தேங்காய் + எண்ணெய் = தேங்காயெண்யெண் என்று பலரும், நான்கூட இன்றுவரை சொல்லிவருவதே வழக்கமாக உள்ளது. என்றாலும் இவ்வாறு சொல்வதில் பிழையுள்ளது என்று ஆழ்மனதில் பல காலங்களாக வந்துபோகிறது. என்றாலும், ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்றாங்கு தேங்காயெண்ணெய் என்றே சொல்லி வருகிறோம்.
பழந்தமிழில் எண் என்றால் எள் என்றாகும். ஆகவே எண்ணெய் என்றாலே எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய் ( எள்+நெய் ) என்றாகியது. பின்நாளில் எல்லா எண்ணெய் (OIL) வகைகளுக்கும் உரிய ஒரு பொதுப் பெயராகிவிட்டது. எண்ணெய் என்பதுதான் சரியான வார்த்தை.
முதலில் தேங்காய் நெய், கடலை நெய், ஆமணக்கு நெய், வேப்ப நெய், கடுகு நெய், இன்னும் ‘ஏதாவது இருப்பின்’ ‘அந்த நெய்’, என்றுதான் இருந்தது. காணும் இடமெல்லாம் நந்தலாலா என பாரதி பாடியது போல், செக்கில் ஆட்டியதெல்லாம் எண்ணெய் எனத் தமிழர் நெகிழ்ந்து அழைக்கத் தலைப்பட்டனர் போலும்.
நகைக்கத்தக்க விடயம் யாதெனின், தேங்காய் எண்ணெய் எனும் போது, தேங்காயுடன் எள்ளும் சேர்த்து உருவாக்கிய நெய்யே தேங்காயெண்ணெய் ஆகும்.
‘மண்ணெண்ணெய்’ என்ற சொல்லும் இவ்வாறே. மண்ணிலிருந்து எடுக்கும் நெய் - மண்ணெய் ஆக இருக்க வேண்டும். இன்று மண்ணும் எள்ளின் நெய்யும் கலந்து மண்ணெண்ணெய் என்று கூறுகிறோம்.
கால மாற்றத்தினால் மரபாகிவிட்டது தேங்காயெண்ணெய்யும் மண்ணெண்ணெய்யும்.
மொழி உருவாக்கத்தில் முதலில் ஒரு கருத்தை விதப்பாக (specific) குறித்து பிறக்கும் சொற்கள் , காலப்போக்கில் அது தொடர்பான பல சொற்கள் தோன்றும் போது (மொழி வளர்ச்சியின் காரணமாக) விதப்புச் சொல் பொதுமைச் சொல்லாக (Common) மாற்றம் பெறுகிறது.
இவ்வாறு விதப்புப் பெயர், பொதுப் பெயராக மாறுவதை பல சொற்களில் அடையாளம் காண முடியும்.
உதாரணத்திற்கு பொன் - என்ற சொல் முதலில் தங்கத்தைக் குறித்ததாகத் தோன்றி, பின்னர் மேலும் பிற மாழைகள் (Metal) கண்டறியப் பட்டபோது (இரும்பொன், செம்பொன்) பொதுப் பெயராக மாறி சொல்லின் இறுதிக்கு நகர்ந்து விட்டது.
அதே வகையில்... எள் - என்ற தானியம் தந்த சொல்லே 'எண்ணெய்'.
மாட்டின் பாலில் இருந்து பெறப்பட்ட நெய்தான் நம் பண்டைத்தமிழர் கண்டறிந்து பயன்படுத்திய நெய். மிருதுவான, கொழகொழப்பான திரவங்களை அதன் நெகிழும் பண்பையொட்டி 'நெய்' எனப் பெயரிட்டழைத்தனர். வெண்மையாக இருக்கின்ற நெய், வெண்ணெய் ஆனது..
தாவர எண்ணெய் கண்டுபிடிக்கப்படாத அன்றைய காலங்களில் சமையல், மருத்துவம் மட்டுமல்லாது அனைத்து பொது உபயோகத்திற்கும், விளக்கு எரிவதற்கும் கூட பசுவின் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அடுத்து மாட்டுப்பாலில் பெற்றதை ஒத்த நெய்யை தானியங்களின் மூலமாகவும் பெற இயலும் எனக் கண்டறிந்த போது - முதன்முறையாக எள்ளிலிருந்து பெறப்பட்ட நெய் என்பதால் எள் + நெய் எனப் பெயரிட்டனர் நம் தமிழர்கள்.
இவ்வாறு எண்ணெய் = எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் கொழுப்பைக் குறித்த எண்ணெய் எனும் சொல், பிற்காலத்தில் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.
எது எவ்வாறாயினும் நாம் தேங்காயெண்ணெய் என்பது பிழையே. தேங்காய் நெய்யென்றே அழைக்கப்பாலது. என்றாலும், நாம் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. அங்ஙனமின்றி, தேங்காய் நெய் என்று புதிதாக அழைத்தால், நம்மவர் நம்மை இழிந்துரைப்பர்.. தமிழ்ப்பேதை / தமிழ்ப்பைத்தியம் என அழைப்பர் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.
- கலைமகன் பைரூஸ்
-------------------------------------------
எள்ளின்கண் ணெடுப்பாய் வந்ததுவே எண்ணெய்யாம்
மண்ணின்கண் மாந்தரெடுப் பதுதானே மண்ணெய்யே
எள்ளுந்தெங் குமிணைந்தின் றுதேங்காயெண் ணெய்யாமே
எடுத்துரைத்திடின் எடுப்பரெம்மீ திழுக்குத்தான்
-கலைமகன் பைரூஸ்
-------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக