📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 2 மார்ச், 2025

உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - கவிதைகள் இரண்டு

    வானவில்

மண்ணுலகு கடல் , மலை அனைத்தும் உள்ளாக்கியே

வளைந்தது வானவில்! என்னெண்ண வண்ணங்கள்!

விண்முழுது கருமணல் அதன்மீது மாணிக்கம்

வீறிடு நிறப்பச்சை, வயிரத் தடுக்குகள்

உள்நிலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும்

உயிரினொடும் அள்ளியே செல்கின்ற தல்லாமல்

எண்ணற்ற அழகினால் இயற்கைவிளை யாடலின்

எல்லை காணேன, அதைச் சொல்லுமா றில்லையே

புதுமைஇது வானிடைக் கண்டஅவ ளோவியம்

போய், முகில் புனலிலே நொடிதோறும் கரைந்ததே

இ(து)அது எனச் சொல்ல ஏலா தொழிந்ததே

இன்பமும் துன்பமும் யாவுமே இவ்வண்ணம்

கதுமெனத் தோன்றிடும் மறைந்திடும் என்பதைக்

கண்ணெதிர்க் காட்டவரும் விண்எழுது கவிதையாம்

அதுநமக் குத்தெரியும் அன்றியும் கவிஞருளம்

அவ்வான விரிவினும் பெரிதென்ப தறிவமே!

                - பாவேந்தர் பாரதிதாசனார்


                -------------------------------

                     

மின்னல்

வானம் நடத்தும் வாணவே டிக்கை

புதுமழை விழாவின் பூமத் தாப்பு

முத்துநூல் உதறல், முகில்துகில் கிழிசல்

கார்அ ரக்கனின் கோணற் சிரிப்பு

நீலச் சகதியில் நௌியும் வெண்புழு

மேகச் சாம்பலில் மின்னும் வெண்தணல்

உரைகலில் மின்னும் வௌ்ளி இரேகை

வினாடியில் வற்றும் வௌிச்ச ஆறு

விண்தோட் டத்தின் வௌ்ளிக் கொடிகள்

மழைச் செய்தி கூறும் சைகை விளக்கு

கருமுகில் இமைகளில் கண்சி மிட்டல்

நீரில் பிறக்கும் நெருப்பு, நம் இயற்கை

கிறுக்கு கின்ற சுருக்கெழுத் திதுவே!

            -வாணியம்பாடி கவிஞர் அப்துர் ரகுமான், எம்.ஏ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக