📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

பாவலர் பஸீல்காரியப்பரின் “அழகான ஒரு சோடிக் கண்கள்”

ஈழத் தமிழின் மெல்லிசைப் பாரம்பரியத்தில் அழியாத தடம் பதித்த பாடல்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடிய பாடல்களில் ஒன்று “அழகான ஒரு சோடிக் கண்கள்”.

இந்தப் பாடல் ஒரு நாள் திடீரென பிறந்ததல்ல. அது ஒரு இளம் மாணவனின் மனத் துடிப்பிலிருந்து முளைத்த கவிதை. 1956ஆம் ஆண்டு, மாணவப் பருவத்தில், உயர்தர வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியையின் சுழலும் கண்களைப் பார்த்து, பள்ளிக் கரும்பலகையில் முதன்முதலாக அவர் எழுதிய வரிகளே இக்கவிதையின் விதை.

அந்த வயதின் குறும்பும் கற்பனையும் காரணமாக, நண்பர்களாலும் சில ஆசிரியர்களாலும் கிண்டலுக்குள்ளானாலும், கவிதை அவரது உள்ளத்தில் உயிரோடு வாழ்ந்தது.

பத்து ஆண்டுகள் கழித்து – 1966 ஆம் ஆண்டு...  புகையிரத பயணத்தில் சந்தித்த ஒரு பெண். அவருடன் பேசிக் கொண்டே வந்தாள். அவள் இறங்கும்போது தட்டுத் தடுமாறினாள். அவளது கண்ணாடி கழன்றது. ஆனால் 'கண்கள்' இல்லை.

அந்த நொடியின் அதிர்ச்சி பழைய கவிதையை மீண்டும் உயிர்ப்பித்தது.
புகையிரதத்தில் கவிதையை மறுபடியும் எழுதி, “கண்ணூறு” எனப் பெயரிட்டு தினகரனுக்கு அனுப்பினார். அது வெளியானதையும் அவர் அறியவில்லை.

பின்னர், அதே கவிதை எம்.ஏ. ரொக்சாமியின் இசையிலும் எஸ்.கே. பரராஜசிங்கத்தின் குரலிலும் மெல்லிசைப் பாடலாக வானொலியில் ஒலிக்கத் தொடங்கியது.

ஆனால் – கவிஞரின் பெயரில்லாமல்!

பாடல் நாடெங்கும் பிரபலமானது. மக்கள் முணுமுணுத்தார்கள். இதயங்கள் இணைந்தன. ஆனால் படைப்பாளி எதனையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார் “கவிஞன் மறைந்து, கவிதை மட்டும் வாழட்டும்” என்ற மனநிலையோடு.

1978இல் வானொலி பேட்டியில்தான் “அது என் பாடல்” என்று சிரித்தபடி சொன்னார் பஸீல் காரியப்பர் அவர்கள். அதுவே உண்மையின் வெளிச்சம்.

அதன் பின் கடற்கரை தொழிலாளி முதல் கலாநிதி வரை எல்லோரின் இதயத்திலும் இடம்பிடித்த பாடலாக அது நிலைத்தது.

இன்று அது இலக்கியநய பாடத்திட்டத்திலும் ஒரு பாடலாக வலம் வருகின்றது. உண்மையில் அந்தப் பாடல் வரிகளை உச்சரிக்கும் போது, இளமை துள்ளியெழுந்து பழையன மீட்டுகின்றது என்பதே உண்மை.


சுருக்கமாகச் சொன்னால்

ஒரு பள்ளிக் கரும்பலகையில் தொடங்கிய கவிதை 

ஒரு புகையிரத நினைவில் வளர்ந்து, ஒரு நாளிதழில் அச்சாகி, ஒரு வானொலியில் இசையாகி, ஒரு தலைமுறையின் இதயமாக மாறியது.

கவிஞன் மறைந்தாலும் “அழகான ஒரு சோடிக் கண்கள்”
இன்னும் உயிரோடு பாடிக் கொண்டிருக்கிறது.


நீங்களும் சுவைத்திட முழுப்பாடலும்

அழகான ஒரு சோடிக் கண்கள் – அவை
அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம் புண்கள்!

புவியியல் கற்றிடும் வேளை – அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடும் காலை
தவித்துத் துடிப்பதென் வேலை – கல்வி
தங்குவதெங்கே மனம் ஒரு பாலை!

ஆட்சியியில் மறுபாடம் – நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்!
ஆட்சி செய்யுமுனைச் சாடும் – நான்
ஆளிச் சுழியில் மிதந்திடும் ஓடம்!

தாய் மொழிப் பாடம் நடக்கும் – நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்!
“ஏய்!” என்று என்னைப் பிடிக்கும் – மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்.?

தத்துவப் பாடம் நடக்கும் – அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்!
வித்தையில் பித்துப் பிடிக்கும் – நம்
வீட்டார் அறிந்தால் கன்னம் தடிக்கும்!


குறிப்பு

சில இடங்களில் தொடரிசைக்குறியை என்னால் தட்டச்சிட முடியவில்லை. அதனால் உறுப்பிசைக் குறியையே அவ்விடங்களிலும் இட்டுள்ளேன். மன்னிக்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days