சித்திரைப் புத்தாண்டிற்கு
பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மாதம் விடுமுறை கிடைத்த சந்தோசத்தில் புத்தகப்பையைத்
தோளில் சுமந்தவாறு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வந்து நின்ற பேருந்தில் ஏறிய
சுமந்திரனுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. ஒரு இருக்கையில் வயதான முதியவர் ஒருவரும்
பக்கத்தே அவரது வயதான மனைவியும் அமர்ந்திருந்தனர். அவ்விரு ஆசனங்களையும் தவிர ஏனைய
அனைத்து ஆசனங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. வழமைக்கு மாறாக இன்று இப்படி இடம்
கிடைத்தது பற்றி அவனால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. வேறு நாட்களில்
நின்றுகொண்டுதான்
பேருந்து புறப்படத் தொடங்கியது.
ஜன்னல் வழியாக கண்களைச் சிமிட்டாமல் பாதையை உற்று நோக்கிக் கொண்டு வந்தான்
சுமந்திரன். கண்டி மாநகரின் பேராறு மகாவலி கங்கையின் அழகை இரசித்துக் கொண்டு
வந்தான். பேருந்து தரிப்பிடத்தில் பேருந்து வந்து நின்றதும் சுமந்திரன் இறங்கிக்
கொண்டான். அவனைத் தொடர்ந்து அந்த வயதான
தம்பதியினரும் தூக்க முடியாமல் ஒரு சாக்குப் பையை சுமந்தவாறு கீழே இறங்கிக்
கொண்டார்கள். சுமந்திரன் தன்னிரு
கண்களையும் சுழற்றியவாறு பேருந்துத் தரிப்பிடத்தை நோட்டமிட்டான்.
நட்சத்திரங்கள் இல்லாத வானம்
எப்படி பொலிவிழந்து காட்சியளிக்குமோ அதேபோல் சனநடமாட்டம் இல்லாத மாநகரமாக கண்டி
மாநகரம் வெறிச்சோடிக் கிடந்தது. தொடர்ந்து வானத்தை உற்று நோக்கினான். கரிய
மழை மேகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருளடைந்து போயிருந்தது. பாதையின் ஆங்காங்கே
இருந்த குன்றுக் குழிகளில் சேற்று நீர் நிறைந்த இருந்தன. தங்க நகரம் தனது பொலிவை
இழந்திருந்தது.
தனது பக்கத்தே குசுகுசு என பேச்சுக் குரல் கேட்ட சுமந்திரன் அந்த வயதான தம்பதியினரின் பக்கம் திரும்பி, அவர்கள் என்னதான் கதைக்கிறார்கள் எனப் பார்த்தான்.
‘ஏய் மாலா! இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரம்தான் இருக்கு... அதற்குள்ள நாம தங்க நகைகள வாங்கியாகணும்’ எனக் கூறினார் முதியவர். அதற்கு அவரது மனைவி,
‘ஆமாங்க... திருமணம் என்று
வந்தாலே இப்படித்தானுங்க. நான் ரெண்டு நாளா கண்ணயரவே இல்லங்க... ‘ என்று கூறி
கண்ணீரைத் தாரை தாரையாகக் கொட்டினாள்.
இருவரையும் வைத்த கண்வாங்காமல்
பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரன் அவர்களை நெருங்கி, அவர்களின் துயரத்திற்கான காரணத்தைக்
கேட்டான். அவர்களின் மூத்த மகளுக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணமாம். மகளுக்குக்
குறைந்தது ஒரு பவுண் தங்கமாவது வாங்க வேண்டுமாம். இப்போது அவர்களின் கைகளில்
அவ்வளவு தொகைப்பணம் இல்லையாம். அதுதான் அவர்களது துயரத்திற்கான காரணம் என்பதை
அறிந்து கொண்டான் சுமந்திரன்.
சுமந்திரனுக்கு அந்த வயோதிகப்
பெற்றோரின் துயரைத் தாங்க முடியவில்லை. உடனடியாக தன் புத்தகப் பைக்குள்
கையைவிட்டுத் துளாவி, ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து அவர்களின் கைகளுக்குள்
திணித்தான். அது அவனது தாய்க்காக அவன் வாங்கிய சங்கிலி. அதனை முதலில் ஏற்க மறுத்த
அந்தப் பெற்றோர் பின்னர் சுமந்திரன் பலவந்தமாக அதனை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கவே, வாங்கிக் கொண்டார்கள். அவர்களின்
வழிச் செலவுக்காக மேலும் ஐந்நூறு ரூபாவையும் அவர்களது கைகளுக்குள் திணித்தான்.
‘பத்திரமாக போய் வாங்க’ என்று வழியனுப்பிவிட்டு, அருகே வந்த முச்சக்கர
வண்டியில் ஏறிப் பயணிக்க முயன்ற சுமந்திரனை நிறுத்தி ஆலிங்கனம் செய்து கொண்டார்
அந்த முதியவர். முதியவரின் கட்டித்
தழுவலோடு அவனது சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின.
-----
அன்றொருநாள்.... வைத்தியசாலைக்
கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த சுமந்திரன் மனம் நிறைந்த கவலையினால் வைத்தியசாலையின்
கூரை முகட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இரவு
முழுவதும் கண்விழித்திருந்த தாய், அவனிடம் ‘என்ன சுமந்திரா! என்ன... எப்படிப்பா
இருக்கிறாய்?’ எனக் கேட்டாள்.
சிந்தனை ஓடத்தில் மிதந்தபடி தாயை ஏறிட்டு நோக்கிய அவன், இரண்டு
மணித்தியாலங்களுக்கு முன்னர் தனக்கு என்ன நடந்தது என்பதைச் சிந்திக்கத்
தொடங்கினான்.
சுமந்திரன் பத்தாம் வகுப்பு
படிக்கும் காலத்திலிருந்தே அவனுக்கு இடைக்கிடையே இடுப்பு வலி வருவதும் போவதுமாக
இருந்தது. ஆனால் இன்று வழமைக்கு மாறாக சுமந்திரனுக்கு பயங்கர வலி எடுத்தது. ஏதோ
என்னவோ என்று அலறி அடித்துக் கொண்டு அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்குக் கொண்டு
சென்று அங்கு அனுமதித்தனர்.
அவனுக்கு அருகே அவனது அப்பாவும்
வைத்தியரும் ஏதோ கதைத்துக் கொண்டிருப்பதை அவதானித்தான் சுமந்திரன். அப்பா
முகத்தைத் தொங்கப்போட்டவாறு அம்மாவிடம் சாடையாக ஏதோ சொன்னார். தாயாரின்
கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்
வழந்தோடியது. அந்த இரத்தச் சிவப்புக் கண்களுடனயே தனது மகனை ஏறிட்டுப் பார்த்தார்.
நடப்பது என்னவென்று தெரியாமல் தலை கால் புரியாது பதறிப்போனான் சுமந்திரன்.
தாயை அழைத்து என்ன விடயம்
என்பதைக் கேட்டான். என்ன சொல்வதென்று தெரியாதவளாய் சுமந்திரனின் தாயார் அவனிடம்
திக்கித் திக்கி அவனிடம் ‘சுமந்திரா, உன்ர
இரண்டு கிட்னிகளும் முக்கால் பகுதியே கரைந்து விட்டதாம், மிகுதியாக
இருக்கின்ற கால் பகுதிதானாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது’ என்று சொன்னதும்
இடியோசை கேட்ட நாகம் போல மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டான் அவன். மயக்கம்
தெளிந்து பார்த்ததும் அவனது பெற்றோர் அவனது இருபுறமும் கண்ணீர் மல்க நின்றிருந்தனர்.
‘மகனே
சுமந்திரா, எந்தக் கவலையும் வேண்டாம் மகன். நீ நீண்ட காலம் வாழ்வயடா மகனே... நீ
நீண்ட காலம் வாழ்வாய்... எனது சிறுநீரகங்களில் ஒன்றை உனக்குத் தருவன் மகன் நான்..
கவலைப்படாதே’ என்று சுமந்திரனின் முகத்தைத் தடவியவாறு அவனை ஆறுதல்
படுத்தினார் சுமந்திரனின் அப்பா.
‘அப்பா...
அப்பா.....’ என்ற சொற்களைச் சொல்வதல்லாமல் அவனால் வேறு எந்த
வார்த்தைகளையும் சொல்ல முடியவில்லை.
தந்தையின்
விருப்பத்தை வைத்தியருக்கு அறிவித்ததும், வைத்தியர் சிறுநீரகப் பொருத்தப்பாட்டைப்
பரிசோதிவிட்டு, பொருந்துகின்றது என்று சந்தோசமான முறையில் கூறிவிட்டு, அவர்களின்
தலையில் பாராங்கல்லொன்றைப் போல சுமையொன்றையும் சுமத்தினார். அவனது சிறுநீரக
மாற்றுச் சிகிச்சைக்காக ஐம்பது இலட்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும் வைத்தியர் சொன்னார்.
சுமந்திரன்
இதைக் கேட்டதும் மனம் உடைந்து போனான். அவனது குடும்பத்திலுள்ள முழுச் சொத்தையும்
விற்றாலும் கூட இது இந்த தொகைக்கு ஈடாகாது. அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு, தனது
தந்தையைப் பார்த்து, ‘அப்பா, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்த என்னால் இழக்க வேண்டிய தேவை
இல்லையப்பா... ஒப்பரேசனுக்குத் தேவையான பணமும் எங்களிடம் இல்லைதானே அப்பா...
நீங்களும் அம்மாவும் நிம்மதியாக வாழ்ந்தாலே அதுவே போதுமப்பா...’ என்று பச்சிளம்
குழந்தை ஒன்று கதறிக் கதறி அழுவது போல அழுதான்.
சற்றுநேரத்திற்குள்
அவர்கள் மூவரும் நின்றிருந்த அந்த கட்டில் பக்கம் வந்த வைத்தியர், இன்னும் ஒரு
வாரத்தில் அறுவைச்சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் அதற்கான பணத்தை அவசரமாக ரெடி
பண்ணுமாறும் கூறிவிட்டுச் சென்றார். சற்று நேரத்திற்குள் சுமந்திரனின் பெற்றோர்
அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
----
சரியாக
ஒரு வாரம் கழித்து, வைத்தியசாலைக்குப் பரிசோதனைக்குச் சென்ற சுமந்திரன் எட்டு
மணித்தியாலங்களின் பின்னர் கண் திறந்து பார்க்கும்போது, அவனைப் புடைசூழ பல
வைத்தியர்கள் நின்றிருந்தனர். அவனது தலைக்கு மேலாக இராட்சத இயந்திரங்கள் இயங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டான். தனது இடுப்புப் பகுதி மீண்டும் வலியெடுக்கவே அவ்விடத்தை
உன்னிப்பாகக் கவனித்தான். அவ்விடத்தில் பெரிய கட்டுப் போடப்பட்டிருப்பதை அவன்
அவதானித்தான். தனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருப்பதை உணர்ந்து கொண்டான்.
வலியோடு
தன் தந்தையைத் தேடினான். தனக்கு அருகிலே ஒரு கட்டிலில் தந்தையும் பெரும் கட்டுடன்
இருப்பதைக் கண்டான். அவனால் விம்மி விம்மி அழுவதைத் தவிர தந்தையைக் கட்டி
முத்தமிடக்கூட இயலவில்லை.
சற்று
நேரத்திற்குள் சுமந்திரனின் தந்தை நினைவு திரும்பி எழுந்தார். உடனே மகனைப்
பார்த்து, ‘சுமந்திரா...! சுகந்தானே!’ என்று கேட்டதும்
சுமந்திரனால் எதுவும் பேசமுடியவில்லை. அவனது நாக்குத் தடுமாறியது. வாய் குழறியது.
அவனது கண்களில் ஆயிரமாயிரம் நன்றிப் பூத்தூவல்கள் விரிந்திருந்திருந்தன.
இரண்டு
வாரங்கள் இருவரும் வைத்தியசாலையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் கூற,
அங்கேயே தந்தையும் மகனும் தங்கி ஓய்வெடுத்தார்கள். அந்த இருவாரங்களும்
சுமந்திரனின் தாயார் பட்டபாடு தனிப்பாடு... அதைப்பற்றிப் பாடுவதற்கு ஆயிரம் ஆயிரம்
கவிஞர்கள் வந்தாலும் ஈடாகாது.
இரண்டு
மாதங்களின் பின்னர் மீண்டும் அப்பாவும், மகனும் காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக
வர வேண்டும் என்று வைத்தியர் குறிப்பிட்டிருந்தார். அதனையும் கருத்திற் கொண்டு
வீட்டுக்குச் சென்ற மூவரும் இரண்டு மாதங்கள் மிகவும் சந்தோசமாக வீட்டில்
இருந்தார்கள்.
-----------
நாட்கள் விரைந்து ஓடின. அந்த குறிப்பிட்ட நாளும் வந்தாயிற்று. அது ஒரு
ஞாயிற்றுக்கிழமை. புகையிரத நிலையம் மக்கள்
வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. அவர்கள் மூவரும் புகையிரத மேடையில் புகையிரதத்தின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.
எதேச்சையாக தனது தாயின் கழுத்தைப்
பார்த்துவிட்டான் சுமந்திரன். அவளது கழுத்தில் இருந்த மாலையைக் காணவில்லை... அவளது
காதுகளில் இருந்த தோடுகளையும் காணவில்லை. பதறிப் போனான் அவன். தன் தாயிடம் அவை
எங்கே என்று கேட்க, அவது அப்பா,
‘சுமந்திரா... அம்மா அவற்றை
விற்றுவிட்டாள்.. உன்னைக் குணப்படுத்துவதை
விடவும் அதில் என்னதான் எங்களுக்கு பெறுமதியிருக்கிறது? இப்போது உன்னை இந்த
நிலையில் காண்பதை விடவுமா தங்கம் பெறுமதி
சுமந்திரா!’ என்றார்.
அவர்கள் ஏற வேண்டிய புகையிரம்
வரும் சத்தம் கேட்டதும், சுமந்திரன் அதனைப் பார்ப்பதற்காக எட்டினான். எட்டியவன்
கால் தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டான். புகையிரதமும் அருகில் நெருங்கிவிட்டது.
‘அம்மா... ‘ என்று கூக்குரலிட்ட சுமந்திரனைக் காப்பாற்றுவதற்காக அவனது அப்பா
மின்னல் வேகத்தில் சுழன்று அவனை தண்டவாளத்திலிருந்து மேலே ஏற்றிவிட்டார்.
தொடர்ந்தும் தன் பிள்ளையில் தன்
உயிரையே தந்து காப்பாற்றுகின்ற அப்பாவைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். அப்பாவைக்
காணவில்லை. பதற்றத்தோடு தன் தாயைத் தேடினான். அங்கு அம்மாவையும் காணவில்லை.
பக்கத்தே இருந்த ஒருவரிடம்
சுமந்திரன் தனது பெற்றோர்களைப் பற்றிக் கேட்டான். அவர்கள் சொன்ன பதில் அவனைத்
திக்குமுக்காட வைத்தது. சுமந்திரனைக் காப்பாற்றும் வேகத்தில் அவனது தந்தை
தண்டவாளத்தில் விழுந்து விட்டாராம். அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற அவனது
தாயையும் ஈவிரக்கமற்ற கொடூர புகையிரதம் காவு கொண்டு விட்டதாம்.
------
சிந்தனை சிறகடிக்கவும் கண்ணீர் மல்கவும் நின்ற சுமந்திரன், இன்று பெற்றோரின்
விருப்பின்படியே படித்துப் பட்டதாரியாகியிருக்கின்றான். பெற்றோரின் நினைவாக நூறு
அநாதைச் சிறுவர்களைத் தத்தெடுத்து, அநாதை ஆச்சிரமம் நடாத்தி வருகின்றான்.
(யாவும் கற்பனை)
- ஹாலித் பைரூஸ்
தரம் - 11 (2024)
மாறை / அஸ்ஸபா மகா வித்தியாலயம்,
மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகம.
------------------------------
கதை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
-----------------------------------------
Khalid Fairooz | Short Story | Thamish Shudar | thamilshshudar.com
-----------------------------------------
Nice try Halid, keep it up
பதிலளிநீக்குWeldon
பதிலளிநீக்கு