📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

தமிழ் இன்று உயிருடன் இருக்கிறதா?

 தமிழ் இன்று உயிருடன் இருக்கிறதா, அல்லது நினைவாக மட்டும்தானா?

தமிழ்—உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. ஆனால் இன்று நாம் அதை வாழ்க்கையில் பயன்படுத்துகின்றோமா? அல்லது விழாக்களில் மட்டும் போற்றி, அன்றாடத்தில் மறக்கிறோமா? இந்தக் கேள்வியே இன்றைய தமிழ்ச் சூழலை நம்மிடம் கேட்கிறது. தமிழ் பேசும் இலங்கை, இந்தியாவன்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற நம் தமிழ் உறவுகள் தமிழுக்காக வாய் கிழியக் கத்துகிறார்கள். ஆயினும், 

தமிழை நமது சந்ததியினருக்குக் கடத்துவதற்கு ஏதுதான் செய்தோம் என்று தங்களது ஆழ்மனதுடன் உறவாட வேண்டும். 

ஒருகாலத்தில் தமிழ் வீட்டின் மொழியாவும், வீதியின் மொழியாகவும், வாழ்வின் மொழியாகவும் இருந்தது.

இன்று அது பாடப்புத்தகத்தின் ஓரத்தில், மேடை உரையின் தொடக்கத்தில், அல்லது சமூக ஊடகப் படத்தின் கீழ் இரண்டு வரிகளில் மட்டுமே நிற்கிறது. கற்பிக்கின்ற ஆசிரியர்களிடத்தும் தமிழ் மெல்லக் கொஞ்சுமா? எனக் கேட்டால் அவர்களும் சம்பளத்திற்காக தமிழ் கற்பிக்கின்றார்களே தவிர, தமிழின் மீது பற்றுக்கொண்டு கற்பிக்கின்றார்களா எனக் கேட்டால் விரல்களை எண்ண வேண்டியே வருகின்றது. 

பேசத் தெரிந்த தமிழும்… பயன்படுத்தத் தயங்கும் தமிழும்

பலருக்கு தமிழ் பேசத் தெரியும் - ஆனால் எழுதத் தயக்கம்.

சரியாக எழுதவில்லை என்ற பயம். ஆங்கிலம் கலந்தால் தான் ‘மொடர்ன்’ என்ற மனநிலை. இதனால் தமிழ்,

அறிவின் மொழியாக அல்ல, உணர்ச்சியின் மொழியாக மட்டும் மாறிக் கொண்டிருக்கிறது.

கல்வியும் ஊடகமும் எங்கு நிற்கின்றன?

தமிழ் பாடமாக கற்பிக்கப்படுகிறது; ஆனால் வாழ்க்கை மொழியாகக் கற்றுத் தரப்படவில்லை. ஊடகங்களில் தமிழ் இருக்கிறது ஆனால் சிந்தனை ஆழம் குறைகிறது. வார்த்தைகள் அதிகம்; வாசிப்புக் குறைவு.

அப்படியெனில் தமிழ் இறந்து விட்டதா?

இல்லை. தமிழ் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது. அது ஒரு கிராமத்து பாட்டியின் சொல்லில், ஒரு கவிஞனின் கவிதையில், ஒரு ஆசிரியரின் வகுப்பறையில், ஒரு மாணவனின் கேள்வியில் மெல்ல மெல்லத் துடிக்கிறது. ஆனால் அந்தத் துடிப்பு வலிமையாக மாற வேண்டுமென்றால் நாம் அதை வாழ வைக்க வேண்டும்.

நாம் என்ன செய்யலாம்?

தினமும் சிறிதளவு தமிழ் வாசிப்போம்... தமிழில் எழுத முயற்சிப்போம்... குழந்தைகளிடம் தமிழில் உரையாடுவோம்... “பிழை” என்னும் பேய்ப் பயத்தை விடுவோம்... தமிழ் உள்ளடக்கங்களை ஆதரிப்போம்.. - இந்த வரிகள் இலங்கைத் தமிழருக்கும் இந்தித் தமிழருக்கும் அல்ல. புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களுக்கே. ஆயினும், இந்தியத் தமிழர்கள் தமிழின் மீது அதீத பற்றுடையவர்கள் என்று தம்மை இனங்காட்டிக் கொள்வார்களாயின், தாங்கள் பயன்படுத்துகின்ற அந்நிய மொழிச் சொற்களின் பாவனையைச் சற்றேனும் குறைத்துக் கொள்வதே சிறப்புடைத்து. (பிற மொழிகளைப் பேச வேண்டாம் என்ற கருத்துடன் நான் இதனைச் சொல்லவில்லை. 

தமிழ் காப்பாற்றப்பட வேண்டிய மொழி அல்ல. அன்றாட வாழ்வில் அதன் ஆழ அகலம் உணர்ந்து வாழ்வதற்கான வழிகாட்டும் வாழ்வியல் மொழி என்பதால் தலைமேல் சுமக்க வேண்டிய மொழி. 

முடிவாக எனது உள்ளத்தெழுந்த வரிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

தமிழ் நினைவாக மாறக்கூடாது என்றால், அதை நம் குரலில், நம் எழுத்தில், நம் சிந்தனையில் இன்றே இடம் கொடுக்க வேண்டும்.

தமிழ் உயிருடன் இருக்கிறதா? அதற்கான பதில் நம்மிடமே இருக்கிறது.


✍️ தமிழன்புடன்,

கலைமகன் பைரூஸ்

பத்தி எழுத்து | கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days