தமிழ் இலக்கண வினாக்கள் - அவற்றிற்கான விடைகள் இங்கு இற்றைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தமிழ்மொழி ஆர்வலர்கள். ஏனையோருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தவும்.
உங்கள் வினாக்களையும் இங்கு வினவவும்.
1. தன் வினையாகவும் பிற வினையாகவும் அமையும் சொல் பின்வருவனவற்றுள் எது? 1.எரி 2.உண்
3.ஓடு 4.போடு 5.செய்விடை
1. எரி
விளக்கம்
எரிந்தேன்- தன் எரித்தேன்- பிற
1. நெருப்பு எரிந்தது. (தன்வினை) 2. நெருப்பு எரித்தது. (பிறவினை)
2. பின்வருவனவற்றுள் இடையுயிராக உச்சரிக்கப்படுவது எது?
1. இலை 2. விரல் 3. இடி 4. இனி 5. இது
விடை
3. இடி
விளக்கம்
இகரத்தை அடுத்து ட்,ண்,ள்,ழ், உயிர் ஏறிய றகரம் ஆகிய எழுத்துக்கள் வரின் இகரம் இடை உயிராக ஒலிக்கும்.
3. பின்வருவனவற்றுள் அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்கூட்டம் எது?
1. தடம், மடம், வடம், சடம் 2. குரங்கு, சிங்கம், பாம்பு, வண்டு 3. மண், பாட்டி, தாகம், வயல் 4. சேலை, ஓலை, மூலை, மாலை
விடை
2. குரங்கு, சிங்கம், பாம்பு, வண்டு
4. பின்வருவனவற்றுள் இடைவௌிக்குப் பொருத்தமான விடை எது?
உயர்தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் .......................... வௌிவந்துள்ளது.
1.அறிக்கை 2. சுற்றுநிருபம் 3. விண்ணப்பப்படிவம் 4. நூல்
விடை
2. சுற்றுநிருபம்
5. வானம் முட்ட நிற்கிறானே ஐலசா... வானம் முட்ட நிற்பது எது?
மீனவனா? கடலா? படகா?
விடை
2. கடல்
6. ஈத்திலைக் குப்பை ஈத்திலை என்பது,
1 மூங்கில் இலை 2 ஈச்சம் இலை சரியான விடை எது?
விடை
2. ஈச்சம் இலை
7. பின்வருவனவற்றுள் கூட்டுப் பெயராக அமைவது,
1 வெகுமானம் 2 சன்மானம் 3. தீர்மானம் 4. தன்மானம் 5. வருமானம்
4. தன்மானம்
8. மகர ஈறு கெட்டு வல்லினம் மிகும் புணர்ச்சியில் அவைது.
1. மரம் + கல் 2. பனை + கிழங்கு 3. பழம் + சோறு 4. வட்டம் + கல் 5. மரம் + கொத்தி சு
4. வட்டக்கல்
9. பின்வருவனவற்றுள் வேற்றுமைப் பொருளால் வேறுபடும் தொடர்.
1, வான்மதி 2. உச்சித்திலகம் 3. மணிக்கோபுரம் 4. சுவர்க்கடிகாரம்
விடை
3. மணிக்கோபுரம் (மணிக்கோபுரம் உடைமை வேற்றுமை(மணியை உடைய கோபுரம்)
ஏனைய மூன்றும் இட வேற்றுமை
10. பின்வருவனவற்றுள் குணப்பண்பை உணர்த்தி வேற்றுமை ஏற்காத சொல் எது?
1.உரிச்சொல் 2.குணப்பெயர் 3.தொழிற்பெயர் 4.இடைச்சொல் 5.காலப்பெயர்
விடை -
1. உரிச்சொல்
விளக்கம் -
உரிச்சொல் குணப்பண்பை உணர்த்தும். ஆனால் வேற்றுமை உருபு ஏற்காது .
உ+ம் -
சால, உறு, தவ, நனி, கூர், கழி இவை ஒருகுணம் தழுவியவை. (மிகுதி) ஆனால் வேற்றுமை உருபு ஏற்காது.
அதுபோல "கடி" என்பது உரிச்சொல்லாக வரும்போது பலகுணம் உணர்த்தும். (காப்பு, கூர்மை அச்சம்,புதுமை,மணம்.......) ஆனால் வேற்றுமை உருபு ஏற்காது.
உதாரணம் -
- கடிமனை - காவல்
- கடிவாள் - கூர்மை
- கடிமிளகு - கரிப்பு
- கடிமலர் - சிறப்பு
-------------------------------------------------------
உரிச்சொல் என்றால் என்ன?
பெயருக்கென்றும், வினைக்கென்றும் உரிமை பூண்டு அவற்றின் உரி (தோல்) போலத் தமிழில் கலந்து வரும் சொற்களைத் தமிழர் உரிச்சொல் எனப் பாகுபடுத்திக் காட்டினர். உரிச்சொற்கள் பெயரையோ, வினையையோ குறிப்பவை அல்ல. அவற்றிற்கு உரிமை பூண்டு அவற்றை விளக்குபவை.
11. படி, எழுது, வெட்டு, நேசி, வாழ்த்து போன்ற வினைகளை பொது வினைகளாகக் கருத முடியுமா?
விடை -
1.இவற்றுள் எதுவும் பொதுவினைகள் அல்ல. அனைத்தும் செயப்படுபொருள்குன்றாத வினைகளே.
விளக்கம் -
பொதுவினை என்பது செயப்படுபொருள் குன்றிய வினைக்கும் செயப்படுபொருள் குன்றாத வினைக்கும் அல்லது தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக வரும் அடிப்படை வினைகளாகும். உதாரணம் : எரி, உடை, நனை, கரை. 1. எரி அ) நெருப்பு எரிந்தது. (தன்வினை, செயப்படுபொருள் குன்றிய வினை) ஆ) நெருப்பு காட்டை எரித்தது. (பிறவினை, செயப்படுபொருள் குன்றாவினை) 2. உடை அ) கண்ணாடி உடைந்தது.(தன்வினை, செயப்படுபொருள் குன்றிய வினை) ஆ) கண்ணாடியை உடைத்தேன். (பிறவினை, செயப்படுபொருள் குன்றாவினை) 3. நனை அ) மழையில் நனைந்தேன். (தன்வினை, செயப்படுபொருள் குன்றிய வினை) ஆ) மழையில் உடையை நனைத்தேன். (பிறவினை, செயப்படுபொருள் குன்றாவினை) 4. கரை அ) சீனி கரைந்தது. (தன்வினை, செயப்படுபொருள் குன்றிய வினை) ஆ) சீனியை கரைத்தேன். (பிறவினை, செயப்படுபொருள் குன்றாவினை)
12. சுட்டெரிக்கும் , போதியளவு - இச்சொற்களை பிரித்து தருக.
விடை -
சுட்டு + எரிக்கும், போதிய + அளவு
இன்னும் வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக