📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 7 மே, 2025

மீன் பாடுமா?

மரபு என்பது தொன்றுதொட்டு வருவதைக் குறிக்கும்.  அன்றைய தமிழ் மக்கள் அன்றைய காலம் தொட்டு உலக உயிர்களின் ஒலிகளுக்கு  எவ்வாறு பெயர் குறிப்பிட்டார்களோ   இன்றுவரை அவையவை அப்பெயர் கொண்டு அழைத்தால் அதுவே 

தொனிமரபு /ஒலிமரபு எனப்படும். நாய் கத்தியது என்று யாரும் கூறுவதில்லை. நாய் குரைத்தது என்று கூறுவதே வழக்கம். காகம் கூவும் என்றோ

 குயில் கரையும் என்றோ யாரும் கூறுவதில்லை. அவ்வாறு கூறுவது மரபன்று. மாற்றமாக  காகம் கரையும், குயில் கூவும் எனக் கூறுவதே (ஒலி) மரபு. மேலும், தம் காதுகளால் கேட்க முடியாதவற்றுக்கு தமிழ் மக்கள் பெயர் வைக்கவில்லை. 



பறவைகளில் காகம் கரையும், குயில் கூவும், புறா குறுகுறுக்கும், கிளி பேசும், ஆந்தை அலறும், மயில் அகவும் என்றெல்லாம் கூறத் தெரிந்த மனிதனுக்கு கொக்கு என்ன செய்யும்? பருந்து என்ன செய்யும்? எனக் கூறத் தெரியாமல் இல்லை. 

மிருகங்களில் நாய் குரைக்கும், குதிரை கனைக்கும், யானை பிளிறும், சிங்கம் கர்ச்சிக்கும், புலி உறுமும், நரி ஊளையிடும் எனக் கூறத் தெரிந்த தமிழ் மக்களுக்கு  மான், மரை என்ன செய்யும்? எனக் கூறத் தெரியாமல் இல்லை.


பூச்சியினங்களில் வண்டு இரையும், தேனீ ரீங்காரிக்கும் எனக் கூறத் தெரிந்த  தமிழ் மக்களுக்கு எறும்பு என்ன செய்யும்? சிலந்தி என்ன செய்யும்? எனக் கூறத் தெரியாமல் இல்லை.  


ஊர்வனவற்றில் பாம்பு சீறும், பல்லி சொல்லும் எனக் கூறத் தெரிந்த தமிழ் மக்களுக்கு ஆமை என்ன செய்யும்? முதலை என்ன செய்யும்? எனக் கூறத் தெரியாமல் இல்லை.  


இவற்றை ஏன் அன்றைய தமிழ் மக்கள் கூறவில்லை என்றால் சிலவற்றின் தொனிகள் காதிலே கேட்பதேயில்லை, சில மிக மிக அரிதாகவே ஒலியெழுப்புகின்றன. அதனை வைத்துக்கொண்டு அவற்றை ஒலி மரபு என்று கூறிவிட முடியாது. 


அவ்வாறே மீனும். ஆழ்கடலில் வாழும் திமிங்கிலத்தின் ஒலி பற்றியும் டொல்பின் மீனின் ஒலி பற்றியும்  நவீன

விஞ்ஞானம் குறிப்பிடுகிறது. மேலும், எனது நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக மீன்பிடிக்கச் சென்றபோது தூண்டிலில் அகப்பட்ட மீன்கள் ஒலியெழுப்புவதைக் கண்களால் கண்டும் காதால் கேட்டும் இருக்கிறேன். வெவ்வேறு வகைப்பட்ட மீன்கள் வெவ்வேறு வகையாக ஒலியெழுப்புவதனால் மீன்களுக்கென்று பொதுவாக ஓர் ஒலிமரபைக் கூற முடியாது.


 மீன்பாடும் தேன் நாடு என நடைமுறையில் பிரசித்திபெற்ற ஒரு தொடர் இருப்பதனால் அதை வைத்துக் கொண்டு  மீன் பாடும் எனக் கூற முடியாது. அது மரபேயன்று. 


மட்டக்களப்பு வாவியின் ஆற்றலைகளின் அசைவுகளின் மூலமாக ஏற்படும் ஒலிகளின் இனிமையினைக் கேட்ட கவிஞர்கள் தன் கவிதையை நயம் மிக்கதாக்க மீன்பாடும் தேன் நாடு எனக் குறிப்பிட்டிருக்கலாம். இதை வைத்துக்கொண்டு மீன் பாடும் எனக் கூறவே முடியாது. இதைத்தான் மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.


சில சங்க இலக்கியங்களில் வண்டு ரீங்காரம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. வண்டு இரையும். ரீங்காரிப்பது தேனீ. அப்படியிருக்க வண்டு ரீங்காரிக்கிறது எனக் குறிப்பிடுவது கவிஞன் தன் பாடலை நயம் மிக்கதாக்கவேயாகும். இது மரபு வழு.


மட்டக்களப்பு வாவியில் மீன்கள் பாடுவதாக குறிப்பிடுவதும் அவ்வாறே. அது ஒலி மரபன்று. வேண்டுமாயின் மரபு வழு எனக் குறிப்பிடலாம்.


- றபீக் மொஹிதீன் B A (Hons)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக