தமிழ் மொழி மேம்பாடு நோக்கிய நகர்வில் மேல் மாகாணத் தமிழ் மொழிப் பாடசாலைகளை மையப்படுத்திய செயற்பாட்டின் வரலாற்று வழித்தடமாக
சிலம்பு 2025 மலர்ந்துள்ளது.தேடலும் வாசிப்பும் அருகிவிடக்கூடாதென்ற தாகத்தின்
குரலாக வந்துள்ள சிலம்பு இருநூறு பக்கங்களின் தன் செயற்பாட்டு வடிவத்தை விரித்துள்ளது.'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி'என தமிழ்மொழி வாழ்த்தோடு மலரும் சிலம்பு'மேல் மாகாண கல்வி மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றும் அத்தனை பேருக்கும்' சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை சிலம்பின் தூரநோக்கை வெளிப்படுத்துகிறது.
மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப் பாடசாலைகள் பிரிவு க்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.நஜீப் அவர்களின் முகவுரையோடு சிலம்பின் ஓசை கேட்கத் தொடங்குகிறது.
மேல் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.ஐ.டி.டி.சி.இத்தமல்கொட, மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு வி.உபாலி அமரதுங்க ஆகியோரின் ஆசிச்செய்தி சிலம்புக்கு கனதி சேர்க்கிறது. மீயுயர் மேம்பாட்டுக்கான வழித்தடத்தை விரைகிறார் மலர்த்தொகுப்பாளர் எம்.முஸ்தபா மஃஸூர்.
மேல்மாகாண கௌரவ ஆளுநர் திரு ஹனீப் யூஸூப், மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளர்,மேல்மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதி ஆலோசனையுடன் ஒழுங்கமைப்புக்குழுவின் செயற்பாட்டு வடிவங்களின் நிகழ்வுச் சுவடுகளாக மலர் மணம் வீசுகிறது.
சிலம்பு 2025 முரசொலி,பிறையொளி,மகுடம்,விதானம் ஆகிய பகுதிகளில் கட்டமைக்கப்பட்டுள்ளமை சிறப்பாகவுள்ளது.
சிலம்பில் 'மேல் மாகாணத் தமிழ் மொழிப் பாடசாலைகள் பிரிவு:தற்போதைய நிலையும் எதிர்காலத் திசை நோக்கும் ' என்கிற ஏ.எஸ்.நஜீப் கட்டுரை வெட்டு முகமாகி நிற்கிறது .
'முரசொலி 'தமிழைத் தமிழால் கொண்டாடுவோம்' என்ற முழக்கத்தோடு 2025ஆம் வருடத்துக்கான அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் எழுத்துப் பிரதியாக்கத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பதினொரு பிரதிகளை உள்ளடக்கியுள்ளமை சிலம்பினை மாணவர் மைய மலராக்கியுள்ளது.
அத்தோடு 'முதலிடத்தி முகங்கள்' மற்றும் பெறுபேற்று அட்டவணை ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் சு.முரளிதரன்,ஓய்வு நிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.எஸ்.இதயராஜா,கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ்,,முல்லை முஸ்ரிபா,கலாநிதி சந்திரிகா ஆகியோரின் சிறப்புக்கட்டுரைகள் முரசொலியை உரக்கச் செய்கின்றன.
'பிறையொளி'இஸ்லாமியகலை இலக்கிய கலாச்சாரத்தைக் கொண்டாடும் முகமாக அமைகிறது.
அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளுக்கானமாகாண மட்டப் பெறுபேற்று அட்டவணையைத் தாங்கி நிற்கிறது.
மணிமகுடம் சூட்டும் கௌரவமாக 'மகுடம்' பகுதி சிலம்பை.மெருகேற்றுகிறது.
2025ஆம் வருடம் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட ஆற்றல் திறன் விருத்திக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமான மகுடம் தரம் ஒன்று முதல் பதின்மூன்று வரையான மாணவர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
அத்தோடு ,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் தை.தனராஜின் ஆசிரியத்துவமும் வாண்மைத்துவமும் என்ற கட்டுரை,2026 புதிய கல்வி மறுசீரமைப்பு பற்றியதேசிய கல்வி நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர்ஜெஸார் ஜவ்பர் கட்டுரை மகுடத்தில் இடம் பெற்றுள்ளமை சிறப்பானதாகும்.
சிலம்பில் 'விதானம்'எனப்பெயரிடப்பட்ட பகுதி 2025ஆம் வருடத்தில் மேல்மாகாணத்தில் முதன்முதலாக நஞத்தப்பட்ட ஆய்வுக் கட்டுரையாக்க செயற்திட்டப் போட்டி முடிவுகளுடன் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.
ஆய்வறிவினூடான அபிவிருத்திச் செயற்பாடு மேல் மாகாண தமிழ் கல்விச் சமூகம் எதிர் கொள்ளும் சவால் மற்றும் தீர்வுகளை மையப்படுத்தியிருந்தது.
ஆசிரியர் பிரிவில் எம்.ஏ.ஜம்ஸித்(கொழும்பு வலயம்),அதிபர் பிரிவில் எஸ்.ஏ.பாத்திமா காமிலா(கொழும்பு வலயம்), ஆசிரிய ஆலோசகர், வளவாளர் பிரிவில் றபீக் மொஹிடீன் (களுத்துறை வலயம்) ஆகியோரின் முதலிடம்.பெற்ற கட்டுரைகள் இடம் கொண்டுள்ளன.அத்தோடு மாணவர் பிரிவில் அனா அல்மன் அப்துல் ரகுமான்(கம்பஹா வலயம்) கட்டுரையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலம்பு கட்டுரையாக்கத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலுமுண்டு.
மேலும் 'நிகழ்வின் சுவடுகள் -2025' அவ்வாண்டு நிகழ்வுற்ற செயற்பாடுகளின் நினைவேடாக அமைந்துள்ளது.
'நிகழ்வின் நிழற்படமாக'நிழற்படங்களி தொகுப்பொன்றும் சிலம்பின் இறுதிப்பக்கங்களை வர்டமயமாக்குகிறது.
தொகுத்து நோக்கும் போது மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் வழங்கியுள்ள 'சிலம்பு -2025'
அழகிய வடிவமைப்பில் ஆழமாக கருத்துக்களினதும் நிகழ்வுகளின் தொகுப்பினதும் இழை அறுந்திடாத பேரொலியாய்ப்பரவும் வரலாற்று வழித்தடமாகும்.
எம்.முஸ்தபா மஃஸூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days