புலம்பெயர் தமிழர்களும் அடுத்த தலைமுறையும்: அந்நிய மண்ணில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்ப்பது எப்படி?
இன்று உலகெங்கிலும் பரவி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் சூழல் காரணமாக கனடா, லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் மில்லியன் கணக்கான தமிழர்கள் குடியேறியுள்ளனர்.
அந்நிய மண்ணில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புலம்பெயர் தமிழர்கள் (Tamil Diaspora) பெரும் சாதனைகளைத் படைத்து வந்தாலும், அவர்களின் நெஞ்சுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு மிகப்பெரிய கவலை:
"எங்கள் அடுத்த தலைமுறைக்குத் தமிழ் மொழியையும், நமது கலாச்சாரத்தையும் எப்படிக் கொண்டு சேர்ப்பது?" என்பதுதான்.மேற்கத்திய கலாச்சாரச் சூழலில் வளரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது சவாலான காரியம் என்றாலும், அதைச் சாத்தியமாக்க சில எளிய வழிகள் இதோ:
1. வீட்டில் தமிழ் பேசும் சூழலை உருவாக்குங்கள் (Speak Tamil at Home)
குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளும் முதல் பள்ளி இல்லம்தான். பாடசாலை மற்றும் வெளி உலகத்தில் அவர்கள் ஆங்கிலம் அல்லது அந்தந்த நாட்டு உள்ளூர் மொழியைப் பேசினாலும், வீட்டிற்குள் நுழைந்ததும் தமிழில்தான் பேச வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தலாம். பெற்றோர்கள் தங்களுக்குள் தமிழில் பேசிக்கொள்வது குழந்தைகளுக்கு இயல்பாகவே மொழியின் மீது ஈர்ப்பை உண்டாக்கும்.
2. இணையவழி தமிழ் வகுப்புகள் மற்றும் தமிழ் பள்ளிகள் (Learn Tamil Online)
இன்று உலக நாடுகள் பலவற்றிலும் புலம்பெயர் தமிழர்களால் "தமிழ் சார்ந்த பாடசாலைகள்" வார இறுதி நாட்களில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தமிழ் பாடசாலைகளில் சேர்க்கலாம். அதுமட்டுமின்றி, தற்போது நிகழ்நிலை (ஆன்லைன்) மூலம் தமிழ் கற்றுத்தரும் (Learn Tamil Online) பல தளங்கள் உள்ளன. நானும் உங்கள் பிள்ளைகளுக்காக நிகழ்நிலையில் தமிழ் கற்றுத் தர ஆவலாக இருக்கின்றேன். (உரையாடல், சின்னச் சின்னக் கதைகள், சின்னச் சின்னப் பாடல்கள், சொல்வதெழுதல்) இதன் மூலம் விளையாட்டுகள் மற்றும் கதைகள் வழியாகக் குழந்தைகள் எளிதாகத் தமிழ் படிக்கவும் எழுதவும் பழக முடியும்.
3. கலைகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் (Tamil Culture and Arts)
தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல் முறை. பரதநாட்டியம், கர்நாடக இசை, மிருதங்கம், மற்றும் சிலம்பம் போன்ற பாரம்பரியக் கலைகளைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கலாம். ஊரில் நடைபெறும் பொங்கல் விழா, தமிழ் புத்தாண்டு போன்ற கலை விழாக்களில் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்வதன் மூலம் நமது ஆடை வடிவமைப்பு, உணவு முறை மற்றும் பண்பாட்டின் பெருமையை அவர்கள் நேரில் உணர முடியும்.
4. தமிழ் நீதிக்கதைகள் மற்றும் அனிமேஷன் படங்கள் (Tamil Stories for Kids)
இக்காலக் குழந்தைகள் மொபைல் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்களுக்கு யூடியூபில் உள்ள தமிழ் பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள் அல்லது தமிழ் அனிமேஷன் கார்ட்டூன் படங்களை அறிமுகப்படுத்தலாம். இது அவர்களின் தமிழ் உச்சரிப்பையும் சொல்வளத்தையும் (Vocabulary) விளையாட்டுத் தனமாக மேம்படுத்த உதவும். தமிழ்ச்சுடர் எனும் எனது யூரியுப் செனலில் உங்கள் மழலைகளின் / குழந்தைகளின் திறமைகளை வௌிக்காட்ட உதவவும் என்னால் இயலும்.
5. தாய்நாட்டிற்கான பயணங்கள் (Visit Homeland)
ஆண்டுக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது குழந்தைகளை தமிழ்நாடு அல்லது இலங்கைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்குள்ள உறவினர்களுடன் பழகும் போதும், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், கிராமத்து வாழ்வியல் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பார்க்கும் போதும் அவர்களுக்குத் தங்கள் வேர்கள் (Roots) மீதான பெருமிதம் தானாகவே உருவாகும்.
முடிவுரை:
மாறிவரும் நவீன உலகில், நம் பிள்ளைகள் சர்வதேசக் குடிமக்களாக வளர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்கள் தங்களின் தனித்துவ அடையாளத்தைத் தொலைத்துவிடாமல் இருப்பதும் ஆகும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப, உலகெங்கும் பரவி வாழ்ந்தாலும் தமிழை நம் பிள்ளைகளின் நெஞ்சில் வாழ வைப்பது ஒவ்வொரு புலம்பெயர் தமிழரின் கடமையாகும்.
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days