📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 1 ஜனவரி, 2025

'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று கற்பிக்கிறார்கள்.. சரிதானா?

 

ஐயம்

---------

'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று சொல்லித் தந்தார்கள். என்றாலும், எனக்குள் சந்தேகம் எழுகிறது. தௌிவுபடுத்துங்கள்...

தௌிவு

-----------

தமிழ்மொழி பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரித்து நோக்குகின்றது.

இவற்றில் செயற்பாட்டை உணர்த்தும் பொருளை தொழிற்பெயர் என்கிறது. அதாவது, ஒரு பொருள் செய்யும் தொழிலைக் குறித்து வரும் பெயர்ச்சொல் 'தொழிற்பெயர்' எனப்படும். 

செயல், செய்கை, செய்தல், செயற்கை என்றெல்லாம் வருவன தொழிற்பெயர்.

'பொங்கல்' என்பது பொங்குதல் என்னும் தொழிற்பெயராகும். இந்தத் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவாகும் உணவினைக் குறிக்கும் போது, தொழிலாகு பெயராக மாறும். மாறாக, பொருட்பெயராக அமையாது. 

சொல்லோடு சொல் புணரும்போது தொழிற்பெயர் புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி முறைமையில் புணர்வதுடன் சில புதிய மரபுகளையும் கொண்டு விளங்கும், இவற்றைப் பொருட்புணர்ச்சி எனலாம்.

சொற்புணர்ச்சியில் தொழிற்பெயரை இரு வகையாகப் பகுப்பர்.
முதனிலையை நோக்கி

  1. முதனிலைத் தொழிற்பெயர்
  2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் - எனவும், விகுதியின் அடிப்படையில்
  3. விகுதி குன்றிய தொழிற்பெயர்
  4. விகுதி குன்றாத தொழிற்பெயர் - எனவும் பகுத்துக்கொளவர்.

மேலும்...
நன்னூல் சூத்திரம் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது.

'வினையின் பெயரே படர்க்கை, வினையால்
அணையும் பெயரே யாண்டுமாகும்' (நன்னூல் - 286)

இங்கு 'வினையின் பெயர்' என்றது தொழிற்பெயராகும். 'வினை' என்பது தொழிலாகும். 

இதற்கேற்ப, 'பொங்கல்' என்பது பொங்குதல் எனும் தொழிலைக் குறித்து வருவதால், தொழிற்பெயராகும். 

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக