📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 3

ஆற்றுப்படை நூல்கள்:

புறப்பொருள் பற்றியவற்றுள் 5 ஆற்றுப்படை நூல்கள் ஆகும். அவை பற்றிக் குறிப்புகள் பின்வருமாறு:

6.சிறுபாணாற்றுப் படை:

இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின்

இப்பெயர் பெற்றது. பெரும்பாணாற்றுப்படையை விட அளவால் சிறியது என்பதால் பெற்ற பெயர் இது என்றலும் பொருந்தும்.

இதில் சீறியாழின் உருவ அமைப்பு அழகாக, உவமைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. நல்லியக்கோடன் நாட்டு வளமும், மக்கள் வாழ்வுச் சிறப்பும், விருந்தோம்பும் பண்பும் காட்டப்பட்டுள்ளன. கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டிருத்தலும், மூவேந்தர் நாடுகள் வருணிக்கப்பட்டிருத்தலும் இந்நூலின் வரலாற்றுத் தன்மைக்குச் சான்றாகும்.

நல்லியக் கோடன், கடையெழு வள்ளல்கள் எழுவரும் தாங்கிய ஈகையாகிய செவ்விய நுகத்தைத் தான் ஒருவனே தாங்கியதாகப் புலவர் புகழ்வார். பாணனுடைய வறுமை நிலை நெஞ்சை உருக்கும் வகையில் விளக்கப்படுகிறது.

ஆமூர், வேலூர், கிடங்கில் என்னும் ஊர்களின் சிறப்பை இப்பாட்டில் காணலாம். விறலியின் மேனியழகினை அழகிய உவமைகளால் புலவர் பாராட்டுவது கற்பாரைக் கவருகிறது. மதுரையைத் “தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று பாராட்டுவார் புலவர்.

பாணரின் அடுக்களையில் நாய்க்குட்டி ஈன்றுள்ளதையும், கண்ணும் திறவாத அதன் குட்டிகள் பாலில்லாத வறுமுலையைப் பற்றி இழுத்ததனால் துன்பம் தாளாது தாய் நாய் குரைத்தலையும் புலவர்,

     திறவாக் கண்ண சாய்செவிக் குருளை

     கறவாப் பான்முலை கவர்தல் நோனாது

     புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்

(குருளை = குட்டி ; நோனாது = பொறுக்காமல்; புனிற்று = அண்மையில் குட்டியீன்ற; புல்லென் = பொலிவு அற்ற; அட்டில் = அடுக்களை)

என்று கூறுவார். பாணர் குடும்பப் பெண் குப்பையில் முளைத்த வேளைக் கீரையைக் கொய்து கொண்டு வந்து, நீரை உலையாக ஏற்றி அதில் அதை வேகவைத்து, அதனைப் பிறர் காணாது கதவை அடைத்துத் தன் சுற்றத்தோடு உண்ணும் அவலத்தை, புலவர் அழகாகப் படம் பிடித்துள்ளார்.

7.பெரும்பாணாற்றுப் படை:

இது கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று. 269 அடிகள் கொண்ட சிறுபாணாற்றுப் படையை நோக்க இது பெரியது என்பது பற்றி இப்பெயர் பெற்றதாகவும் கொள்வர்.

இது சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தது. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது. மாந்தரின் குடியிருப்பும் செயல்களும் உண்மைத் தன்மையுடன் இதில் பாடப்பட்டுள்ளன.

திருவெஃகாவில் குடிகொண்ட திருமாலின் கோலத்தையும், கடலோரத்தில் அமைந்த விண்ணுயர்ந்த கலங்கரை விளக்கத்தையும், தொண்டைமானின் கொடைத்திறத்தையும், பேரியாழின் வருணனையையும், யானைகள் தவம் செய்யும் முனிவர்கட்கு உதவும் திறத்தையும், இளந்திரையன் ஆட்சிச் சிறப்பால் இடியும் காட்டுவிலங்குகளும் கூட வழிச் செல்வார்க்குத் தீங்கு செய்யாத தன்மையும், உமணர்கள் (உப்பு வணிகர்கள்) உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராக சேர்தலும், வம்பலர் என்ற வணிகர் கவசம் பூண்டும், காலிற் செருப்பணிந்தும், கழுதைச் சாத்துடன் (கூட்டத்துடன்) செல்லும் இயல்பும், ஆயர்குடிப் பெண் ஆன்படு பொருள்களை (பால் உணவுப்பொருட்களை) விற்றுக் குடும்பத்தைக் காத்தலும் பிறவும் இந்நூலில் கற்றுச் சுவைக்கத் தக்கனவாகும்.

8.பொருநராற்றுப் படை:

சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் இயற்றிய இப்பாட்டு 248 அடிகள் கொண்டது. போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பொருநன் கையாண்ட யாழ் பற்றிய வருணனை பாட்டின் முன் பகுதியிலேயே அமைந்துள்ளது. (4-22) கொடியவரான ஆறலை கள்வரின் (வழிப்பறிசெய்வோர்) கல்மனத்தையும் அருள் மனமாக மாற்ற வல்லது பாலை யாழ் என்கிறார் புலவர்.

யாழ் வருணனையைத் தொடர்ந்து, விறலியின் மேனியழகு பற்றிய அழகிய விளக்கம் காணப்படுகிறது (25-47). விறலியின் அழகு தகுந்த உவமைகளால் விளக்கப்படுகின்றது. அவள் குழையணிந்த காதிற்குக் கத்தரிக்கோலின் கடைப்பகுதி உவமையாகும். அடியின் மென்மைக்கு, ஓடி இளைத்த நாயின் நாக்கினை உவமை கூறியுள்ளார்.

கலைஞர்கட்கு அருள் சுரந்து பரிசளிக்கும் கரிகாலனின் வண்மையைப் புலவர் சிறப்புறப் பாராட்டியுள்ளார். 

கண்ணால் பருகுவது போலப் பார்த்து, எலும்பையும் குளிரச் செய்யுமாறு அன்பு செலுத்தி, ஈரும் பேனும் தங்கியுள்ள கந்தலாடையினை நீக்கி, கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இழைகளால் நெய்யப்பட்ட பட்டாடையை உடுத்தி, உயர்ந்த அரிசியால் சமைத்த புலால் உணவினை உண்ணச் செய்து, கன்றொடு கூடிய யானைகளைப் பரிசாக அளித்துப் பிரியாவிடை தருவான் கரிகாலன் என்கின்றார் புலவர். பால்போல் வெண்மையான நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கொடுத்து, காலில் ஏழடிகள் பின் சென்று அவர்கட்கு விடையளித்தான் என்கின்றார் புலவர். பல திணைகளும் அடுத்தடுத்து இருந்தமையால் ஒவ்வொரு திணை மாந்தரும் தம் பொருள்களை அடுத்துள்ள நில மக்களோடு பண்ட மாற்றிக் கொண்டனர் என்பதனை விளக்கியவர்,

     குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்

     நறும்பூங் கண்ணி குறவர் சூட,

     கானவர் மருதம் பாட, அகவர்

     நீல்நிற முல்லைப் பஃறிணை நுவல

என்று அவர்களின் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் விளக்கியுள்ளார்.

---------------------

கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த பகுதியில் தொடரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக