📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 18 ஜனவரி, 2025

உவமைத் தொடர்கள் | அவற்றின் பொருள்கள் | உதாரணங்கள்

 உவமைத்தொடர்

நன்கு தெரிந்த பொருளை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையணியாகும். அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத்தொடர் ஆகும். 

இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன. 

சில உவமைத் தொடர்களும் அவற்றிற்கான பொருள்களும், பயன்பாடும், உதாரணங்களும் இங்கே தரப்பட்டுள்ளன. 

1. அடியற்ற மரம் போல

பொருள் : அடியற்ற - வேரில்லாத

பயன்பாடு : பெரும்துன்பம்

கணவன் இறந்த செய்திக் கேட்ட கண்ணகி அடியற்ற மரம் போலச் சாய்ந்தாள்.


2. அனலில் இட்ட மெழுகு போல

பொருள் : அனலில் - நெருப்பில்

பயன்பாடு : துடிதுடித்தல்

பால் காய்ச்சும் போது தவறுதலாக கையில் ஊற்றிக் கொண்ட கவிதா, அனலில் இட்ட மெழுகு போல வலியால் துடித்தாள்.


3. இலைமறை காய் போல

பொருள் : இலைமறை - இலையின் மறைவில்

பயன்பாடு : மறைமுகமாக

திரைப்படத்தில் ஒரு சில மர்மங்களை இயக்குனர் இலைமறை காய் போல காட்டியிருந்தார்.


4. எலியும் பூனையும் போல

பொருள் : எலியும் பூனையும்

பயன்பாடு : எதிரிகளாக

ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.


5. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல

பொருள் : ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் - ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பிள்ளைகள்

பயன்பாடு : உடன் பிறந்தவர்களாக

ராமுவும் அவன் நண்பர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் பழகி வந்தார்கள்.


6. கண்ணினைக் காக்கும் இமை போல

பொருள் : கண்ணினைக் காக்கும் இமை - கண்களைக் காப்பாற்றும் இமைகள்

பயன்பாடு : அக்கறையாக

தாய் தன் குழந்தையை கண்ணினைக் காக்கும் இமை போலப் பார்த்துக் கொண்டாள்.


7. கரை காணாக் கப்பல் போல

பொருள் : கரை காணாக் கப்பல் - கரையை காணாமல் நடுக்கடலில் தவிக்கும் கப்பல்.

பயன்பாடு : தவிப்பு

கூட்டத்தில் தன் தாயை பிரிந்த குழந்தை, கரை காணாக் கப்பல் போல தவிதவித்தது.


8. கலங்கரை விளக்கம் போல

பொருள்: கப்பலுக்கு வழிக் காட்டும் வெளிச்சம்.

பயன்பாடு : வழிகாட்டுதல்

ஆசிரியர் தேவன் பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையானவற்றையும் கற்றுக் கொடுப்பதால், மாணவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல திகழ்ந்தார்.


9. கன்றினைக் கண்ட பசு போல

பொருள் : கன்றினைக் கண்ட பசு - கன்றுக்குட்டியை கண்ட தாய்ப்பசு

பயன்பாடு : சேயை கண்டு தாய் அடையும் மகிழ்ச்சி

கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை மீண்டும் பார்த்தவுடன், மீனாட்சி கன்றினைக் கண்ட பசு போல ஓடிச் சென்று தழுவினாள்.


10. காட்டுத்தீ போல

பொருள் : காட்டுத்தீ - காட்டில் பிடித்த தீ

பயன்பாடு : வேகமாகப் பரவுதல்

சில நேரங்களில், உண்மையை விட வதந்திகள் காட்டுத்தீ போலப் பரவுவதை நாம் உணர முடியும்.


11. கிணற்றுத் தவளை போல

பொருள் : கிணற்றுத் தவளை - கிணற்றுக்குள் வாழும் தவளை

பயன்பாடு : வெளி உலகம் தெரியாமல் இருப்பது.

மல்லிகா படித்திருந்தாலும், கிணற்றுத் தவளை போல அறியாமையுடன் இருந்தாள்.


12. தூண்டிலில் மாட்டிய மீன் போல

பொருள் : தூண்டிலில் மாட்டிய மீன் - தூண்டிலில் சிக்கிக் கொண்ட மீன்

பயன்பாடு : துடிதுடிப்பு

கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்ட சிறுமி மீனா, தூண்டிலில் மாட்டிய மீன் போலத் துடித்தாள்.


13. அத்தி பூத்தாற்போல்

பொருள் : அத்தி பூத்தது - அத்திப்பூ பூத்தது

பயன்பாடு : அரிதாக

ராமு படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய பின், தொலைக்காட்சி பார்ப்பது அத்தி பூத்தாற் போல் ஆகிவிட்டது.


14. உடும்புப்பிடி போல்

பொருள் : உடும்புப்பிடி - உடும்பு(பல்லி வகை) சுவற்றை பிடித்திருப்பது.

பயன்பாடு : கெட்டியாக

மாறன் தன் கொள்கைகளை உடும்புப்பிடி போல பற்றிக் கொண்டிருந்தான்.


15. குடத்தில் இட்ட விளக்குப் போல

பொருள் : குடத்தில் இட்ட விளக்கு - குடத்துக்குள் ஏற்றிய விளக்கு

பயன்பாடு : திறமையை வெளிக்காட்டாமல்

வாய்ப்புக் கிடைக்காததால், அமரனின் ஓவியத் திறமை குடத்தில் இட்ட விளக்கு போல இருந்தது.


16. சிறகு ஒடிந்த பறவை போல

பொருள் : சிறகு ஒடிந்த பறவை - இறக்கைகளை இழந்த பறவை

பயன்பாடு : செயலற்றுப் போகுதல்

மனைவியை இழந்த குமரன் சிறகு ஒடிந்த பறவை போல ஆனான்.


17. ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு போல

பொருள் : ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு - யானையின் வாய்க்குள் போன கரும்பு

பயன்பாடு : நசுங்கிப் போதல்

கரும்பு ஆலையில் இயந்திரத்திற்குள் விடப்பட்ட கரும்பு ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு போல சக்கையானது.


18. கப்பல் கவிழ்ந்தாற் போல

பொருள் : கப்பல் கவிழ்ந்தால் - கப்பல் தண்ணீருக்குள் மூழ்கினால்

பயன்பாடு : சோகம்

பாரதி, மதிப்பெண்கள் குறைந்ததற்கு, ஏதோ கப்பல் கவிழ்ந்தாற் போல் சோகமாக இருந்தாள்.


19. கனியிருக்கக் காயை விரும்புவது போல

பொருள் : கனியிருக்கக் காயை விரும்புவது - இனிப்பான கனிகள் இருக்கும்போது கசப்பான காயை விரும்புவது

பயன்பாடு: நல்லது இருக்க, கெட்டதை நோக்கி செல்வது

பேசுவதற்கு பல இனிய சொற்கள் இருக்கும்போது தீய சொற்களை பயன்படுத்துவது கனியிருக்கக் காயை விரும்புவது போல என்று வள்ளுவர் கூறியுள்ளார்.


20. கீரியும் பாம்பும் போல

பொருள் : கீரியும் பாம்பும் -கீரிப்பிள்ளையும் பாம்பும்

பயன்பாடு : சண்டை

கவியும் ரதியும், கீரியும் பாம்பும் போல எப்போதும் சண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள்.


21. குன்றின் மேலிட்ட விளக்குப் போல

பொருள் : குன்றின் மேலிட்ட விளக்கு - மலையின் மேல் ஏற்றி வைத்த விளக்கு

பயன்பாடு : அனைவரும் அறிதல்

கர்ணனின் கொடையுள்ளம் குன்றின் மேலிட்ட விளக்கு போல

அனைவரது உள்ளத்திலும் பிரகாசித்தது.


22. சுடச் சுடரும் பொன் போல

பொருள் : சுடச் சுடரும் பொன் - நெருப்பில் சுடச் சுட பொன் மிளிரும்.

பயன்பாடு : அனுபவத்தால் தேர்ந்தவர் ஆதல்

சுடச் சுடரும் பொன் போல, வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன.


23. சூரியனைக் கண்ட பனி போல

பொருள் : சூரியனைக் கண்ட பனி - சூரியனைக் கண்ட பனித்துளி

பயன்பாடு : துன்பம் விலகுதல்

சூரியனைக் கண்ட பனி போல துன்பமெல்லாம் விலக வேண்டும் என்று மாதவி கடவுளை வணங்கினாள்.


24. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல

பொருள் : சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை - சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளி

பயன்பாடு : சொல்வதையே திருப்பித் திருப்பிச் சொல்லுதல்

சிறுபிள்ளைகள் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல அவர்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்.


25. நீர்மேல் எழுத்துப் போல

பொருள் : தண்ணீர் மேல் எழுதும் எழுத்து

பயன்பாடு : நிரந்தரமற்ற வார்த்தைகளை குறிப்பிடுதல்

குடிகாரனின் வாக்கு நீர்மேல் எழுத்து போல, சொன்ன மாத்திரமே நீர்த்துப் போகும்.


26. பசுமரத்தாணி போல

பொருள் : பசுமரத்தாணி - பச்சை மரத்தில் ஆணியால் எழுதுவது

பயன்பாடு : நிரந்தரமாய் நினைவில் இருத்தல்

பசுமரத்தாணி போல சிறுவயதில் மனதில் பதிந்த நிகழ்வுகள் ஒருவரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்.


27. பார்க்காததைப் பார்த்தது போல

பொருள் : பார்க்காததைப் பார்த்தது

பயன்பாடு : மலைப்பு

அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே வந்த தந்தையை ஏதோ பார்க்காததைப் பார்த்தது போலப் பார்த்து நின்றான் சரவணன்.


28 மழை பெய்து ஓய்ந்தது போல

பொருள் : மழை பெய்து ஓய்ந்தது - கனமழைக்குப் பின் மழை ஓய்ந்தது.

பயன்பாடு : பெரிய இரைச்சலுக்குப் பின் அமைதி நிலவுதல்.

திருமண வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தினரும் சென்ற பின், அந்த இடம் மழை பெய்து ஓய்ந்தது போலக் காணப்பட்டது.


29. அடுத்தது காட்டும் பளிங்கு போல

பொருள் : அடுத்தது காட்டும் பளிங்கு - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு

பயன்பாடு : உள்ளத்தில் இருப்பதை முகம் காட்டிக் கொடுத்து விடுவது.

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனதில் நிகழ்வதை அவன் முகம் காட்டும்.


30. தவளை தன் வாயால் கெட்டது போல

பொருள் : தவளை தன் வாயால் கெட்டது - தவளை வாயால் சத்தமிடுவதால் எதிரி அதன் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுதல்.

பயன்பாடு : பேசியே ஆபத்தில் மாட்டிக் கொள்ளுதல்.

தவளை தன் வாயால் கெட்டது போல இரு திருடர்களும் திருடிய பொருளை எங்கு மறைத்து வைப்பது என்று விவாதித்ததை காவலர் கேட்டதால் அவர்களை கைது செய்தார்.


31. நீறு பூத்த நெருப்புப் போல

பொருள் : நீறு பூத்த நெருப்பு - சாம்பல் மறைத்து இருக்கும் நெருப்பு

பயன்பாடு : ஏற்கனவே இருந்த பிரச்சினை திடீரென்று வெடிப்பது

போரட்டத்தில் ஏற்கனவே, நீறு பூத்த நெருப்பு போல இருந்த கோரிக்கைகள், கனன்று, எரியத் துவங்கின.


32. வெறுங்கையில் முழம் போடுவது போல

பொருள் : வெறுங்கையில் முழம் போடுவது - கையில் பொருள் ஏதும் இல்லாமல் அளப்பது

பயன்பாடு : கையில் பொருள் இல்லாமல் செயலைத் திட்டமிடுவது.

மழை இன்றி இவ்வுலகின் நீர் ஆதாரங்களை செழிக்க வைப்பது வெறுங்கையில் முழம் போடுவது போல ஆகும்.


33. இரும்பை இழுக்கும் காந்தம் போல

பொருள் : இரும்பை இழுக்கும் காந்தம் - காந்தத்தால் கவரப்படும் இரும்பு

பயன்பாடு : ஈர்ப்பு

இரும்பை இழுக்கும் காந்தம் போல எறும்புகளை ஈர்த்தன இனிப்புப் பலகாரங்கள்.


34. எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல

பொருள் : எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தல் - எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் தூண்டிவிடுவதாய் எண்ணெய் ஊற்றுதல்.

பயன்பாடு : பிரச்சினையைப் பெரிதாக்குதல்

பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, சிலர் வன்முறையில் இறங்கியதால், எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல போராட்டம் தீவிரமடைந்தது.


35. தாயைக் கண்ட சேயைப் போல

பொருள் : சேய் - குழந்தை

பயன்பாடு : மகிழ்ச்சி

சேகர் தன் குடும்பத்தைக் கண்டவுடன் தாயைக் கண்ட சேயைப் போல மகிழ்ந்தான்.


36. நகமும் சதையும் போல

பொருள் : நகமும் சதையும் - நகமும் நகத்தை ஒட்டி இருக்கும் சதையும்.

பயன்பாடு : நெருக்கம்

கலாவும் சீதாவும், நகமும் சதையும் போல இணை பிரியாத தோழிகளாக இருந்தார்கள்.


37. நுனிப்புல் மேய்ந்தாற்போல

பொருள் : நுனிப்புல் - புல்லின் நுனி

பயன்பாடு : மேலோட்டமாக

ரவி, நுனிப்புல் மேய்ந்தாற்போல படித்ததால் அவனால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளிக்க இயலவில்லை.


38. பல் பிடுங்கின பாம்பு போல

பொருள் : பல் பிடுங்கின பாம்பு - பல் பிடுங்கப்பட்ட பாம்பு

பயன்பாடு : செயலற்ற தன்மை

பெரிய கொள்ளைக்காரனான சேது, கைது செய்யப்பட்டவுடன் பல் பிடுங்கின பாம்பு போல ஆனான்.


39. பழமரம் நாடிய பறவை போல

பொருள் : பழமரம் நாடிய பறவை - பழங்கள் நிறைய இருக்கும் மரத்தை தேடி செல்லும் பறவை

பயன்பாடு : பொருள் இருக்கும் இடத்தைத் தேடி செல்வது.

குணாளன் செல்வந்தராக ஆனபோது அவருடைய பழைய நண்பர்கள் அனைவரும் பழமரம் நாடிய பறவை போல வந்து சேர்ந்தனர்.


40. பாம்புக்குப் பால் வார்த்தாற்போல

பொருள் : பாம்புக்குப் பால் வார்ப்பது - பாம்புக்குப் பாலைக் கொடுப்பது.

பயன்பாடு : நல்லது செய்பவருக்கே தீங்கு விளைவிப்பது.

இளகிய மனம் கொண்ட கந்தன், திருட வந்த திருடனுக்கு வேலை போட்டுக் கொடுத்து, பாம்புக்குப் பால் வார்த்தாற்போல் பணமும் கொடுத்தார். ஆனால் திருடனோ கையில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.


41. புலியைக் கண்ட மான் போல

பொருள் : புலியைக் கண்ட மான்

பயன்பாடு : மிரட்சி, பயந்து ஓடுதல்

1. அந்நியர்களைக் கண்ட குழந்தை புலியைக் கண்ட மான் போல மிரண்டது.

2. காவலரைக் கண்ட திருடன் புலியைக் கண்ட மான் போல பயந்து ஓடினான்.


42. பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல

பொருள் : பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது - நாறில் கட்டப்படும் பூவினால் நாறும் சேர்ந்து மணம் பெறுவது.

பயன்பாடு : நல்லவர்களுடன் சேர்ந்து நன்மை அடைவது.

நல்லவர்களுடன் பழகினால் பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல நாமும் நன்மை அடையலாம்.


43. முகத்தில் அடித்தாற்போல

பொருள் : முகத்தில் அடித்தல் - அவமானப் படுத்துதல்

பயன்பாடு : அவமானம்

நெடுநாள் பகையில் இருந்த ரவி மனந்திருந்தி தன் நண்பனைப் பார்க்க வந்த போது, நண்பனின் மனைவி முகத்தில் அடித்தாற்போல பேசி அனுப்பினாள்.


44. வெயிலில் இட்ட புழு போல

பொருள் : வெயிலில் இட்ட புழு - சூடு தாங்காமல் துடிக்கும் புழு

பயன்பாடு : துடிப்பது

கையில் காய்ச்சின பாலை ஊற்றிக்கொண்ட மாலதி வெயிலில் இட்ட புழு போல துடித்தாள்.


45. கல்லில் நார் உரித்தாற்போல

பொருள் : கல்லில் நார் உரிப்பது -கல்லில் இருந்து நார் எடுப்பது

பயன்பாடு : பொய்யாகக் கதை சொல்வது

மாலன் தான் செய்த தவறை மறைக்க கல்லில் நார் உரித்தாற்போல பல கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டான்.


46. தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினாற்போல

பொருள் : தூங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது

பயன்பாடு : அமைதியாக இருப்பவரை தூண்டிவிடுவது

தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினாற்போல, அடிமைப் பட்டு கிடந்த மக்களின் உள்ளத்தில் புரட்சியை விதைத்தன பாரதிதாசனின் கவிதைகள்.


47. பசுத்தோல் போர்த்திய புலி போல

பொருள் : பசுத்தோல் போர்த்திய புலி - பசுவின் தோலைக் கொண்டு மூடியிருக்கும் புலி

பயன்பாடு : சாதுவாக நடிப்பது

பரம சாதுவான பாலன் ஒருநாள் சண்டையில் மிக மூர்க்கமாக நடந்து கொண்டபோதுதான், அவன் பசுத்தோல் போர்த்திய புலி போல என்பது தெரியவந்தது.


48. மீகாமன் இல்லா மரக்கலம் போல

பொருள் : மீகாமன் இல்லா மரக்கலம் - கப்பலை வழிநடத்துபவர் இல்லாத கப்பல்

பயன்பாடு : வழிகாட்டுதல் இல்லாமல் தவித்தல்

கணவன் இறந்த பின் கமலாவின் குடும்பம் மீகாமன் இல்லா மரக்கலம் போல தவித்தது.


49. அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல

பொருள் : அவசரக் கோலம் அள்ளித் தெளிப்பது - நிதானமாக அழகாக போடவேண்டிய கோலத்தை அவசரமாக அள்ளித் தெளிப்பது.

பயன்பாடு : நிதானமாகச் செய்யவேண்டிய செயலை அவசரமாக செய்வது.

முன்பெல்லாம் மூன்று நாட்கள் என்று இருந்தது போய், ஒரு நாள் திருமணத்தில் காலை, மாலை என இருந்ததும் போய் இப்போது காலை மட்டும் அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல என ஆகி இருக்கிறது இக்காலத் திருமண விழா.


50. அடிவயிற்றில் நெருப்பைக் கட்டினாற்போல

பொருள் : அடிவயிற்றில் நெருப்பைக் கட்டுவது

பயன்பாடு : பயம்

இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சென்ற ரமாவிற்கு அடிவயிற்றில் நெருப்பைக் கட்டினாற்போல இருந்தது.


51. இடி ஓசை கேட்ட நாகம் போல

பொருள் : நாகம் - பாம்பு

பயன்பாடு : சீற்றம்

அவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளைக் கேட்ட ராமன், இடி ஓசை கேட்ட நாகம் போல சீறினான்.


52. ஏறவிட்டு ஏணியைப் பிடுங்கினாற்போல

பொருள் : ஏறவிட்டு ஏணியைப் பிடுங்குவது - இறங்குவதற்கு ஏணி கொடுக்காமல் இருப்பது.

பயன்பாடு : பாதியில் தவிக்க விடுவது

தன் வீட்டுப் பூனையை பக்கத்து ஊருக்கு அழைத்துச் சென்று, அங்கேயே விட்டு வந்த சுந்தரத்தின் செயல் ஏறவிட்டு ஏணியைப் பிடுங்கினாற்போல இருந்தது.


53. காதும் காதும் வைத்தாற்போல

பொருள் : காதும் காதும் வைப்பது

பயன்பாடு : ஒருவருக்கும் தெரியாமல்

திருடிய பொருட்களை கொள்ளையர்கள் காதும் காதும் வைத்தாற்போல மறைத்து வைத்தார்கள்.


54. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல

பொருள் : பழம் நழுவிப் பாலில் விழுவது

பயன்பாடு : செய்ய வேண்டிய செயல் சுலபமாக நிறைவேறுவது

காவல் அதிகாரி வீட்டிலேயே திருட வந்த திருடனைப் பார்த்த அதிகாரிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல இருந்தது.


55. போர் முனையிலே ஆயுதம் தேடுதல் போல

பொருள் : போர் முனையிலே ஆயுதம் தேடுதல்

பயன்பாடு : குறிப்பிட்ட பொருட்கள் நிறைய இருக்கும் இடத்திலேயே அப்பொருளைத் தேடுதல்

தலைவலியால் அவதியுற்ற மருத்துவர், அதற்கான மருந்தினை மருத்துவமனையில் தேடியது போர் முனையிலே ஆயுதம் தேடுதல் போல இருந்தது.


56. முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்தாற்போல

பொருள் : முழுப்பூசணியைச் சோற்றில் மறைப்பது - முழுமையான பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைப்பது.

பயன்பாடு : மிகப் பெரிய செயலை மறைப்பது

முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்தாற்போல பூரணி, தான் வேலை இழந்த செய்தியை பெற்றோரிடம் மறைத்தாள்.


57. வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தாற்போல

பொருள் : கடா - விலங்கினத்தின் ஆண்பால் பொதுப்பெயர்

பயன்பாடு : நன்றி மறத்தல்

வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தாற்போல செல்வம், தனது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தான்.


58. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல

பொருள் : வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது

பயன்பாடு : நாசூக்காக

நண்பன் வீட்டிற்கு சென்ற குமார், தனக்கு பசிக்கிறது என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல உணர்த்தினான்.


59. விழலுக்கிறைத்த நீர் போல

பொருள் : விழல் - தேவையற்ற புல்

பயன்பாடு : தேவையற்ற

நவீன் படிப்பதற்காக அவனது தந்தை செய்த செலவுகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீர் போல ஆனது.


60. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல

பொருள் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது

பயன்பாடு : ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது அவருக்கு இன்னும் துன்பம் கொடுப்பது.

கணவனை இழந்து தவித்த வானதிக்கு கடன்காரர்களின் தொல்லை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல இருந்தது.


61. அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழந்தாற்போல

பொருள் : அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழப்பது

பயன்பாடு : புதிதாய் ஒன்று செய்யத் துவங்கி இருப்பதையும் இழப்பது.

அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழந்தாற்போல, கணவன் மனைவி சண்டையில் சமாதானம் செய்யச் சென்ற நண்பர் சுந்தரம், அவர்களின் நட்பை இழந்து திரும்பினார்.


62. ஆகாயத்தில் கட்டிய கோட்டை போல

பொருள் : ஆகாயம் - வானம்; கோட்டை - பெரிய கட்டிடம்

பயன்பாடு: முடியாத ஒன்றைக் கற்பனைச் செய்தல்

தேர்வு நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல், மல்லிகா தான் முதல் மதிப்பெண் வாங்குவதாக ஆகாயத்தில் கட்டிய கோட்டை போல கற்பனை செய்து கொண்டிருந்தாள்.


63. கண்ணில்லார் பெற்றிழந்தாற்போல

பொருள் : கண்ணில்லார் பெற்றிழத்தல் - கண் இல்லாதவர் பெற்று இழப்பது.

பயன்பாடு : தற்காலிக இன்பம்

வறுமையில் வாடிய இரத்தினம் குடும்பத்தினருக்கு, திடீரென்று கிடைத்த அதிர்ஷ்டக் குலுக்கின் பணம் திருடு போனது கண்ணில்லார் பெற்றிழந்தாற்போல ஆனது.


64. நவில்தொறும் நூல்நயம் போல

பொருள் : நவில்தொறும் நூல்நயம் - நூலின் பொருள் கற்கும் போது கற்றார்க்கு இன்பம் சேர்த்தல்

பயன்பாடு : பழக பழக இன்பம் தருவது.

நவில்தொறும் நூல்நயம் போல, பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.


------------------------------------

#உவமைத் தொடர்கள் | #தமிழ் #இலக்கணம் | தரம் 8 - 13 | #உவமைத்தொடர்கள் | Composition phrases | Grade 8 - 13 | Tamil Language Grammar | O L Examination | A L Examination | Tamil Cube | Thamilshshudar | Kalaimahan Fairooz

------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக