9.மலைபடுகடாம்:
வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால்
விளக்கப்படுகின்றன. ஆகுளி, பாண்டில், கோடு, களிற்றுயிர்த் தூம்பு, குறுந்தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை என்பன பிற கருவிகள்.மலைச் சாரலில் தோன்றும் பல்வேறு ஓசைகள் பற்றிய வருணனையும், நன்னனைக் காணச் சென்ற குறவர்கள் கொண்டு போன கையுறைப் பொருள்கள் பற்றிய வருணனையும் நூலின் சிறந்த பகுதிகள்.
நன்னன் நாட்டு மக்கள் பலரும் வாழும் வாழ்க்கை முறைகளும், அவர்களின் விருந்தோம்பல் சிறப்பும் அழகாகக் கூறப்பட்டுள்ளன. நன்னன் ஊரின் பெருமையும், அவன் கலைஞர்கட்குப் பரிசளிக்கும் சிறப்பும் கூறப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரும் உண்ட உணவுகள் பற்றியும், மலைவழியில் போவார் எதிர்கொள்ளும் இடையூறுகளும் கூறப்பட்டுள்ளன.
நன்னன் மலையான நவிரத்தில் தோன்றும் சேயாற்றின் தன்மையும், அங்குக் குடிகொண்ட காரி உண்டிக் கடவுளும் (சிவபெருமான்) பற்றிய செய்தியும் இதில் காணப்படுகின்றன.
10.திருமுருகாற்றுப் படை:
பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை. இது 317 அடிகள் கொண்ட அகவல். முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இதனை இயற்றியவர் நக்கீரர். இவரும் நெடுநல்வாடையைப் பாடியவரும் ஒருவரே என்பார் பலர். இருவரும் வெவ்வேறு ஆசிரியர்கள் என்பாரும் உளர். ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பு. இது, அதற்கு மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.
இதில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. முருகப் பெருமானின் திருஉருவச் சிறப்பும், அவர் மார்பில் அசையும் மாலையழகும், சூரரமகளிர் இயல்பும், பெருமான் சூரபன்மனை அழித்த செயலும், மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகும் முதற்பகுதியில் இடம்பெறுகின்றன.
பெருமான் ஏறும் பிணிமுகம் என்னும் யானையின் இயல்பு, அவருடைய ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கைகளின் செயல்கள், அவர் திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) எழுந்தருளியிருக்கும் மேன்மை ஆகியன இரண்டாம் பகுதியில் இடம்பெறுகின்றன.
மூன்றாம் பகுதியில் திருவாவினன்குடியில் (பழனியில்) முனிவர்கள் பெருமானை வழிபடும் முறையும், சிவபெருமானும், திருமாலும், பிறதேவர்களும் பெருமானைக் காண வருதலும் விளக்கப்படுகின்றன.
நான்காவது பகுதியில், பெருமான் ஏரகத்தே (சுவாமிமலை) எழுந்தருளியிருத்தலும், அந்தணர் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து வழிபடலும் கூறப்பட்டுள்ளன. அம்மந்திரம் “நமோ குமராய” என்பார் நச்சினார்க்கினியர்.
ஐந்தாவது பகுதியில் பெருமான் ஒவ்வொரு குன்றிலும் ஆடும் பண்பு விளக்கப்படுகிறது.
ஆறாம் பகுதியில் முருகப் பெருமான் ஊர் தோறும் கொண்டாடப்படும் விழாவிலும், வெறியாடும் களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக் குறைகளிலும் (திட்டு), ஆறுகளிலும், குளங்களிலும் சதுக்கங்களிலும் மன்றங்களிலும் பிறவிடங்களிலும் உறையும் நிலை விளக்கப்பட்டுள்ளது.
குறவர்கள் தமக்கே உரிய முறையில் உயிர்க் கொலையுடன் முருகனை வழிபடும் பண்பு இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பு.
முருகப் பெருமானை வழிபடும் முனிவர்களின் உருவத் தோற்றத்தையும், பழமுதிர்சோலையின் இயற்கை அழகையும் விளக்கும் பகுதிகள் நக்கீரர் புலமைக்குச் சான்று.
இந்நூலின் அருமை கருதி, பிற்காலத்தில் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் ஒரு பகுதியாக இதனைச் சேர்த்துள்ளனர். இது, சைவர்களின் வழிபாட்டு நூலாக விளங்குகிறது.
--------
உங்கள் கட்டுரைகள், கவிதை தொகுப்புகள் , ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை இந்தத் தளத்தில் வௌியிட kalaimahanfairooz@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு, ஒருங்குறியில் தட்டச்சிட்டு அனுப்பிவைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக