இலங்கையின் புகழ்பூத்த, காலத்தால் பேசப்பட வேண்டிய ஆளுமைகள் பற்றி பாடசாலை மாணாக்கரும்... ஏன் ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டியவர்கள் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது தேவைப்பாடானதே.
அதற்கேற்ப, பிரபல எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கைத் தமிழ் படைப்புலகில் அல் அஸூமத் என்ற ஆளுமை' பற்றிய கட்டுரை 'தமிழ்ச்சுடர்' தளத்தில் இற்றைப்படுத்தப்படுகிறது.
நன்றி - மு. சிவலிங்கம்
மாத்தளை பிரதேசம் ,தென்னாட்டுத் தமிழர்கள் , தங்களின் நீண்ட நடைப் பயணத்தை முடித்துக்கொண்டு இளைப்பாறிய வரலாற்று பூமியாகும்!
இந்த மண்ணில் பிறந்து உருவாகிய இலக்கியச் செம்மல்தான் படைப்பாளர் அல் அஸூமத் அவர்கள்.
பூர்வீகத்தில் சுடுகந்தை என்ற பெருந்தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். வேலாயுதம் என்ற இயற்பெயர் கொண்டவர்.
மாத்தளைதான் பெருந்தோட்டப் பணப்பயிர் விவசாயத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் விவசாய மண்ணாகும். இரு நூற்றாண்டு கால இந்த மண்ணின் மக்கள் காணி சீர்திருத்தச்சட்டத்தால் காணாமலடிக்கப்பட்டனர்! கிராம விஸ்தரிப்புத் திட்டத்தால் தோட்டங்கள் துண்டாடப்பட்டன.கிராமங்கள் உருவாகின. நிலமிழந்த மக்கள் தொழில் இழந்தனர்.....நிலம் பெற்ற சிங்கள கிராமவாசிகள் சிறுதோட்டப் பண்ணையார்களாகினர்! தோட்டங்களை நிர்மானித்தவர்கள் , இந்தப் புதிய பண்ணையார்களிடம் கூலிக்காக வேலை கேட்டு நின்றனர்!
இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் , சொந்த மக்களை ஒன்றுத் திரட்டி சட்டத்தை எதிர்த்துப் போராட முடியாதத் தோல்வியில்..... பலியாகிப் போன மக்களை விட்டு ...அவர்களைக் காப்பாற்ற முடியாமல் வலுவிழந்து. ... தனிவழி தேடி ....வெளி மாகாணங்களில் புலம் பெயர்ந்த "சமூகத்துரோகிகள்" என்ற பட்டத்தோடு வாழ்பவர்களில் நானும் ஒருவன் என்ற அடையாளத்தை இன்றுவரை சுமந்து நிற்பவர்களில் அல் அசூமத் என்ற புதியவார்ப்புதான் இந்தப் படைப்பாளன்.!
ஒரு நாடு செய்த அரச அநீதியை தன் நெஞ்சில் குமுழியிடும் கொதிப்பாக ......பன்னிரண்டு ஆவணங்களாக "வெள்ளைமரம்" என்ற கல்வெட்டில் செதுக்கி வைத்துவிட்டு மேல்மாகாணத்தில் நிரந்தரக் குடிமகனாக சுயமானத்துடன் வாழ்ந்து வருகின்றார் ! இந்த ஒரு தொகுப்பையே.....தான் வழி வந்த சமூகத்துக்கு கைம்மாறாகக் கொடுத்துச் சென்றுள்ளார்! இந்தத் தொகுப்பில் பதிக்கப்பட்டிருக்கும் கதைகளில் 'விரக்தி" என்ற கதையும் "ராம்ஸே" என்ற கதையும் மலையக மக்களின் துண்டிக்கப்பட்ட வரலாற்றை இந்த சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வரை பேசிக்கொண்டிருக்கும்!
தேயிலை...றப்பர் விவசாயத்தைப் பேணி வளர்க்கும் தொழிலாளருக்கப்பால் கண்காணிக்கும் நிர்வாகத் துறை ஊழியர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் "அறுவடை கனவுகள்" என்ற நெடுங்கதையை 23 கம்பெனிகளும் தோட்டங்களைக் குத்தகைக்கு கொடுத்த அரசாங்கமும் கற்றுக்கொள்ள வேண்டிய பாட நூலாகும்.!
அல் அஸூமத் ஒரு சிறுகதை ஆசிரியனுக்கப்பால் ..... ஒரு நெடுங்கதை ஆசிரியனுக்கப்பால்....தமிழ்ப்புலமை கொண்ட கவிஞனாக....... அடையாளமாகியவர்.
நூல் வெளியீட்டாளராகிய இப்படைப்பாளர் , இஸ்லாத்தைத் தழுவியதன் பின்னர் ,அவரது படைப்புலகம் புதியத் திசைகளில் பயணிக்கத் தொடங்கியது.. இஸ்லாமிய சமய விழுமியங்கள் பற்றி கணிசமான படைப்புக்களைத் தந்துள்ளார்.
இவை தவிர்ந்து. "புலராப் பொழுதுகள் "(நெடுங்கதை).) "அமார்கவாசம்" (நெடுங்கதை) "அறுவடைக் கனவுகள்" (நெடுங்கதை) "மலைக்குயில் " (கவிதைத் தொகுப்பு.).. கவிச்சரம்...குரல் வழிக் கவிதைகள்.. "யாப்பியலுரை (. ஆய்வுக் கட்டுரை) ஆயன்னை..யம்மா..தாய் " (சிறுகதைத் தொகுப்பு.).. "வரவுக்கவிதைகள் வளமுற.... " "அவள் பெய்கிறாள்..." (மலையாள சிறுகதையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு... ) " பிலால் காவியம்"(இஸ்லாத்தை விரும்பிய ஒரு நீக்ரோ கறுப்பு அடிமையின் துயரக் கதையையும் உயர்ந்த கதையையும் பாடியக் காவியம்.) "உலகப் பேரொளி இறைதூதர்" (ஒரு லட்சம் இந்திய பணமுடிப்பு பெற்ற நூல்) "இஸ்லாமிய வரலாறு " (மூன்று பாகங்கள்) என இந்தப் படைப்பாளர் பதினெட்டு படைப்புக்களை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அர்ப்பணம் செயதுள்ளார். அந்தப் படைப்புக்களையும் விலாவாரியாக இங்கே விவரித்தால் கட்டுரை நீண்டு விடலாம்!
இந்த எழுத்தாளனின் படைப்புக்கள் யாவும் இலங்கைத் தமிழ் இலக்கியத் தளத்தில் பெரிதாகப் பேசப்பட வேண்டியவை! மன விசாலம் கொண்டவை! ஆழமான திறனாய்வுக்குட்பட்டவை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக