📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 24 ஜூன், 2026

தாய்மொழிக் கல்வியும் மாணவர் வெற்றியும் – ஆழமானதோர் பார்வை

ஒரு மனிதனின் சிந்தனை, உணர்வு, அறிவு, பண்பாடு, அடையாளம் ஆகிய அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது அவனது தாய்மொழியாகும். இலங்கையின் கல்வி அமைப்பில் தரம் 1 முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L) வரை ஒவ்வொரு மாணவரும் தமது தாய்மொழியாகிய தமிழ் அல்லது சிங்கள மொழியை கட்டாயமாகக் கற்கின்றனர்.

சுமார் பதினொரு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மொழியைப் பயிலும் மாணவன், இறுதியில் நடைபெறும் தேசிய பரீட்சையில் குறைந்தபட்ச சாதாரண சித்தியைக்கூடப் பெற முடியாத நிலை உருவாகின்றது என்றால், அது வெறுமனே ஒரு மாணவனின் தோல்வியாக மட்டுமே கருதப்பட முடியாது. அது கல்வி முறைமை, ஆசிரியர் செயற்பாடு, பெற்றோர் பங்களிப்பு மற்றும் மாணவர் மொழி உணர்வு ஆகிய அனைத்தையும் மீளாய்வு செய்ய வேண்டிய ஒரு சமூகப் பிரச்சினையாகும்.
மொழி என்பது ஒரு தனிப்பாடம் மட்டுமல்ல. அது ஏனைய அனைத்துப் பாடங்களையும் கற்றறிவதற்கான கருவியாகும். கணிதத்தில் வினாவைப் புரிந்துகொள்வதற்கும், விஞ்ஞானத்தில் கருத்துகளை விளங்கிக்கொள்வதற்கும், வரலாற்றில் நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், புவியியலில் தரவுகளை விளக்குவதற்கும் மொழித்திறன் இன்றியமையாததாகும். எனவே, மொழியில் பலவீனமுள்ள மாணவன் ஏனைய பாடங்களிலும் சிரமங்களை எதிர்கொள்வது இயல்பான ஒன்றாகும்.
ஒரு மாணவன் மொழியை நேசித்து கற்கும்போது அவனது வாசிப்புப் பழக்கம் வளர்கிறது. வாசிப்புப் பழக்கம் வளரும்போது சொற்களஞ்சியம் பெருகுகிறது. சொற்களஞ்சியம் பெருகும்போது சிந்தனை ஆழமடைகிறது. சிந்தனை ஆழமடையும் போது கல்விச் சாதனைகளும் உயர்கின்றன. எனவே மொழி மீதான ஈர்ப்பு என்பது வெறும் இலக்கிய இரசனைக்கானது மட்டுமல்ல; அது கல்வி வெற்றிக்கான முக்கிய திறவுகோலாகும்.
இன்றைய சூழலில் பல மாணவர்கள் மொழிப் பாடத்தை புள்ளிகளை / பெறுபேற்றைப் பெறுவதற்கான ஒரு பாடமாக மட்டுமே கருதுகின்றனர். மொழி என்பது வாழ்வின் அடையாளம், பண்பாட்டின் சுவடுகள், சிந்தனையின் வடிவம் என்பதனை அவர்கள் உணர்வதில்லை. இதற்குக் காரணமாக சமூக ஊடகப் பயன்பாடு, வாசிப்புப் பழக்கக் குறைவு, வீட்டுச் சூழலில் மொழி வளர்ச்சிக்கான ஆதரவு இல்லாமை போன்ற பல காரணிகள் காணப்படுகின்றன.
அதேவேளை, ஒரு பாடசாலையில் அதிகளவான மாணவர்கள் மொழிப் பாடத்தில் சித்தியின்மை பெறுகின்றனர் என்றால், அதில் ஆசிரியர்களின் பங்கும் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும். ஒரு ஆசிரியரின் கடமை பாடநூலை முடிப்பதுடன் நிறைவடைவதில்லை. மாணவர்களின் மொழித் திறனை வளர்த்தல், வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தல், எழுத்தாற்றலை மேம்படுத்தல், மொழி மீது நேசத்தை விதைத்தல் என்பவையும் அவரின் பொறுப்புகளாகும்.
சிறந்த மொழி ஆசிரியர் ஒருவரால் வகுப்பறை உயிர்ப்புடன் மாறுகிறது. அவர் கதைகள் கூறுவார், இலக்கியங்களை அறிமுகப்படுத்துவார், பேச்சுப் போட்டிகள் நடத்துவார், வாசிப்பு வட்டங்களை உருவாக்குவார், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பார். அவரது உடலமைப்பே பாடத்தை நாடகமயமாக்கும். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் அவரில் துள்ளி விளையாடும். இவ்வாறான செயற்பாடுகள் மொழிக் கற்றலை எளிமையாக்கி மாணவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.
மாறாக, கற்பித்தல் வெறும் குறிப்பெழுதுதல், மனப்பாடம் செய்தல், கடந்தகால வினாத்தாள்களை மட்டும் பயிற்சி செய்தல் ஆகியவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், மாணவர்கள் மொழியை ஒரு சுமையாகவே கருதத் தொடங்குவார்கள். அதன் விளைவாக மொழி மீதான ஆர்வம் குறைந்து, பரீட்சை முடிவுகளும் பாதிக்கப்படும்.
பெற்றோர்களின் பங்களிப்பும் இங்கு முக்கியமானதாகும். வீட்டில் குழந்தைகளுடன் தாய்மொழியில் உரையாடுதல், நூல்களை வாசிக்க ஊக்குவித்தல், செய்தித்தாள்கள் மற்றும் இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்துதல் போன்ற செயல்கள் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகின்றன. மொழி என்பது பாடசாலையில் மட்டும் கற்கப்படுவதல்ல; அது குடும்பத்திலும் சமூகத்திலும் வளர்க்கப்பட வேண்டிய செல்வமாகும்.
இன்றைய பூகோளமயமாக்கல் காலத்தில் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும், தாய்மொழியில் வலுவான அடித்தளம் கொண்ட மாணவர்களே பிற மொழிகளையும் சிறப்பாகக் கற்றுக்கொள்கின்றனர் என்பது கல்வியியலாளர்களின் பொதுவான கருத்தாகும். எனவே தாய்மொழிக் கல்வியை அலட்சியப்படுத்துவது, மாணவரின் முழுமையான அறிவு வளர்ச்சியையே பாதிக்கக்கூடியதாகும்.
இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்லிக் காட்டுதல் வேண்டற்பாலது. சர்வதேச பாடசாலைகளில் சில பிள்ளைகள் தங்களின் பெற்றோரின் வேண்டுகோள்களுக்கு இணங்க தாய்மொழியாக பிறமொழியை (உதாரணமாக தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணாக்கர் சிங்கள மொழியைத் முதல்மொழியாக பரீட்சைக்காக கற்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சாதாரண தரத்தில் தாய்மொழியில் (தமிழ்மொழியில்) சித்தியின்மைப் பெறுபேற்றைப் பெறுவதைக் காணும்போது வேதனையே மேலிடுகின்றது.
ஒவ்வொரு மாணாக்கனுக்கும் தான் விரும்பும் மொழியைத் தேர்வுசெய்வதில் பூரண சுதந்திரம் உள்ளது. ஆயினும், தன் தாய்மொழியல்லாத பாடத்தை (அந்நியமான பாடத்தை) கற்கும்போது கற்பதற்கான புறச்சூழல் சீராக அமைந்தால் மட்டுமே உயரிய சித்தியைப் பெறவியலும் என்பதும் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
முடிவாகக் கூறுவதானால், பதினொரு ஆண்டுகளுக்கும் மேலாகக் கற்ற தாய்மொழிப் பாடத்தில் மாணவர்கள் சித்தியின்மை பெறுவது ஒரு தனிநபர் தோல்வி மட்டுமல்ல. அது மாணவர், ஆசிரியர், பெற்றோர், பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி முறைமை ஆகிய அனைத்திற்கும் விடுக்கப்படும் ஒரு கேள்வியாகும். மொழி மீது நேசம் வளர்க்கப்படும் போது மட்டுமே கல்வி தரம் உயர்வடையும். மொழி வலுவாக இருந்தால் அறிவு வலுவாகும்; அறிவு வலுவாக இருந்தால் நாடும் வலுவாகும்.
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
Diploma in Tamil | B A Tamilology ; B A (Hons) Tamil and Tamil Teaching OUSL (R) | Sinhala <> Tamil Translator DOL
குறிப்பு
=====
முகநூலில் பகிரப்படும் சில பதிவுகளை - அப்பதிவுகளில் இருந்த தாய்மொழி மீதான எனது பார்வையே இந்த ஆக்கத்திற்கு வழிகோலின. யாரையும் இழிந்துரைக்கும் பதிவாக இதனை எண்ணக் கூடாது. மாறாக தாய்மொழியின் மீதான பற்றுதல் - மாணாக்கர் மீதான அன்பு என்பனவே இந்தப் பதிவுக்குக் காரணமாயின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days