📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 2

3.பட்டினப்பாலை:
பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது இப்பெயரின் பொருள். இங்குப் பட்டினம் என்பது புகார் நகர். 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.
பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது. அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.
இதில் வரும் கிளவித் தலைவன் (தலைவியின் கணவன்), பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் பெருமைகளை யெல்லாம் விவரித்து, அவனால் ஆளப்படும் புகார் நகரின் பல்வேறு சிறப்புகளையும் பலபடப் பாராட்டி, அத்தகைய பட்டினத்தினையே பெறுவதாக இருப்பினும் தன் மனைவியைப் பிரிந்து செல்ல மனமில்லாது செலவைக் கைவிடுவான்.
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழியே நெஞ்சே
என்று தன் நெஞ்சிற்குக் கூறுவான்; தன் செயலுக்குக் காரணம் கூறுவான். திருமாவளவன் தன் பகைவரை நோக்கி ஓச்சிய வேலைவிடத் தான் செல்ல வேண்டிய பாலை வழி கொடுமையானது என்றும், தன் காதலியின் மெல்லிய பெரிய தோள்கள், சோழனுடைய செங்கோலினும் இனிமையானது என்றும் கூறுவான்.
301 அடிகள் கொண்ட இப்பாட்டில் 217 அடிகள் பட்டினச் சிறப்பையே பேசுகின்றன. பண்டைத் தமிழரின் வணிகச் சிறப்பையும், கலைச்சிறப்பையும், சமய வழிபாட்டுச் சிறப்பையும் பிறவற்றையும் இப்பாட்டு உலகறியச் செய்கிறது. துறைமுகத்தில் நடக்கும் ஏற்றுமதியும் இறக்குமதியும், அங்குச் சுங்க அதிகாரிகள் புலிச் சின்னம் பொறித்தலும், சுங்கம் பெறுதலும், அறச்சாலைகளில் உணவளிக்கும் சிறப்பும், வணிகர்களின் நடுவுநிலைப் பண்பும், அவர்களுடைய அறப் பண்பும் பாராட்டப்படுகின்றன.
திருமாவளவனின் நாட்டில் பல மொழியாளரும் வந்து குழுமியிருந்தனர் என்றும் அவர்கள் பலரும் ஒற்றுமையாக இனிது வாழ்ந்தனர் என்றும் புலவர் கூறுவார். திருமாவளவன் பகைவர் நாட்டில் செய்த அழிவுச் செயல்களையும், உறையூரை விரிவு செய்த தன்மையையும் புலவர் பாராட்டுவார். காடு கொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கியதாகப் பாராட்டுவார். சுருங்கச் சொன்னால், இந்நூல் தமிழக வரலாற்றின் பெட்டகம் ஆகும்.
4.நெடுநல்வாடை:
இது 188 அடிகள் கொண்ட அகவல். இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்பர். இருவரும் ஒருவரே என்பாரும் உளர்.
காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
பிரிவுத் துயரால் வருந்தும் காதலிக்கு வாடைக் காற்று நெடியதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு பொழுது ஓர் ஊழி போல் காண்கின்றது. ஆனால் பாசறையில் இருக்கும் தலைவன் புண்பட்ட வீரர்க்கும், யானைகளுக்கும் குதிரைகளுக்கும் அன்பு காட்டி ஆறுதல் செய்கிறான். காமச் சிந்தனையற்றுக் கடமையில் கருத்தூன்றுகிறான். இதனால் வாடை அவனுக்கு நல்லதாயிற்று. பாட்டின் பெயர்ப் பொருத்தம் இதனால் விளங்கும்.
இப்பாட்டில் இடம்பெறும் கூதிர்கால வருணனையொன்றே புலவரின் பெருமையை நிலைநாட்ட வல்லது. இவ்வருணனை 70 அடிகளால் அமைகிறது. பண்டைத் தமிழர் மனையைச் சதுரமாகப் பிரித்து வீடு கட்டும் கலையில் தேர்ந்திருந்தமை இப்பாட்டால் விளங்கும். கட்டிடச் சிற்பியை நூலறிபுலவர் என்கின்றார் புலவர். அரசியின் கட்டில் வனப்பும், அரண்மனை அமைப்பும், பாசறையின் இயல்பும்; அரசன் வீரன் ஒருவன் துணையுடன் இரவுப் பொழுதிலும் வீரரையும் விலங்குகளையும் பார்வையிடும் காட்சியும் நிழற்படம் போல் இனிமை செய்கின்றன.
பாவை விளக்குகளின் அகலில் நெய்யூற்றிப் பெரிய திரிகளில் தீக்கொளுவுதல், நிலா முற்றத்தில் இருந்து மழைநீர் குழாய்களின் மூலம் வழிதல், குன்றத்தினைக் குடைந்தமைத்தது போல் அமைந்த அரண்மனை வாயில், வென்றெடுத்த கொடியோடு யானை புகுந்து செல்லும் அளவில் இருந்த அதன் உயர்ச்சி ஆகியவற்றைப் புலவர் திறம்படக் காட்டியுள்ளார். 5.மதுரைக் காஞ்சி: பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது. இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறி, தனக்கென வரையறுத்த நாட்களை நல்ல முறையில் வாழுமாறு அறிவுறுத்தும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றிய காஞ்சித்திணைப் பாட்டாகும். மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சி - நிலையாமை).
இதில் பாண்டிய நாட்டின் ஐந்திணை வளம், அவ்வந்நிலங்களில் நடக்கும் வாழ்க்கை முறைகள், பாண்டியன் பகைவர் நாட்டை அழித்தல், பணிந்தார்க்கு நலம் செய்தல், இருபெருவேந்தரையும் ஐம்பெருவேளிரையும் வென்றமை, சாலியூரையும், முதுவென்னிலையும் கைக்கொண்டமை, பரதவர்களை வென்றமை முதலான வெற்றிச் செயல்கள் ஆகியன விரிவாகக் கூறப்படுகின்றன. வையையாற்று வளம், மதுரையைச் சூழ்ந்த அகழி, இரவும் பகலும் நடக்கும் அல்லங்காடி, நாளங்காடியின் தன்மைகள், அந்தணர் இருக்கை, சாவகர், சமணர், பௌத்தர்களின் இருக்கைகள், பெரியோர்களின் ஒழுகலாறுகள் ஆகியவற்றை ஆசிரியர் இனிதே விளக்கியுள்ளார். மாலை முதல் விடியற்காலம் வரையில் பல்வேறு மாந்தரின் செயல்களை அழகுறக் காட்டும் புலவர், பரத்தையர் தம்மை அழகுறுத்திக் கொண்டு செல்வக்குடி இளைஞர்களை மயக்கிப் பொருள் பறித்தலையும், உளியும், நூலேணியும் கொண்டு களவாடப்போகும் கள்வர் இயல்பையும், அவர்களைப் பற்றுதற்கு மறைந்து செல்லும் காவலர் இயல்பையும் காட்டுவது இதனுள் அழகாகவுள்ளது.
அமைச்சர்கள் காவிதிப் பட்டம் பெறுதல், அறங்கூர் அவையத்தின் சிறப்பு, சங்கறுத்து வளையல் செய்தல் முதலிய தொழில் வல்லுநரின் இயல்புகள், பாணர்களின் நிலை, அவர்களின் கலைவன்மை, கட்டிடக்கலை, நெசவுக்கலை முதலியவற்றின் மேம்பாடு என்பவை இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பாகவுள்ளது.
மதுரைக் காஞ்சி கூறும் நிலையாமை உலக வாழ்க்கையை இகழ்ந்து ஒதுக்குவது அன்று. உலகம் நிலையானது. இதில் நிலைத்த புகழை நிலைநிறுத்தவே. --------------------- கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த பகுதியில் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக