📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 16 ஜூலை, 2025

'தெற்கில் உதித்த சூரியன்' M H M எம்.எச்.எம். ஷம்ஸ் | THAMILSH SHUDAR

 இலங்கை கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தினால் தரம் 10 - 11 மாணாக்கருக்காக வௌியிடப்பட்டுள்ள, தமிழ் இலக்கிய நயம் பாடப்புத்தகத்தின் 85 ஆம் பக்கத்தில் பன்முக எழுத்தாளர் திரு. எம்.எச்.எம். ஷம்ஸ் பற்றிய படம்  கொடுக்கப்பட்டு, அவர் பற்றியும் குறிப்புகள் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளது. 
அவர் பற்றி மாணாக்கரும், ஆசிரியர் பெருந்தகைகளும் அறிந்துகொள்ளுமுகமாக 'தமிழ்மணி அஷ்ரப் ஷிஹாப்தீனின் கட்டுரை இங்கு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. 

- தமிழ்ச்சுடர்.கொம்

'தெற்கில் உதித்த சூரியன்'

மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.


20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு

வைக்கப்பட்டுள்ளது.
ஓர் ஆசிரியராக, கவிஞராக, கலைஞராக, சிறுகதையாளராக, நாவலாசிரியராக, பாடலாசிரியராக, பாடகராக, பத்திரிகை ஆசிரியராக, சமூகப்போராளியாக என்று ஏகப்பட்ட பக்கங்களுடன் ஓயாமல் உறங்காமல் உழைத்த சகலகலா விற்பன்னர்தான் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள்.
ஒரு தனிமனித இயக்கமாக நின்று சமூகத்தளத்திலும் இலக்கியத் தளத்திலும் இவரைப் போன்று இயங்கிய ஒருவரைக் கடந்த காலமும் கண்டிருக்கவில்லை, நிகழ்காலமும் காண்பதாய் இல்லை. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் இன்று முஸ்லிம் சமூகத்திலிருந்து குழு ரீதியான முறைமையிலேயே பதில் வழங்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது. வாழ்ந்த காலம் முழுவதும் இதை அவர் தனியொருவனாய்த் தைரியமாய்ச் செய்து வந்தார்.

அவர் ஈடுபட்ட துறைகள் எல்லாவற்றிலும் துலங்கினார். அவர் எழுதிய 'வெண்புறாவே' பாடல் அழியா வரம் பெற்றது. தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாத ஆக்கங்களை அவர் தனது 'அஷ்ஷூரா' பத்திரிகையில் பிரசுரித்து என்னைப் போன்ற வர்களை ஊக்கப்படுத்தினார். தினகரன் பத்திரிகையில் 'புதுப் புனல்' என்ற பக்கத்தின் மூலம் நூற்றுக்கணக்கான இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வளர்த்தெடுத்தார்.

சமூகத்தை ஏமாற்றிப் பிழைத்தல், மார்க்கத்தை வைத்து வயிறு வளர்த்தல், ஆஷாடபூதித் தனம், பெண் கல்வி மறுப்பு, சிந்திக்காத மூடப் போக்குகள் போன்றவற்றை நேரடியாகச் சாடினார். ஒரு சமூகத்தின் அடையாளம் மார்க்கத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை, அதன் கலை, கலாசார அம்சங்களிலும் தங்கியிருக்கிறது என்பதை மிக உறுதியாக அவர் நம்பினார். அதற்காகச் செயல்பட்டார். மரணத்துக் குப் பிறகும் கலை, இலக்கியத்தோடு சார்ந்த சமூகாபிமானிகளுக்கு ஒரு சிறந்த முன்னோடியாகவும் கையிலெடுக்கத் தக்க ஆயுதமாகவும் அவரை நினைக்கத் தோன்றுவது இதனால்தான். சமூகத்தில் குழப்பத்தையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தியவர்களைச் சாடியதால் அவரையே ஒரு குழப்பவாதி என்று சித்தரிக்க முயன்றது பெரிய வேடிக்கை! ஓர் அறைக்குள் இடது புறம் பத்திரிகைக் குவியல், வலது புறம் புத்தகக் குவியல், மேசையில் விரித்தபடி இருக்கும் வெள்ளைத்தாள் களும் பேனைகளுமாய் அமர்ந்திருந்து ஷம்ஸ் அவர்கள் சமூகத்தில் கலை, இலக்கியத்தைப் பயன்படுத்தி, அதிர்வுகளையும் தாக்கங்களை யும் ஏற்படுத்தினார். எல்லாவற்றையும் விடச் சிந்தனை மாற்றத்தை நோக்கிச் சமூகத்தை அழைத்துச் செல்ல அவர் மிகவும் பிரயாசைப் பட்டார். மனிதாபிமானத்தையும் சகோதரத்துவத்தையும் சக வாழ்வையும் கட்டி எழுப்புவதற்குக் கலையும் இலக்கியமும் பெரும் பங்களிப்புச் செய்யக் கூடியவை என்று நம்பினார். அப்படியே இயங்கினார்.

புதிய தலைமுறைக்கு எம்.எச்.எம். ஷம்ஸ் என்ற ஆளுமையை யும் அவர் ஏற்படுத்திய தாக்கங்களையும் பற்றிப் பெரிய அளவில் தெரியாது. அவரது 'கிராமத்துக் கனவுகள்' நாவலும் தற்போது வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்புமே அன்னாரின் இலக்கியச் சொத்துக்களாகச் சமூகத்துக்குக் கிடைத்திருக்கின்றன. பல நூல்களை வெளியிடும் அளவு எழுத்தும் பல இயக்கங்களின் செயற்பாடும் தன்னகத்தே கொண்ட அவரை முழுமையாகச் சமூகத்துக்கு முன் கொண்டு வர வேண்டுமானால் அவரது அனைத்துப் படைப்புகளும் (முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக எழுதியோருக்கான அவரது மறுப்புக் கட்டுரைகள் உட்பட) வெளிக்கொண்டு வரப்படல் வேண்டும். அவற்றை வெனிக் கொண்டு வரும் கடமை அவரது பிறந்த ஊருக்கும் சமூகத்துக்கும் உரியது என்று அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

மர்ஹூம் ஷம்ஸை அறியாதவர்கள், அவருடன் பழகாத வர்கள் அவரது செயற்பாடுகளையும் இயங்கியலையும் பார்த்து, அவரைக் கடும் கோபக்காரராக, இடைவெளி வைத்துத் தன்னைத் தனித்துவப்படுத்தும் ஒரு கனவானாகக் கற்பனை செய்யக் கூடும். அப்படியெனில் அந்தக் கற்பனை மிகவும் பிழையானது. அவரது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் அவர் சொல்வதைப் பாருங்கள்... 'நான் என் மனுஷியின் பெயரிலேயே சிறுகதை எழுதினேன். நான் பாஹிராவைக் கைப்பிடித்த புதிதில்தான் 'இன்ஸான்' வெளிவந்தது. கல்யாணப் பரிசு படத்தில் தங்கவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே மனுஷியின் பிரார்த்தனை!'
------------------
நன்றி - தமிழ் மாமணி அஷ்ரப் சிஹாப்தீன்
"எனக்குள் நகரும் நதி”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days