📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 1

 பத்துப்பாட்டு நூல்கள் - பகுதி 1:

திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு.
பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றுண்டு. அது வருமாறு:-
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இவ்வெண்பாவின் படி, அந்நூல்கள்
1. திருமுருகாற்றுப் படை
2. பொருநராற்றுப் படை
3. சிறுபாணாற்றுப் படை
4. பெரும்பாணாற்றுப் படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
என்பனவாகும்.
பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியது. கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிருபாட்டியல் எனும் இலக்கண நூல் பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறிற்று. கி.பி.15ஆம் நூற்றாண்டினரான மயிலை நாதர் (நன்னூல் எனும் இலக்கணத்துக்கு உரை எழுதியவர்) பத்துப்பாட்டு என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.
பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது. இனி, பத்துப்பாட்டிலுள்ள நூல்களின் வகைப்பாட்டையும் ஒவ்வொரு வகையிலும் உள்ள செய்யுட்களின் தனித் தனியான சிறப்புகளையும் காணலாம்.
நூல்களின் வகைப்பாடு:
பத்துப்பாட்டில் உள்ள செய்யுட்களும் எட்டுத்தொகையில் உள்ள நூல்களைப் போலவே அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும்.
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.
திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றியன. இவ்வாறனுள்ளும் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சித்திணையின் பாற்படுவதாகும்.
இனி ஒவ்வொரு பிரிவிலும் அமைந்த தனித்தனி நூல்கள் பற்றிக் காண்போம்.
1.முல்லைப் பாட்டு:
பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன. இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் வரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பேசுவதே முல்லைத்திணை.
இப்பாட்டில், தலைவன் பிரிந்துபோய்ப் பாசறையில் இருக்கிறான். தலைவி அரண்மனையில் இருக்கின்றாள். கார்காலம் வருகிறது. தலைவன் வாராமை கண்டு அவள் வருந்துகின்றாள். அரண்மனையில் அவளுக்குத் துணையாகவுள்ள முதிய பெண்டிர், தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என உறுதி கூறித் தேற்றுகின்றனர். அப்பொழுது தலைவனும் திரும்புகின்றான். இதனை, பாணர், கூத்தர் முதலிய வாயில்கள் தம்முள் கூறிக் கொள்வதாக இப்பாட்டுப் புனையப்பட்டுள்ளது.
இப்பாட்டில், தமிழர்களின் பாசறை அமைப்பும், அதில் மகளிர் கச்சணிந்தும், வாள் ஏந்தியும் நின்று பணியாற்றல், கவசம் பூண்ட யவன வீரர்கள் காவல் புரிவது, பாவை விளக்கு எரிதல், கன்னல் என்னும் கருவியால் நாழிகை கணக்கிடுதல் முதலிய செய்திகள் அழகுறக் கூறப்பட்டுள்ளன.
அரசன் வெற்றியோடு திரும்பி வரும் முல்லை நிலத்தில் பல்வேறு மலர்களும் மலர்ந்து மணம் பரப்பி நிற்றலை, நப்பூதனார் பாடும் அழகே அழகு!
2.குறிஞ்சிப் பாட்டு:
இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று. பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. காதல் நோயால் அவதியுறும் தலைவியின் மேனி வேறுபாடுகளைக் கண்ட அன்னை, கடவுளர்க்குப் பூசைகள் நிகழ்த்தியும், நிமித்திகர்களைக் கலந்தும் (சோதிடர்கள்) துயர் உறுவது கண்ட தோழி, தலைவியின் துயருக்கு, அவள் ஒரு மலைநிலத் தலைவனிடம் கொண்ட காதலே காரணம் என்று வெளிப்படக் கூறும் வகையில் இப்பாட்டு இயற்றப்பட்டுள்ளது.
ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் குறிஞ்சிக் கபிலர் இயற்றியது இச்செய்யுள் என்பர் அறிஞர். அருவியில் நீராடிய பெண்கள் பறித்து, பாசறையில் குவித்துச் சூடி மகிழ்ந்த 99 வகையான மலர்கள் பற்றிய வருணனை, கபிலரின் இயற்கையீடுபாட்டுக்குச் சான்றாகும்.
மிளகு உதிர்ந்து பரவிக் கிடக்கும் பாசறையிடையே காணப்பட்ட சுனையொன்றில், மாம்பழமும், பலாச்சுளையும், தேனும் விழுந்தமையால் உண்டான தேறலை நீரென்று கருதி உண்ட மயிலொன்று மயக்கமுற்றுத் தள்ளாடித் தள்ளாடி நடப்பது, பேரூர் ஒன்றில் விழாவில் கயிற்றின்மேல் ஏறி நின்று ஆடும் விறலிபோல் தோன்றுவதாகக் கபிலர் பாடுவது சிறப்பாக உள்ளது.
கதிரவன் மேற்றிசையில் மறையும் மாலைப் பொழுதின் நிகழ்வுகளையும், தலைவன் வரும் வழியில் தோன்றும் பல்வேறு இடையூறுகளையும், தலைவனுடைய உருவத் தோற்றத்தையும் கபிலர் தமக்கே உரிய வகையில் விளக்கியுள்ளார்.
---------------------
கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த பகுதியில் தொடரும்.
All reactions:
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக