📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 1

எட்டுத்தொகை இலக்கியம் எட்டு நூல்களை தன்னகத்தே கொண்டது. அவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பன அக நூல்கள். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்கள், பரிபாடல் அகமும் புறமும் இணைந்த நூலாகும்.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகப்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை”
என்னும் பழம்பாடல் எட்டுத்தொகை நூல்களை அறிமுகம் செய்கிறது. எட்டுத்தொகை நூல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை ஐந்திணைகளும் தன்னுள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் முப்பொருள்களைக் கொண்டவை.
1.நற்றிணை:
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்திருப்பது நற்றிணை. நல் 10 திணை என அமையும் ஐந்திணைகளான் அமைந்த நானூறு ஆசிரியப் பாக்களைத் தன்னகத்தே கொண்டது. இது ஒன்பது முதல் 12 அடிகளை எல்லையாகக் கொண்டிருக்கிறது. நற்றிணையைப் பாடிய புலவர்கள் 275 பேர்களாவர். பாடல்களால், தாங்கள் பாடிய பாடல்களில் இடம்பெற்ற தொடர்களால் புகழ்பெற்ற புலவர்கள் பலர் உள்ளனர்.
வண்ணப்புறக் கந்தரத்தனார் மலையனார், தனிமகனார், விழிக்கண் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிச்சேர் கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல்பாடிய மாதங்கீரனார் ஆகியோர் இத்திறத்தினராவர்.
நற்றிணை நூல் முதன்முதலாக 1914 ஆம் ஆண்டு பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் பதிப்பிக்கப்பட்டது. நற்றிணை ஐந்திணை ஒழுக்கங்களைச் சிறப்பாக எடுத்துக் கூறும் தன்மை பெற்றுள்ளதோடு, தமிழர் வாழ்க்கையின் அடிநாதமான பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.
நற்றிணைப் பாக்கள் பண்டையத் தமிழர்களின் அகவாழ்வின் மாண்பினை அறிந்து கொள்ளப் பயன்படுகின்றன.
“நின்ற சொல்லர் நீடுதோன் றினிய
ரென்று மென்றோள் பிரிபறி யலரே
------------------------------------
நறுநுதல் பசத்த லஞ்சி
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே”
என்னும் பாடல் தெளிவுபடுத்தும். நற்றிணை இலக்கியம் வாழ்வியல் சார்ந்த அகக் களங்களை விரிவாக எடுத்துக் கூறினும் அறக்கருத்துகளை எடுத்துக் கூறுவதிலும் சிறந்து விளங்குகின்றது. மக்கள் தங்கள் வாழ்வில் செய்யும் அறங்களில் தலையாயது அருள்.
2.குறுந்தொகை:
குறுந்தொகை 4 முதல் 8 அடிகளை எல்லையாகக் கொண்டு அமையும் இலக்கியம். தலைவன் தலைவியின் அகவாழ்வின் மாண்பினைக் கூறும் நூலாக விளங்குகின்றது. பாக்கள் ஐந்திணைகளில் அமைந்து சிறக்கின்றன. குறுந்தொகை உரையாசிரியர்களால் அதிகமாக எடுத்தாளப்பட்ட பெருமையினை உடையது. குறுந்தொகையின் முதல் பதிப்பு 1915 ஆம் ஆண்டு சௌரிப் பெருமாள் அரங்கனால் பதிப்பிக்கப் பெற்றது. குறுந்தொகை பண்டையத் தமிழர்களின் அழகான வாழ்வியலைச் சிறுதும் திரிபில்லாமல் எடுத்துக் கூறும் தன்மையினதாகும். ஆண்களுக்குரிய கடமையினையும் பெண்களுக்குரிய கடமையினையும் வரையறை செய்கிறது.
"வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்"
தலைவன் தலைவி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் ஆழமான நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் குடும்ப வாழ்வு நன்றாக இருக்கும். சங்கத் தலைவியின் குரலாக அமைந்த பாடல் ஒன்று தலைவனின் உயர்ந்த அன்பினை நிலத்தை விடப் பெரியது, வானைவிட உயர்ந்தது, நீரை விட ஆழமானது என்று எடுத்துக் கூறுகின்றது. சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்கும் கொள்கை "சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்" என்பதாகும்.
அதாவது அகப்பாடல்களில் தலைவன் பெயரையோ தலைவியின் பெயரையோ சுட்டிச் சொல்லக்கூடாது. அது அகப்பாடல் முறைமை அல்ல. அதனை நினைவூட்டும் வண்ணமாக அமைந்த அகப்பாடல் ஒன்று தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் முதன்முதலாகப் பார்த்தபோதே தங்களுக்குள் அன்பு கொண்ட முறைமையினை எடுத்துக் கூறுகிறது.
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”
குறுந்தொகை அடியளவில் நடுநிலையாக அமைந்த பாடல்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் தாம் கொண்ட கருத்துகளால் உயரியதாகத் திகழ்கின்றது.
--------------------
சி.அமுதா
தமிழ்த்துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி,
புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா.
--------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக