5.பரிபாடல்:
எட்டுத்தொகையில் பரிபாடல் அகமும் புறமும் கலந்ததாகும். இந்நூல் பரிந்து செல்லும் ஓசையை உடையதாக அமைந்தது. பொதுவாகப் பரிபாடல் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் சால்புகளைக் கொண்டு அமைந்து வரும். பரிபாடல் 70 பாடல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் 22 பாக்களே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களில் முருகனுக்கும் வைகைக்கும் எட்டுப்பாக்கள் வீதமும் திருமாலுக்கு ஆறு பார்க்களும் என 22 பாக்கள் உள்ளன.
குறிப்பாக அகம் குறித்த கருத்தாக்கங்கள் பரிபாடலில் நிறைவாகக் கிடைத்துள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடலுக்கு இசை வகுத்தவர், பண்ணின் பெயர் முதலிய குறிப்பிட்டுள்ளன. திருமால் குறித்த ஒரு பாடலில், திருமாலின் அருளை,
“தீயுனுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறைநீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்து உட்பொருளும் நீ;
என்னும் பரிபாடல் அடிகள் எடுத்துக் கூறுகின்றன. முருகன் பற்றிய பாடல் ஒன்று முருகக் கடவுளிடம் அருள் வேண்டும் நிலையினை,
".............யா அம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயோ"
என்னும் பாடல் எடுத்துக்காட்டுகிறது. வைகை குறித்து அமையும் ஏழாம் பாடல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தமையினை எடுத்துக்காட்டுகிறது.
"திரையிரும் பனிப்பௌவம் செவ்விதா அறைமுகந்து
உரவுரும் உடன்றார்ப்ப ஊர்பொறை கொள்ளாது
கரையுடை குளமெனக் கழன்று வான்வயிறழிபு
--------------
நலன்நந்த நாடணிதந்த புலநந்த
வந்தன்று வையைப் புனல்"
திருமாலிருஞ்சோலை, திருப்பரங்குன்றம், மதுரைநகர் ஆகியவற்றின் சிறப்புகளும் அங்கு நடைபெறும் திருவிழாக்களும் பரிபாடலில் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
6.கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களுள் கலிப்பாவினால் அமைந்த நூல் கலித்தொகை. கலித்தொகைப் பாடலைத் தொகுத்தவர் நல்லந்துவனார். அகத்திணை பாடச்சிறந்த பா கலியும் பரிபாடலும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினம்
உரியதாகும் என்மனார் புலவர்"
கலித்தொகையில் திணை வாரியாக 5 புலவர்கள் பாடியுள்ளனர்.
"ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
----------
பொறையெனப் படுவது போற்றாரை பொறுத்தல்"
கலித்தொகையில் இடம்பெறும் இப்பாடல் அறக்கருத்துக்கள் பலவற்றையும் கொண்டிலங்குகிறது. மற்றொரு பாடல் கணவன் மனைவி இருவரும் வறுமைப்பட்ட காலத்தும் ஒன்று சேர்ந்து வாழ்வது நல்வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறது.
--------------------
சி.அமுதா
தமிழ்த்துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி,
புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா.
--------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக