📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 2

3. ஐங்குறுநூறு:

எட்டுத்தொகை நூல்களுள் அடிவரையறையில் குறைவான நூல். மூன்று முதல் ஐந்து அடிகளை எல்லையாகக் கொண்டது. திணைக்கு நூறு பாடல் விதம் 500 பாடல்களைக் கொண்டிலங்குகிறது. குறிஞ்சியைக் கபிலரும், முல்லைத்திணையைப் பேயனாரும், மருதத்திணையை ஓரம்போகியாரும், நெய்தல் திணையை அம்மூவனாரும், பாலைத் திணையை ஓதலாந்தையாரும் பாடியுள்ளனர்.
இந்நூலின் முதல் பதிப்பு 1903ஆம் ஆண்டு உ.வே.சா அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. ஐங்குறுநூற்றின் குறிப்பிடத்தக்க சிறப்பு, பத்து பத்துகளாக பாடல்கள் அமைந்ததாகும்.
ஐங்குறுநூறு அகச்சிந்தனைகள் நிறைந்த நூல். உள்ளுறை இறைச்சி ஆகிய நுட்பங்கள் வாயிலாக அகக்கருத்துகள் நுட்பமாகக் கூறப்பட்டிருக்கின்றன. தலைவன் பரத்தையின் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து இருந்த காலத்திலிருந்து, மீண்டும் இல்லம் வந்து தலைவியையும் தோழியையும் நோக்கி நீங்கள் எவ்வாறு ஆற்றியிருந்தீர்கள் என்றும் கேட்கும்போது அவர்கள் அறக்கோட்பாட்டுடன் நடந்த முறையினை, வேட்கைபத்து என்னும் மருதத் திணையில் அமைந்த முதலாம் 10 எடுத்துக்காட்டுகிறது.
"வாழி யாதன் வாழி யவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க"
பொதுவாகக் குறுந்தொகையில் அமைந்த பாக்கள் தலைவன் தலைவியின் உறவு நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறுவதில் முன்னிற்கின்றன. தலைவனைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்ற காலத்தில் தலைவன் வீட்டில் உள்ள வறுமையைத் தாங்கிக்கொண்டு அறமுறைப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றாள் தலைவி. தோழி தலைவியிடம் புகுந்த வீட்டின் வறுமையை வினவுகின்ற நிலையில்,
"அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழே
மானுண்டு எஞ்சிய கலிழி நீரே"
என்று தலைவி தோழிக்குப் பதில் கூறுகிறாள். பிறந்த வீட்டில் பாலும் தேனும் கலந்து உண்டு வாழ்ந்திருந்தாலும் தலைவனின் ஊரில் கிடைக்கும் சிறிதளவு கலங்கலாக உள்ள நீர் அதனைவிடச் சுவை மிக்கதாக இருக்கிறது என்று கூறுவது தலைவியானவள் தான் புகுந்த வீட்டின் பெருமையைக் காக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறது.
மேலும் இந்நூலில் அமைந்து வரும் "தலைவி சேர்த்து வைத்து பயன்படுத்தும் நெல்லைப் போன்றவள். ஆனால் பரத்தையோ கரும்பு போன்றவள்" என்று கூறப்படும் கருத்து தலைவியோடு இணைந்து நடத்தும் இல்லறமே சிறந்தது என்பதைக் காட்டுகிறது.
4.பதிற்றுப்பத்து:
பதிற்றுப்பத்து எட்டுத்தொகையில் அமைந்திருக்கும் புறநூல். எட்டுத்தொகை இலக்கியங்களுக்குள் குறிப்பாக, பதிற்றுப்பத்து சேர வம்சத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறும் இலக்கியமாகும். பதிற்றுப்பத்து பத்துப் பத்தாக கொண்டது. எனினும் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. எண்பது பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. பதிற்றுப்பத்தில் உள்ள பாக்கள் ஒவ்வொன்றும் பாடலில் உள்ள தொடரைத் தலைப்பாகக் கொண்டுள்ளன.
பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியுள்ளார். மூன்றாம் பத்து பல்யானைச் செல்கெழு குட்டுவனை பாலைக் கவுதமனார் பாடியுள்ளார். நான்காம் பத்து களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியுள்ளார். ஐம்பதாம் பத்தில் செங்குட்டுவனைப் பரணர் பாடியுள்ளார்.
ஆறாம் பத்தினை காக்கைப்பாடினி, நச்சௌளையார், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடியுள்ளனர். ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர், பாடல் பெற்றவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில் கிழார், பாடல் பெற்றவன் பெருஞ்சேரல் இரும்பறை. ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றூர்க் கிழார், பாடல் பெற்றவன் இளஞ்சேரல் இரும்பொறை. பதிற்றுப்பத்தில் இடம்பெறும் பாடல்கள் துறை, வண்ணம் ஆகிய குறிப்புகளைக் கொண்டு விளங்குகின்றன. நெடுஞ்சேரலாதனின் வெற்றிச்சிறப்பு,
"வயவர் வீழ வாளரில் மயங்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்ப
------------------------------------
காண்டல் விருப்பொடு கமழும் குளவி"
என்னும் பாடலால் எடுத்துக்காட்டப்படுகிறது. நெடுஞ்சேரலாதனின் கொடைச் சிறப்பு,
"உண்மின் கள்ளே அடுமின் சோறே
எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே
வருதர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப
------------------------------------
மாரி பொய்யாக்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே"
என்னும் பாடலால் எடுத்துக்காட்டப்படுகிறது.
--------------------
சி.அமுதா
தமிழ்த்துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி,
புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா.
--------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக