யார் இந்த வீரமாமுனிவர்? | Who Was Veeramamunivar?
தமிழ் மொழியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சிலர் பிறப்பால் தமிழர்; சிலர் பணியால் தமிழர். ஆனால் மிக அரிதாக, மொழிக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, தமிழரைவிடத் தமிழன்பு காட்டியவர்கள் தோன்றியுள்ளனர். அத்தகைய அரிய மனிதர்களில் முதன்மையானவர்
வீரமாமுனிவர். அவர் ஒரு வெளிநாட்டவர் என்றாலும், தமிழ் மொழிக்குச் செய்த சேவைகள் அவரை நம் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் நிலையான இடம் பெறச் செய்துள்ளன.வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi). இவர் 1680 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். கிறித்தவ மதப்பணிக்காக இந்தியா வந்த அவர், தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்திலேயே தமிழ் மொழியுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் மதப்பணிக்குத் தேவையான கருவியாகத் தமிழைக் கற்றவர், பின்னர் அந்த மொழியின் இனிமை, இலக்கணச் செம்மை, இலக்கியப் பெருமை ஆகியவற்றால் கவரப்பட்டு, தமிழையே தனது வாழ்வின் மையமாகக் கொண்டார்.
அக்காலத்தில் பல பழைய தமிழ் நூல்கள் பரவலாகப் பயன்படாமல் ஓரங்களில் கிடந்தன. அவற்றை ஆராய்ந்து, தொகுத்து, ஒழுங்குபடுத்தி, அதன் உள்ளார்ந்த கருத்துகளைப் புரிந்துகொண்டு உலகறியச் செய்தவர் வீரமாமுனிவர். தூசியில் மறைந்திருந்த தமிழ் செல்வங்களை வெளிக்கொணர்ந்து, அவற்றின் மதிப்பை உலகறியச் செய்வதில் அவர் காட்டிய முயற்சி அளப்பரியது. இதனை அவர் சுமையாக எண்ணாமல் பகலிரவாக உழைத்தது, அவரது மொழிப்பற்றை வெளிப்படுத்துகிறது.
தமிழ் இலக்கணத்தில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழின் அமைப்பு, இலக்கண விதிகள், சொற்களின் தன்மை போன்றவற்றை முறையாக ஆய்ந்து, மேற்கத்திய அறிஞர்களுக்குப் புரியும் வகையில் நூல்கள் எழுதினார். தமிழ்–இலத்தீன் அகராதி, இலக்கண விளக்கங்கள் போன்ற அவரது படைப்புகள், தமிழ் மொழியை உலக அறிவியல் ஆய்வுகளுக்குக் கொண்டு சென்றன. தமிழை ஒரு பிராந்திய மொழியாக அல்லாமல், செம்மையான இலக்கிய மொழியாக உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கே சேரும்.
வீரமாமுனிவர் வெறும் ஆய்வாளர் மட்டும் அல்லர்; அவர் ஒரு திறமையான தமிழ்க் கவிஞரும் ஆவார். இதற்கு சிறந்த சான்று ‘தேம்பாவணி’ என்னும் காவியம். தமிழ்ச் சொற்களின் இனிமை, இலக்கணச் சீர்மை, கம்பன் பாணியை ஒத்த காப்பிய நடையமைப்பு ஆகியவற்றால் ‘தேம்பாவணி’ தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பெற்றுள்ளது. ஒரு வெளிநாட்டவர் இப்படிப் பட்ட செம்மையான தமிழில் காவியம் இயற்றியிருப்பது இன்றும் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
அவரது பணியின் முக்கியத்துவம் இன்னொரு கோணத்தில் பார்க்கப்பட வேண்டும். அந்நாளில் ஆங்கிலம், இலத்தீன் போன்ற மொழிகளே கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தின. அத்தகைய சூழலில் தமிழையும் அந்த உயர்ந்த மொழிகளோடு இணைத்து நிறுத்தியவர் வீரமாமுனிவர். இதன் மூலம் தமிழ் உலக அரங்கில் மதிப்புடன் பேசப்படும் மொழியாக உயர்ந்தது. தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சென்ற தூதராக அவர் திகழ்ந்தார் எனக் கூறின் மிகையன்று.
வீரமாமுனிவரைப் பற்றிச் சிந்திக்கும் போது, அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டிலும், அவர் எந்த மொழிக்காக வாழ்ந்தார் என்பதே முக்கியம். பிறப்பால் இத்தாலியனாக இருந்தாலும், பண்பாலும் பணியாலும் அவர் ஒரு உண்மையான தமிழன். தமிழை நேசிப்பது வார்த்தைகளால் மட்டுமல்ல; செயலில் காட்ட வேண்டும் என்பதற்கே அவர் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.
இன்றைய தலைமுறையினருக்கு வீரமாமுனிவர் சொல்லும் செய்தி தெளிவானது: மொழியைப் பாதுகாப்பது வெறும் பெருமைப் பேச்சால் முடியாது; ஆய்வு, படைப்பு, பரவல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அது சாத்தியம். தமிழ் நூல்களை வாசித்து, ஆராய்ந்து, புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தப் பணியில் நாம் ஈடுபடும் போது, நம்முள் ஒரு சிறு வீரமாமுனிவர்கள் பிறக்க ஏதுவாகின்றது.
தமிழின் ஒளி மங்காமல் எரிய வேண்டுமெனில், வீரமாமுனிவர் போன்ற அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகளை நினைவுகூர்ந்து, அவர்களின் பணியைத் தொடர்ந்து செல்ல வேண்டும். ஓரமாய்க் கிடந்த தமிழ் செல்வங்களை உலக மேடைக்கு கொண்டு வந்த அந்த வீரத் தமிழனை நம் நெஞ்சங்களில் என்றும் நிலைநிறுத்துவோம்.
(இன்று தை மாதம் நான்காம் நாள். அவர் நினைவு கூரப்படும் நாள். 'தமிழ்ச்சுடர்' சார்பில் அவரது பணியை உச்சிமேற் கொண்டு இங்கு எனது தனித்துவமான பாணியிலின்று சற்று விலகி, இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.
இனிவரும் எனது ஆக்கங்கள் இலகு தமிழில் அமைவதற்கு ஆவன செய்வேன். உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். )
– தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
© 2026 Kalaimahan Fairooz. All rights reserved.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days