆகியவற்றை தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டுகின்றன. வெண்பா வடிவம் தமிழ்ச் செம்மொழியின் ஒழுக்க நெறிக் குரலாகத் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days