📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 17 ஜனவரி, 2026

விலங்குகளின் ஒலிமரபு | றபீக் மொஹிடீன்

தொனிமரபு / ஒலிமரபு தொடர்பாக நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். மரபு என்பது தொன்றுதொட்டு வருவதைக் குறிக்கும்.  அன்றைய தமிழ் மக்கள் அன்றைய காலம் தொட்டு உலக உயிர்களின் ஒலிகளுக்கு  எவ்வாறு பெயர் குறிப்பிட்டார்களோ   

இன்றுவரை அவையவை அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டால் அதுவே தொனிமரபு /ஒலிமரபு எனப்படும். 

அன்றைய தமிழ் மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார்கள். இயற்கையிலிருந்து அவர்களையோ அவர்களிலிருந்து இயற்கையையோ பிரிக்க முடியாத அளவுக்கு இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தார்கள். 

குயிலின் ஒலியை கூவுதல் என்றார்கள். கிளியின் ஒலியை பேசுதல் என்றார்கள். இவர்கள் காகத்தின் ஒலியைக்  கரைதல் என்று சொன்னார்கள். வண்டின் ஒலியை இரைச்சல் என்றார்கள். தேனீயின் ஒலியை ரீங்காரம் என்றார்கள். இவை எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கிறது. இவை அனைத்தையும் அன்றைய தமிழர்கள் இவ்வுயிருள்ள இயற்கைப் பொருள்களுடன் வாழ்ந்து அவை எவ்வாறு ஒலி எழுப்புகின்றன என்பதனை ஆராய்ந்தே பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும், தம் காதுகளால் கேட்க முடியாதவற்றுக்கு  பெயர் வைக்கவில்லை. 

பறவைகளில் காகம் கரையும், குயில் கூவும், புறா குறுகுறுக்கும், கிளி பேசும், ஆந்தை அலறும், மயில் அகவும். 

மிருகங்களில்    சிங்கம் கர்ச்சிக்கும், புலி உறுமும். பூச்சியினங்களில் வண்டு இரையும், தேனீ ரீங்காரிக்கும். 

ஊர்வனவற்றில் பாம்பு சீறும், பல்லி சொல்லும்.

காகம் கூவும் என்றோ  குயில் கரையும் என்றோ யாரும் கூறுவதில்லை. அவ்வாறு கூறுவது மரபன்று. மாற்றமாக  காகம் கரையும், குயில் கூவும் எனக் கூறுவதே (ஒலி) மரபு.  இவ்வாறு கூறத் தெரிந்த மனிதனுக்கு கொக்கு என்ன செய்யும்? பருந்து என்ன செய்யும்? எனக் கூறத் தெரியாமல் இல்லை. மான், மரை என்ன செய்யும்? எனக் கூறத் தெரியாமல் இல்லை. எறும்பு என்ன செய்யும்? சிலந்தி என்ன செய்யும்? ஈ என்ன செய்யும்? எனக் கூறத் தெரியாமல் இல்லை.   ஆமை என்ன செய்யும்? முதலை என்ன செய்யும்? எனக் கூறத் தெரியாமல் இல்லை.  

இவற்றை ஏன் அன்றைய தமிழ் மக்கள் கூறவில்லை என்றால் சிலவற்றின் தொனிகள் காதிலே கேட்பதேயில்லை, சில மிக மிக அரிதாகவே ஒலியெழுப்புகின்றன. மேலும், ஒரே ஒலியையன்றி வெவ்வேறு ஒலிகளையும் எழுப்புகின்றன. அதனை வைத்துக்கொண்டு அவற்றை ஒலி மரபு என்று கூறிவிட முடியாது. 

அவ்வாறே மீனும். ஆழ்கடலில் வாழும் திமிங்கிலத்தின் ஒலி பற்றியும் டொல்பின் மீனின் ஒலி பற்றியும்  நவீன

விஞ்ஞானம் குறிப்பிடுகிறது. மேலும், எனது நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக மீன்பிடிக்கச் சென்றபோது தூண்டிலில் அகப்பட்ட மீன்கள் ஒலியெழுப்புவதைக் கண்களால் கண்டும் காதால் கேட்டும் இருக்கிறேன். வெவ்வேறு வகைப்பட்ட மீன்கள் வெவ்வேறு வகையாக ஒலியெழுப்புவதனால் மீன்களுக்கென்று பொதுவாக ஓர் ஒலிமரபைக் கூற முடியாது.

மீன்பாடும் தேன் நாடு என மட்டக்களப்பு நகரில் நடைமுறையில் பிரசித்திபெற்ற ஒரு தொடர் இருப்பதனால் அதை வைத்துக் கொண்டு  மீன் பாடும் எனக் கூற முடியாது. அது மரபேயன்று. 

மட்டக்களப்பு வாவியின் ஆற்றலைகளின் அசைவுகளின் மூலமாக ஏற்படும் ஒலிகளின் இனிமையினைக் கேட்ட கவிஞர்கள் தன் கவிதையை நயம் மிக்கதாக்க மீன்பாடும் தேன் நாடு எனக் குறிப்பிட்டிருக்கலாம். இதை வைத்துக்கொண்டு மீன் பாடும் எனக் கூறவே முடியாது. 

சில சங்க இலக்கியங்களில் வண்டு ரீங்காரம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. வண்டு இரையும். ரீங்காரிப்பது தேனீ. அப்படியிருக்க வண்டு ரீங்காரிக்கிறது எனக் குறிப்பிடுவது கவிஞன் தன் பாடலை நயம் மிக்கதாக்கவேயாகும். இது மரபு வழு. மட்டக்களப்பு வாவியில் மீன்கள் பாடுவதாக குறிப்பிடுவதும் அவ்வாறே. அது ஒலி மரபன்று. வேண்டுமாயின் மரபு வழு எனக் குறிப்பிடலாம்.

இனி, முடிந்தவரை விலங்குகளின் ஒலிமரபை ஒவ்வொன்றாக ஆராய்ந்து எழுதுகிறேன். 


 1. குயில் கூவும் 

 ஆண் குயில்களே கூவும். ஆண் குயில்கள் பெண் குயில்களைக் கவர, குறிப்பாக வசந்த காலத்திலும், இனப்பெருக்கக் காலத்திலும் தொடர்ந்து கூவுகின்றன. இது அவற்றின் கவர்ச்சிப் பாடலாக அமைகிறது. மேலும்,  தங்கள் பிரதேசத்தை வரையறுக்கவும், மற்ற குயில்களை எச்சரிக்கவும் 

  குயில்கள் தங்கள் இனத்துடன் தொடர்புகொள்ளவும், விடியலை அறிவிக்கவும் இது கூவுகின்றது.

கூ... கூ... என்ற குயிலின் 

ஒலியைக் கேட்டே  குயில் கூவும் என அன்றைய தமிழர்கள் குறிப்பிட்டார்கள். மேலும், குயில் ஆங்கிலத்தில் "Cuckoo" என்று அழைக்கப்படுவதற்கும் தமிழர்கள் குயிலுக்கு வைத்த கூ கூ என்ற ஒலிமரபே காரணம்.

 2. கிளி பேசும் 

இயற்கையோடு இரண்டறக் கலந்த மனிதன் அதில் ஒரு பிரிவான பறவைகளோடு தன் வாழ்வினை பகிர்ந்திருக்கிறான். அவற்றுள் ஒன்று கிளி.   கிளிகள் தமக்கிடையே தம் மொழிகளில் பேசிக்கொள்வதனையும்  மனிதர்களைப் போன்று பேசுகின்ற கிளிகளின் திறனையும்  மனிதன் அறிந்து  அவற்றைப் பேசப் பழக்கி அதனை பேச வைத்திருக்கிறான்.  

கிளிகள் மனிதர்களைப் போல  பொருள் தெரிந்து உண்மையாகப் பேசுவதில்லை; அவை மனிதர்களின் பேச்சொலிகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும்  திறனைப் பெற்றிருப்பதால் கேட்பதற்கு அவை பேசுவது போலத் தெரிகிறது. அவற்றின் சிறப்பு வாய்ந்த குரல், நாக்கு மற்றும் மூளை அமைப்பு, ஒலிகளைப் புரிந்துகொண்டு அவற்றை மீண்டும் உருவாக்க உதவுகின்றன, குறிப்பாகப் பழக்கப்படுத்தப்பட்ட கிளிகள் மனிதர்களின் வார்த்தைகளுடன் தங்கள் அனுபவங்களைப் பொருத்திப் பேசுகின்றன. கிளிகள் புத்திசாலித்தனமானவை, ஒலிகளைக் கற்கும் திறன் கொண்டவை மற்றும் மனிதர்களுடன் பழகும் போது, சொல்லிக் கொடுக்கப்பட்ட வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும் வல்லமை படைத்தவை. அதனாலேயே கிளி பேசும் என்ற மரபு உருவானது.

 3. புறா குறுகுறுக்கும் 

புறா "குறுக் குறுக்"

என்றே  ஒலியெழுப்பும். புறா ஒலி எழுப்பும் விதம் 'குறுகுறுத்தல்' என்று தமிழில் மரபாகக் குறிப்பிடப்படுகிறது. எனவேதான், "புறா குறுகுறுக்கும்" என்றார்கள். 

 4. ஆந்தை அலறும் 

ஆந்தைகள் பகலில் உறங்கி, இரவில் இரை தேடுகின்றன. இரவின் அமைதியில் திடீரென்று கேட்கும் 'ஹூ-ஹூ' என்கிற ஒலி பலரையும் அச்சத்தில் ஆழ்த்துவது உண்டு. இதுவே ஆந்தையின் அலறல் ஒலியாகும். இந்த அலறல் ஆந்தையின் அடிப்படை தொடர்பு முறைகளில் ஒன்று.

 ஆபத்தை உணரும் போது, ஆந்தைகள் சிறகுகளை விரித்து, மிகப் பெரியதாகக் காட்டிக்கொள்கின்றன. இது எதிரிகளை அச்சுறுத்தவும், மற்ற ஆந்தைகளுக்கு ஆபத்து குறித்த எச்சரிக்கையாகவும் அமைகிறது. இதன்போது ஆந்தைகள் ஏற்படுத்தும் ஒலியே அலறல் ஒலி எனப்படுகிறது. இதனாலேயே ஆந்தை அலறும் என்கிறோம். 

 5. மயில் அகவும் 

மயில் அகவும். அகவுதல் என்றால் அழைத்தல் என்று பொருள். ஆண் மயிலே அகவும்.  மழை வரும் காலங்களிலும் இனப்பெருக்க காலங்களிலும் ஆண் மயில்கள் தங்கள் பெண்மயில்களை ஈர்க்க மகிழ்ச்சியுடன் அழைக்கும். இது அகவும் எனப்பட்டது.. இது மழைக்காலத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதனால் தான் மயில் அகவும் எனக் கூறப்பட்டது. 

(இதை ஒரு நீண்ட கட்டுரையாக எழுத நினைத்தேன். அதனாலேயே இத்தனை  நாட்கள் சென்றன. ஆனாலும் நேரமின்மையினாலும் நேரம் போதாமையினாலும் முழுமைப் படுத்த முடியவில்லை. ஆனால்,  இன்ஷா அல்லாஹ், இதனைக் கட்டுரையாகவே எழுதி முழுமைப்படுத்துவேன். இப்பொழுதைக்கு குழுமத்தில் நீண்ட நாட்களாக வினவப்பட்ட வினாவுக்கு விடையளிக்கிறேன். )

மானின் ஒலி மரபு. 

மான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு வகையான ஒலியை எழுப்பும். அதனால் தான் நம் முன்னோர் மானின் ஒலி மரபு பற்றி துல்லியமாக குறிப்பிடவில்லை. மான் சில வேளைகளில் முயல் மற்றும் அணில் போன்று கீச்சிடவும் செய்யும். சில வேளைகளில்  குதிரை போன்று கனைக்கவும் செய்யும். சிலவேளை ஆந்தைகள் போன்று அலறவும் செய்யும்.

மான் எழுப்பும் ஒலிக்குச் சரியான மரபுச் சொல்லை இதுவரை எந்தவொரு இலக்கணமும் குறிப்பிட முடியாமல் போனதற்கு இதுவே காரணமாகும். ஏனெனில், மான்கள்  ஆபத்து நேரும்போது சத்தமிட்டு 

அலறும். ஆண் மான்கள் பெண் மான்களை ஈர்க்கும்போது ஒரு வகையாக கனைக்கும், பெண் மான்கள் குட்டிகளை அழைக்கும்போது ஒரு வகையாக கீச்சிடும். எனவே, மான் ஒலிப்பது   அவற்றின் தொடர்பாடல் முறைக்கு ஏற்ப அமைகிறது. எனவே தான் மான் தொடர்பாக அதனது ஒலி மரபு பற்றி துல்லியமாக கணித்துக் கூற முடியாது இருப்பதனால் அதன் ஒலி மரபு பற்றி இதுவரை யாரும் எந்த நூலிலும் குறிப்பிடவில்லை.

8888888

(தமிழ் ஆசிரியர்கள் எனும் புலனக் குழுமத்தில் ஆசிரியர் றபீக் மொஹிடீன் பதிவிட்டிருந்த ஆய்வு ரீதியான கட்டுரை இது. காலத்தில் நின்று நிற்க வேண்டும் எனக் கொண்டு 'தமிழ்ச்சுடர்' தளத்தில் இற்றைப்படுத்தப்படுகிறது. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days