ஐயம் - 3
'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் எது? அந்த அடிகளை இயற்றியவர் யார்? அந்த அடி இடம்பெறும் கவிதையின் தலைப்பு யாது?
தௌிவு
-----------
'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் 'பாரதியார் கவிதைகள்' ஆகும். அந்த அடி கொண்ட செய்யுளை இயற்றியவர் பாரதியார் ஆவார்.
பாரதியாரின் தேசிய கீதங்களில் ஒன்றான 'பாரத சமுதாயம்' எனும் தலைப்பிலான கவிதையிலேயே இவ்வடி இடம்பெற்றுள்ளதைக்
காணவியலும்.'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' பாடலடி இடம்பெற்றுள்ள பாடல் இதோ...
பாரத சமுதாயம்
ராகம் - பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம்
பல்லவி
- பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
- பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத)
அனுபல்லவி
- முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
- முழுமைக்கும் பொது உடைமை
- ஒப்பிலாத சமுதாயம்
- உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)
சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத)
இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத)
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத)
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக