எனது அன்புத் தமிழ் 'தமிழ்ச்சுடர்' உறவுகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வணக்கம்!
நான் நேசிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியர்களில் ஒருவர் திருமிகு. றபீக் மொஹிதீன் ஆசிரியர் அவர்கள்.
அவர் தமிழ் மொழிப் பாடத்துடன் தொடர்புடைய பல துணைப்பாட நூல்களின் ஆசிரியர். அவர் 'வட்ஸப்' செயலியில் 'தமிழ்மொழி ஆசிரியர்கள்' எனும் பக்கத்தினூடாக தமிழ்மொழி சார்ந்த பல சிக்கல்களுக்கு உடனுக்குடன் தௌிவான பதில்களை
வழங்கி, ஆசிரியப் பெருந்தகைகளின் அறிவுக்கு விருந்தளிக்கின்றார். தற்போதைக்கு 474 உறுப்பினர்கள் அந்தப் பக்கத்தில் பயன்பெற்று வருகின்றனர். அந்தப் பக்கத்தில் தேநீர் சார்ந்த, அதாவது தேநீர் எனும் சொல்லைப் பிரிக்கும்போது எவ்வாறு அமையும் என்ற கேள்வியொன்று எழுந்து, அதற்குப் பலரும் பலவாறு தங்களது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்கள்.
அந்தப் பகிர்வுகளில் ஆய்வு ரீதியாக அவர் தந்திருந்த விளக்கம் உள்ளத்தைத் தொட்டதனால் அதனை இங்கு இற்றைப்படுத்துகிறேன். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!' என்றாங்கு.
-தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
றபீக் மொஹிதீன் ஆசிரியரின் ஆய்வு
முதலில் தேநீர், தேயிலை, தேன் ஆகிய சொற்களைப் பற்றி அறிந்து கொள்ள முன் அவை குறிக்கும் பொருள்களைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
தேநீரின் தாயகம் சீனாவாகும். "தேயிலை, தேநீர்" ஆகிய சொற்கள், சீன மொழியிலிருந்து பண்பாட்டு மாற்றத்தின் ஊடாக தமிழுக்குள் நுழைந்து தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்க் கலைச் சொற்களாகும். ஆனால், தேன் எனும் சொல் அடிப்படையிலேயே தமிழ்ச் சொல்லாகும்.
தேனீ ஓர் ஈ இனமாகும். தேனை உற்பத்தி செய்து எமக்கு ஈயும் ஈ (தேன் + ஈ =) தேனீ எனப்பட்டது.
தேனுக்கு மது, தேறல், கள், நறவு போன்ற வேறு பெயர்களும் உண்டு. ‘மது’ என்றால் ‘இனிமை’ என்று பொருள். தேன் இனிமையாக இருப்பதனால் இப்பெயர் பெற்றது. இது நேரடியாகவே தேனைக் குறிக்கும் சொல். வண்டுக்கு ‘மதுகரம்’ என்றோர் பெயருண்டு. அது தேனை நுகர்வதாலேயே அப்பெயர் பெற்றது. ‘தேறல்’ என்பது அழுக்குகள் நீக்கப்பட்ட தெளிந்த தேனைக் குறிக்கும் சொல்லாகும்’. தேனடை நிரம்பி வழியும்போது அது ‘கள்’ என்ற பெயர் பெற்றது. ‘நறவு’ என்பது புளிக்க வைக்கப்பட்ட தேனாகும்.
இதற்குமேலும் துல்லிய, ஆய்வு நோக்கிலான விளக்கங்கள் தேனுக்கு உண்டு. போரில் வெற்றிகண்ட வீரர்கள் ‘கள்ளுண்டு’ களித்தாடினர், மதுவுண்டு மயங்கினர் என்றால், நாம் இவற்றினை இன்று சாராயத்திற்கொப்பான மதியை மழுங்கடிக்கக்கூடிய ஒரு மட்டமான பொருளாகக் கருதிவருகிறோம். உண்மையில் சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற மது,கள், தேறல், நறவு ஆகிய சொற்கள் யாவும் தேனின் பல நிலைகளை அடிப்படையாகக் கொண்ட சொற்களாகும்.
இந்தத் தேனோடு நீர் கலந்து யாரும் பருகுவதில்லை. அதனால் தேன் + நீர் = தேனீர் என்ற ஒன்று இல்லை. ஆனால், தேநீர் என்ற ஒன்று இருக்கிறது. தேநீர் எனும் சொல் தே+இலை+நீர் ஆகிய சொற்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்க் கலைச் சொல்லாகும். பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலோ இடைக் கால இலக்கியங்களிலோ தேநீர் பற்றிய செய்திகள் இல்லை. தமிழர்கள் தேனருந்தியதாக தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படுகின்றனவேயொழிய தேநீர் அருந்தியதாக எந்த இலக்கியங்களிலும் சொல்லப்படவில்லை. அப்படியாயின் தேநீர் என்ற சொல் எப்பொழுது தமிழுக்கு அறிமுகமானது என்பதை அறிந்து கொள்வது மிக இன்றியமையாதது.
தே+இலை + நீர் ஆகிய சொற்களின் இணைவே தமிழில் தேநீர் என்ற சொல்லின் உருவாக்கத்திற்கு காரணமாகும். தேயிலை என்ற ஓர் இலை வகையைப் பயன்படுத்தி அதில் (சுடு) நீரைக் கலந்து அருந்திய பானமே தேநீராகும்.
தேநீரின் தாயகம் சீனாவாகும். சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது
கி.மு.2737ஆம் ஆண்டு சீன அரசரான Shen Nong தான் பருகிக் கொண்டிருக்கும் வெந்நீரில் தேயிலை இலைகள் விழ அவற்றோடு அவர் அவ்வெந்நீரைப் பருக அவருக்கு அது ஒரு புத்துணர்வைத் தந்ததாக வரலாறு கூறுகிறது. அன்றிலிருந்து அவர் அச்செடியின் இலையை வெந்நீரோடு கலந்து குடித்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் இது ஒரு மருத்துவ பான மாகவே பயன்படுத்தப்பட்டது. காலப் போக்கில் அது சோர்வு நீக்கியாக மாறிவிட்டது.. அச்செடியின் இலையே தேயிவையாகும். இத்தேயிலைக்கு சீன மொழியில், "தே" என்றும் "சா - cha" என்றும் பெயர். "சா - cha" எனும் வழக்கு பின்னர் "சாயா" என பிற இந்திய மொழிகளிலும் மருவி அது இன்று தேநீரைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
சீனாவில் இத்தேயிலைச் செடி பின்னர் அதிகமதிகம் பயிரிடப்பட்டது. பின்னர் தேயிலையைப் பயன்படுத்தும் கலாசாரம் சீனாவிடமிருந்து ஜப்பான், கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. 8-ம் நூற்றாண்டில் ஜப்பான் தேயிலை மரபை ஏற்றுக்கொண்டு தனிப்பட்ட "tea ceremony" கலாசாரத்தை உருவாக்கியது.
17-ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள்,
குறிப்பாக போர்த்துக்கேயர்களும்
ஒல்லாந்தர்களும், சீனாவிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்யத் தொடங்கினர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தேயிலை இவ்வாறு ஜப்பான், கொரியா, வியட்நாம், போர்த்துக்கல், நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியது. இவற்றுள்
இங்கிலாந்து தேநீரைப் பருகும் முக்கிய நாடாக உருவெடுத்தது. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேயிலை இங்கிலாந்தில் பிரபலமானது.
1833இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி, சீனாவின் தேயிலை ஏற்றுமதி ஒப்பந்தத்தை இழந்தது. இதனால் இங்கிலாந்து சீனாவுடன் உள்ள வர்த்தக சிக்கல்களைத் தவிர்க்க, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் தேயிலை உற்பத்தியைத் தொடங்கியது.
-
- *Robert Bruce* என்பவர் 1823ல் அஸ்ஸாமில் உள்ள பழங்குடி மக்களிடம் இருந்து தேயிலைச் செடியைக் கண்டுபிடித்தார். பிறகு அவரின் சகோதரர் *Charles Alexander Bruce* அந்தத் தேயிலையை ஆராய்ச்சி செய்து பயிரிடத் தொடங்கினார்.
- இந்தியாவில் *Assam* மற்றும் *Darjeeling* பகுதிகளில் தொழில்முறை தேயிலைத் தோட்டங்கள் நிறுவப்பட்டன.
தேயிலை இந்தியாவுக்கு *1830களில்* அறிமுகமாகி, இப்போது இந்தியா உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
இலங்கையில், 1867ல் James Taylor என்பவர் முதல்முறையாக கண்டி நகரில் வணிக நோக்கில் தேயிலையை பயிரிட்டார். பின்பு இது கென்யா, உகண்டா, தாய்லாந்து, இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளுக்கும் பரவியது.
இன்று உலகிலேயே சீனா, இந்தியா, இலங்கை, கென்யா ஆகிய நாடுகள் முக்கிய தேயிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன. தேநீர் உலகில் இரண்டாவது பெரிய பயன்பாட்டு பானமாக உள்ளது. (முதலிடத்தில் நீர் உள்ளது).
இவற்றிலிருந்து நோக்குகின்ற போது தேயிலை ,தேநீர் என்பன தமிழுக்கு சொந்தமில்லை என்ற உண்மை நிரூபணமாகிறது. இம்மொழியாட்சி தமிழில் எவ்வாறு நுழைந்தது என்பதனை இனி ஆராய்வோம்.
"தேயிலை, தேநீர்" ஆகிய சொற்கள், சீன மொழியிலிருந்து பண்பாட்டு மாற்றத்தின் ஊடாக தமிழுக்குள் நுழைந்தவையாகும். சீன மொழியில் தேநீர் *Cha* அல்லது *Te* எனக் குறிப்பிடப்படுகிறது.
சீனாவின் மினான் எனும் கிளைமொழியில் (Min Nan dialect)* அதை "*Te*" என்று உச்சரிக்கிறார்கள்.
அதே Te என்ற பெயர் தான் ஐரோப்பிய மொழிகளுக்கு ஆங்கிலத்தில்: *Tea* எனவும், பிரெஞ்சு மொழியில்: *Thé*, ஒல்லாந்து மொழியில்: *Thee* எனவுமாக பரவியது.
தமிழில் தேநீர் என்ற சொல்லின் முதலில் உள்ள "தே" என்பது அந்தச் சீனச் சொல் "Te"யைப் பற்றிய ஒலி அடிப்படையான நுழைவாகும்.
ஏனெனில், தேநீர் என்பது ஒரு செடியின் இலைகளை சாறாகச் சுழற்றிப் பருகும் பானமாகும்.
எனவே, தே + இலை = "தேயிலை" என்ற சொல் உருவாகியது. இது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு கலைச்சொல் ஆகும். தமிழில் புகுந்த "தே" என்ற சீனச் சொல்லோடு
இலை என்ற சொல்லையும் சேர்த்து தேநீர் தயாரிக்க பயன்படும் இலை தேயிலை எனப்பட்டது. இது மொழிகளுக்கிடையிலான கலாசாரப் பரிமாற்றத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அங்கு "தே" என்பது பானம், "இலை" என்பது அதன் மூலப்பொருள். தமிழ் மொழி இயற்கைச் சொற்களை பொருள் சார்ந்து உருவாக்கும் பழக்கம் கொண்டதாதலால் தேயிலையில் இருந்து உருவாக்கப்பட்ட பானம் தேநீர் என்றழைக்கப்பட்டது. தற்பொழுது தேநீர் என்ற சொல்லில் தே - நீர் ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள இலை என்ற சொல் அகற்றப்பட்டு தேநீர் என புணர்ச்சி விதிக்கேற்ப வழங்கப்படுகிறது. அவ்வாறே இச்சொல்லை பிரிக்கின்றபோது புணர்ச்சி விதிக்கேற்ப தேயிலை + நீர் என பிரிக்கப்படுகிறது.
இதுதான் காரணமேயொழிய ஜெய ரஞ்சித் சேர் அவர்கள் சொல்வது போல உயர்வு கருதி தேவர், தேயம் , தெய்வம் ஆகிய தொடர்பு அடிப்படையில் தேநீர், தேயிலை ஆகிய சொற்கள் உருவாகவில்லை. தே என்ற சொல்லுக்கு இவை பொருள்களாக இருக்கின்றனவே தவிர சீன மொழியில் உள்ள "தே" என்ற சொல்லுக்கும் பொருளுக்கும் தமிழ் மொழியில் உள்ள "தே" என்ற சொல்லுக்கும் பொருள்களுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.
இதுவே எனது ஆராய்ச்சி முடிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக